கேள்விக் குறியாகும் சிறீலங்காவின் வரிச்சலுகை! - சோழகரிகாலன்

April 20, 2017

ஐரோப்பிய ஒன்றியம் சிறீலங்காவிற்கு வழங்கவுள்ள GSP+ வரிச் சலுகையானது விவாதப் பொருளாகி உள்ளது. இந்தச் சலுகையை வழங்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக சபையின், அனைத்துக் கட்சிகளின் ஒருங்கிணைப்பாளர்கள், வரிச்சலுகைக்கான பொறுப்பாளர்களான ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் ஆசியாவிற்கான பொறுப்பை வகிக்கும் ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர், முன்னெப்பொழுதும் இல்லாத அளவிலான ஓர் அழுத்தத்தை, சிறீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது மேற்கொண்டுள்ளனர். இந்த அழுத்தத்தில் பல நிபந்தனைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

சிறீலங்காவின் தொடர் இனப்படுகொலைக்கான நீதி, தமிழர் நில அபகரிப்புக்கள், காணமற்போன உறவுகள் என தாயகத் தமிழ் மக்களும், புலம்பெயர்ந்த தமிழ் மக்களும் சாட்சியங்களை ஆதாரமாக வைத்து தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்தப் போராட்டங்களை சிறீலங்கா அரசு பெரிதுபடுத்தாத அதேவேளை, அந்தந்த நாட்டு அரசாங்களும் பெரிதாகக் கணக்கில் எடுக்காமல் இருந்துவரும் நிலைமைகள் போராடும் மக்களிற்கு வேதனையளித்து வருகின்றது. ஆனாலும், பாராளுமன்றக் குழுக்களுடன் ஒவ்வொரு நாட்டின் மக்கள் பேரவைகளும் மக்கள் அமைப்புக்களும் சந்தித்துப் பேசுவதுடன் ஆவணங்களைச் சமர்ப்பித்தும் அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஆனால் இதற்கெல்லாம் இல்லாத ஓர் அழுத்தம், தங்களது வரிச்சலுகையைச் சிறீலங்காவிற்கு வழங்குவதில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் அந்நாட்டின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்காவிற்கான நிபந்தனைகளின் இறுதிக் கால அவகாசம், ஐரோப்பிய ஒன்றியத்தின் மூடப்பட்ட கலந்தாய்வில் எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகதி முடிவு செய்யப்பட உள்ளது. இந்தக் கால எல்லைக்கான தீர்மானம், ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற உறுப்பினர்களால் வாக்களிக்கப்பட உள்ளது. ஐரோப்பியப் பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள், சிறீலங்காவிற்கான வரிச் சலுகையினை நிராகரிக்கும் முடிவில் உள்ளதாக, வரத்தக சபையின் பாராளுமன்றக் குழு தெரிவித்துள்ளது. இதனைக் கொழும்பின் டெலிகிராப் பத்திரிகையும் உறுதி செய்துள்ளது.

இதன் ஆரம்பகட்ட நடவடிக்கையாக, ஐரோப்பிய ஒன்றித்தின் வரிச்சலுகைச் சட்டம் 978/2012 இன் கீழ், சிறீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவின் பிரதமர் இல்லத்திற்கு கடிதம் ஒன்று கடந்த வாரம் அனுப்பப்பட்டுள்ளது. சிறீலங்காவின் மனித உரிமை மீறல்கள்ICCPR, CRCW, CAT ஆகிய பிரிவுகளில் மீறப்பட்டதனால், 2010 ஆம் ஆண்டு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையானது சிறீலங்காவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. 2015 ஆம் ஆண்டின் ஆட்சி மாற்றத்தின் பின்னர், சிறீலங்கா இந்த வரிச்சலுகையை மீண்டும் பெறுவதற்கு பெரு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. அத்துடன் தங்களுக்கு இந்த வரிச்சலுகை கிடைக்கும் என்றும் சிங்கள மக்கள் மத்தியில் நம்பிக்கையும் வெளியிட்டுவருகின்றது.

தங்கள் ஆட்சியில் மனித உரிமை விடயங்கள் முன்னேறி உள்ளதாகக் காட்டிக்கொண்டு, இந்த விண்ணப்பத்தை சிறீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்துள்ளார். தாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச் சலுகைக்கான 27 சர்வதேச யாப்பு விதிகளையும் கடைப்பிடிப்பதாகவும் - தங்களது அரசாங்கம், இந்த விதிகளிற்கான முனைப்புடன் செயற்படுவதாகவுமே சிறீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது விண்ணப்பத்தில் தெரிவித்திருந்தார்.

ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக சபை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், இதனை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. சிறீலங்காவினால் வழங்கப்பட்ட வரிச்சலுகை விண்ணப்பம், ஐரோப்பிய ஒன்றிய ஆணையகத்தினால் ஆராயப்பட்டு, சிறீலங்காவிற்கு வரிச்சலுகை வழங்கலாம் என்ற முடிவிற்கு வந்திருந்தது. ஆனால் ஐரோப்பிய ஆணையத்தின் முடிவுகளை நிராகரித்து மீண்டும் பரிசீலனை செய்யும் அதிகாரம் கொண்ட ஐரோப்பியப் பாராளுமன்றம், சிறீலாங்காவிற்கான விண்ணப்பத்தைக் கையில் எடுத்துக் கொண்டுள்ளது.

சிறீலங்காவின் மனித உரிமைகள் முன்னேற்றத்திற்கான செயற்பாடுகளை எட்டுவதற்கான முனைப்புடன், ஐக்கிய நாடுகள் சபையின் பொறிமுறைக்குள் சிறீலங்கா வந்திருப்பதை ஐரோப்பியப் பாராளுமன்றம் வரவேற்றிருந்தாலும், பல முக்கிய மனித உரிமை மீறல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனாலும் ஐக்கியநாடுகள் சபையின் விசாரணைக் குழுவினரின் பிரதிநிதிகளைச் சிறீலங்காவிற்குள் அனுமதிப்பதாக வழங்கப்பட்ட உறுதியையும் இக்கடிதம் மீண்டும் வலியுறுத்தி நினைவூட்டி உள்ளது. கடந்த டிசம்பர் 2016 இலும், மார்ச் 2017 இலும் சிறீலங்காவிற்கான வரிச்சலுகை தொடர்பான விவாதங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பல முக்கிய விடயங்கள் கருத்தில் கொள்ளப்பட்டது.

முதலாவதாக, இன்னமும், தங்கள் உறவுகள் 2009 ஆம் ஆண்டில காணமல் போனதற்காகவும், சிறீலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, மற்றும் சரணடைந்த உறவுகளிற்கான எந்தவிதமான பதிலையும் சிறீலங்கா வழங்காமல் இருக்கும் நிலையில், மக்கள் பேராட்டம் நீட்சியாகத் தொடர்ந்து வருகின்றது. இந்தப் பிரச்சனைகள் ரணில் விக்கிரமசிங்காவிற்கு வழங்கப்படும் இறுதிக் கால எல்லைக்குள், தீர்க்கப்பட வேண்டும் என நிபந்தனை இடப்பட்டுள்ளது.

அடுத்ததாக, காணமற் போக வைக்கப்பட்டவர்களின் உண்மை நிலை அவர்களின் உறவினர்களிற்கு வழங்கப்படல் வேண்டும். சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டிருந்தால் அதற்கான போர்க்குற்றம் மற்றும் மனித உரிமைகள் மீறல் குற்றத்தை அரசாங்கம் எற்றுக் கொள்ள வேண்டும். அப்படி நடத்தப்பட்டிருந்தால் தானகவே சிறீலங்கா வரிச் சலுகைக்கான தகுதியை இழக்கும்.

அடுத்ததாகப் பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் குற்றவியற் சட்ட அமைவு (CCPA)  போன்றவை மனித உரிமைகளிற்கு விரோதமாகவே உள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட்டு, குற்றவியல் சட்ட அமைவானது சர்வதேச நியமங்களிற்கு உட்பட்டதாக மேம்படுத்தப்படல் வேண்டும். இதுவும் இந்தக் குறிக்கப்பட்ட கால எல்லைக்கள் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும் என, உயர்ஸ்தானிகர் சையத் அவர்களின் இறுதி அறிக்கையின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்க்குற்றம் மற்றும் மனித உரிமைகள் மீறல் ஆகியவற்றில் ஈடுப்பட்ட குற்றவாளிகள் மற்றும் இராணுவத்தினர் தண்டிக்கப்படல் வேண்டும். இவர்கள் தண்டனைகளிற்கு அப்பாற்பட்டவர்கள் என்ற நிலை உடனடியாக மாற்றப்படல் வேண்டும். (எந்தவொரு கட்டத்திலும் இராணுவத்தினர் மீது விசாரணை மேற்கொள்ளப்படமாட்டாது என சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் சந்திரிகா குமாரதுங்க முதல் தற்போதைய ஆட்சியாளர்கள் வரை தெரிவித்துவரும் நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் இவ்வாறான ஒரு கருத்தை வலியுறுத்தியுள்ளது கவனிக்கத்தக்கது)

பாலியல் குற்றங்கள், பாலியல் அடிப்படையிலான வன்முறைகள், ஆகியவை எதுவுமே இன்னமும் நீதிமன்ற விசாரணக்கு உட்படுத்தப்படாமலே உள்ளது. பாலியல் தொடர்பான குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டமை உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தப்படல் வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. இவை உடனடியாக நிறைவேற்றப்படாவிட்டாலும் அதற்கான உறுதியான கால எல்லை உறுதியாக சிறீலங்காவினால் வழங்கப்படல் வேண்டும். முதலில் இதற்கான நடவடிக்கைகளை சிறீலங்கா மேற்கொள்ள வேண்டும். இது இந்தக் காலவரம்பிற்குள் நிறைவேற்றப்படாவிட்டால் வரிச்சலுகை வழங்கப்பட்டாலும் உடனடியாகப் பறிக்கப்படும். ஆனால், வரிச்சலுகை வழங்குவதற்கு முன்னர் உடனடியாகப் பயங்கரவாதத் தடைச்சட்டமும், குற்றவியல் சட்டமும் மாற்றப்பட்டே ஆகவேண்டும் என்றே கடுமையான நிபந்தனையும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

27 ஜி.எஸ்.பி சட்ட மூலங்களிற்குச் சிறீலங்கா தகுதியடையும் என்ற நம்பிக்கை, ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினர்களிற்கு இல்லாமையினாலேயே இதனை எதிர்த்து நிராகரிக்கத் தயாராகி உள்ளனர். 25ம் திகதி வாக்கெடுப்பு இதனைத் தெரிவிக்கும் என்ற நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதம் Christofer FJELLNER, Sajjad KARIM, Agnes JONGERIUS, Marielle de SARNEZ, David MARTIN ஆகிய ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினர்களால் கையயழுத்திடப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகள், உடனடியாக நிறைவேற்றப்படாவிட்டால், வரிச்சலுகைக்கான அனுமதியை வழங்க முடியாது. வரிச்லுகைக்கான யாப்பின் அடிப்படைக்குச் சிறீலங்கா தகுதி இழக்க நேரிடும் என மிகவும் கடுமையாக இந்தக் கடிதம் எச்சரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையிடம் கால எல்லை நீடிப்பைக் கேட்டுக் கேட்டுப் பெற்று ஏமாற்றி வரும் சிறீலங்கா, வரிச்லுகையை பெற்றுக்கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளிற்காகத் தமிழ் மக்களின் மீதான அடக்குமறைகள், சித்திரவதைகள் மற்றும் இனப்படுகொலைகளிற்கான நியாயங்களை வழங்கும் என்றோ, அல்லது போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை தமிழ் மக்களிற்கு எப்படி இல்லாமல் போயுள்ளதோ, அதே நிலைமைக்கு ஐரோப்பியப் பாராளுமன்றமும் வரும் என்பதில் ஐயம் இல்லை.

நன்றி: ஈழமுரசு

செய்திகள்
வெள்ளி June 01, 2018

நான்தான்பா ரஜினிகாந்த் என்ற ஹாஷ்ராக் ரெண்ட் முதல் ...போராடினால் தமிழகம் சுடுகாடாகிவிடும் என்ற சீற்றங்கள் வரை நானாவித செய்திகள் கிட்டும் பின்னணியில் மீண்டும் ஒரு நாள்!

வெள்ளி June 01, 2018

மட்டு - அம்பாறை மாவட்டத்தின் எல்லை பகுதியில் வயல்காணிகளிலும் மேட்டுநிலக் காணிகளிலும் சிங்களவர்கள் குடியேற்றப்படுகின்றனர்...