கேரள பெண் மந்திரியிடம் லஞ்ச ஒழிப்பு விசாரணை!

Sunday January 07, 2018

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக போலி ஆவணங்களை கொடுத்து அரசிடம் இருந்து மோசடியாக பணம் பெற்றதால் கேரள பெண் மந்திரியிடம் லஞ்ச ஒழிப்பு காவல் துறை  விரைவில் விசாரணை நடத்த உள்ளது.

கேரளாவில் முதல்- மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.

கடந்த சட்டசபை தேர்தலின் போது அப்போது ஆட்சியில் இருந்த உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் அரசின் மீது சோலார் பேனல் ஊழல் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து தேர்தல் பிரசாரம் செய்து கம்யூனிஸ்டு வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தது.

இதனால் கம்யூனிஸ்டு ஊழலற்ற ஆட்சியை மக்களுக்கு கொடுக்கும் என்று பினராயி விஜயன் உறுதி அளித்திருந்தார். ஆனாலும் பினராயி விஜயன் மந்திரிசபையில் இடம்பெற்றுள்ள மந்திரிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கு ஆளாகி வருகிறார்கள். உறவினர்களுக்கு மின்வாரியத்தில் பதவி வழங்கியதாக புகார் எழுந்ததால் மந்திரி பதவியை ஜெயராஜன் ராஜினாமா செய்தார். இதேபோல மற்றொரு மந்திரி மற்றும் எம்.எல்.ஏ. மீதும் புகார் எழுந்தது.

இந்த நிலையில் கேரள சுகாதாரத்துறை மந்திரியாக இருக்கும் சைலஜா தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளார். மந்திரி சைலஜா மற்றும் அவரது கணவர் பாஸ்கர், தாயார் ஆகியோர் சமீபத்தில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் மருத்துவ சிகிச்சை பெற்றனர். அதுதொடர்பான ஆஸ்பத்திரி பில்களை மந்திரி சைலஜா அரசிடம் சமர்ப்பித்து சிகிச்சை செலவு தொகையை பெற்றார். சைலஜாவின் கண் மருத்துவத்திற்கு ரூ.28 ஆயிரத்து 800 செலவானதாகவும், கணவர் மற்றும் தாயாரின் மருத்துவ செலவுக்கு ரூ.3 லட்சத்து 90 ஆயிரத்து 250 செலவானதாகவும் கூறி அவர் அதற்குரிய பணத்தை அரசிடம் இருந்து பெற்றுள்ளார்.

மந்திரி சைலஜா ஆஸ்பத்திரி பில்களில் மோசடி செய்து போலியாக ஆவணங்களை இணைத்து அரசிடம் இருந்து பணம் பெற்றுள்ளதாக பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுரேந்திரன் குற்றம் சாட்டினார். மேலும் இது தொடர்பாக அவர் லஞ்ச ஒழிப்பு போலீசிலும் புகார் செய்துள்ளார்.

இதைதொடர்ந்து இந்த புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். மேலும் லஞ்ச ஒழிப்பு காவல் துறை சூப்பிரண்டு பைஜு இந்த புகார் தொடர்பாக மந்திரி சைலஜாவிடம் விரைவில் விசாரணை நடத்த உள்ளார்.

தன் மீதான குற்றச்சாட்டு பற்றி மந்திரி சைலஜா கூறும் போது மருத்துவ சிகிச்சைக்காக அரசிடம் இருந்து பணம் பெற்றது தொடர்பாக நான் எந்த தவறும் செய்யவில்லை. சட்டபேரவை உறுப்பினர் ஒருவர் ஆஸ்பத்திரி செலவு செய்ததற்கு எவ்வளவு பணம் பெற முடியுமோ அதைதான் அரசிடம் இருந்து பெற்றுள்ளேன். அதற்கு முறையான ஆவணங்களையும் நான் தாக்கல் செய்துள்ளேன் என்றார்.

கேரள பெண் மந்திரி மீதான புகார் மற்றும் அது தொடர்பாக லஞ்சஒழிப்பு போலீஸ் விசாரணை ஆகியவை தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வருகிற 22-ந்திகதி தொடங்க உள்ள கேரள சட்டசபை கூட்டத்தில் இந்த விவகாரத்தை கிளப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டு உள்ளதால் சட்டசபை கூட்டத்தில் கடும் வாக்குவாதம் நடைபெறும் சூழ்நிலையும் உருவாகி உள்ளது.