கைக்கெட்டும் தொலைவில் தமிழ் ஈழம் - புகழேந்தி தங்கராஜ்

சனி நவம்பர் 26, 2016

ஈழத்தாயகத்தை மீட்டெடுப்பதற்கான விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிரை நீத்த இணையற்ற வீரர்களை, மாவீரர் நாளான இன்றையதினம் (நவம்பர் 27), ஒட்டுமொத்தத் தமிழினமும்  நன்றியுடன்   நினைவுகூர்கிறது. 'நினைத்தல்' என்று குறிப்பிடுவது கூட தவறோ என்று நினைக்கிறேன்.... அந்த  அளவுக்கு, எந்தக் கணத்திலும்  அவர்களை மறக்காமல்தான் இருக்கிறது இந்த இனம்.

இன்று மாவீரர் நாள் என்றாலும், உலகம் முழுவதும், தமிழர்கள் எங்கெங்கே வாழ்கிறார்களோ அங்கெல்லாம்,  மாவீரர்களின் நினைவேந்தும் நிகழ்வுகள், மாவீரர் வாரத்தின் முதல்நாளான நவம்பர் 21 அன்றே தொடங்கிவிட்டன. தாய்க்கு இணையாகத் தாய்மண்ணை நேசித்த அவர்களது ரத்தத்தால் நனைந்த வன்னி மண்ணில், மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதில் எப்போதும் போல இப்போதும் மாணவர்களும் இளைஞர்களுமே  முன்னணியில் இருக்கிறார்கள்.

பிரிட்டனிலும் கனடாவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் கூட, மாவீரர் வார நிகழ்வுகள் நான்கைந்து நாட்களுக்கு முன்பே  தொடங்கிவிட்டன. மாணவர் மற்றும் இளையோர் அமைப்புகளே அந்த நிகழ்வுகளை ஒருங்கிணைத்திருக்கின்றனர். கையில் மலர்களையும் தீபங்களையும் ஏந்தி நிற்கிற எங்கள் இளையோரின் முகத்தில் ஒளிர்கிற ஓர்மத்தைப் பார்க்கிறபோது, மலரப் போகிற ஈழத்தை உலகின் முன்மாதிரி நாடாக மாற்றிக் காட்டுவதிலும் அவர்கள் முன்நிற்பார்கள் என்கிற நம்பிக்கை எழுகிறது.

இந்த நொடியில் மட்டுமில்லாது, மாவீரர்களை நினைத்துப் போற்றுகிற ஒவ்வொரு நொடியும்,  அவர்களது மேன்மையான நோக்கத்தையும், நேர்மையான வழிமுறைகளையும் மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்த்து வியந்துபோகிறவன் நான். தாயக விடுதலை அவர்களது அடிப்படைக் கொள்கை. அதேசமயம்,  மற்றவர்கள் தயவிலோ குறுக்குவழிகளிலோ அதை அடைந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார்கள்.

ஆண்மையுடன் கூடிய இந்த நேர்மையும் தங்களைத் தாங்களே அர்ப்பணித்துக் கொண்ட துணிவும்தான் விடுதலைப் புலிகளின்  அதிமுக்கிய அடிப்படைத் தன்மை. இதைப் புரிந்துகொள்ளாமல் அவர்களைப் புரிந்துகொள்ள முடியாது, அவர்களைப் புரிந்துகொள்ளாமல் அவர்களது நினைவைப் போற்றமுடியாது.

புலிகளின் ஆயுதங்களில் பாதி, ராணுவத்திடமிருந்து அபகரித்தவை. மீதி, ஆயுதங்களாகவே அவதரித்தவை. அவர்கள்  தாங்கிய ஆயுதங்களில் அரிதினும் அரிதான ஆயுதம், அவர்களது உயிராயுதம். மற்றெல்லா ஆயுதங்களையும் காட்டிலும் வலுவானது அது...... வஜ்ராயுதத்துக்கு நிகரானது.

வஜ்ராயுதம் - என்று புராணங்களில் குறிப்பிடப்படுவது, வெறும் ஆயுதம் மட்டுமில்லை..... மற்ற உயிர்களைக் காக்க தன்னையே தாரைவார்க்கும் தியாகத்தின் அடையாளம். அதனாலேயே அதைக் குறிப்பிடுகிறேன்.

தேவர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்த விருத்திராசுரன், உலகின் ஒட்டுமொத்த நீர்வளத்தையும் கைப்பற்றி அனைத்து உயிர்களையும் நீரின்றித் தவிக்க வைத்தான். தூய முனிவர் ஒருவரின் முதுகெலும்பாலேயே அவனைக் கொல்லமுடியும் என்கிற நிலை. அந்த நிலையில்,  விருத்திராசுரனிடமிருந்து  தேவர்களைக் காக்க, தன்னையே கொடுக்க முன்வந்தவர் - ததீசி என்கிற அப்பழுக்கற்ற முனிவர்.

யோக நெருப்புக்கு (யோகாக்கினி) தன் உடலை இரையாக்கினார், ததீசி. அவரது முதுகெலும்பு தான், வஜ்ராயுதம். அது, தேவர்களின் ஆயுதமானது.  விருத்திராசுரன் கொல்லப்பட்டான். தேவர்களும் உலக உயிர்களும் காக்கப்பட்டனர்.

புராணங்களும் இதிகாசங்களும் கற்பனையாகப் புனையப்பட்டவை தான்! என்றாலும், வஜ்ராயுதக் கதைகளில், மனித இனத்துக்குத் தேவையான ஒரு வலுவான செய்தி இருந்தது. தியாகத்தின் மேன்மையை இத்தகைய கதைகள் சுட்டிக்காட்டின. என்றாலும், அவை, இட்டுக்கட்டப்பட்டவை!   அந்தக் கட்டுக்கதைகளுக்கு உயிர்கொடுத்தவர்கள், சொந்தத் தாயகத்துக்காக தங்கள் உயிரை புன்முறுவலுடன் மனமுவந்து கொடுத்த எங்கள் ஈழத்து இளைஞர்கள்.

ராணுவமிருகங்களின் இரும்புக் கோட்டையைத் தகர்க்க, தன் சவப்பெட்டியைத் தானே வடிவமைத்து, நெல்லியடியின் காற்றுவெளியெங்கும் தமிழினத்தின் ஓர்மத்தை எழுதிச் சென்ற மில்லர்......
 
அப்பாவித் தமிழ் மீனவர்களுக்கு சிம்ம சொப்பனமாயிருந்த 6300 டன் அபித போர்க்கப்பலைத் தூள்தூளாக்கி காங்கேசன்துறை  கடற்பரப்பெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் எங்கள் பிள்ளை  அங்கயற்கண்ணி.....
 
எம் இனத்தின் இந்த உயிராயுதங்களை ஒவ்வொன்றாக நினைவுகூரும்போதுதான், பிரபாகரனின் தோழர்கள்  வஜ்ராயுதத்தைக் காட்டிலும் வலுவானவர்கள்  என்கிற உண்மையை உணர முடிகிறது.

உலகின் விடுதலைப் போராட்டங்கள் அனைத்துமே, ஏற்ற இறக்கங்களைக் கொண்டவைதான்! தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறும் இதற்கு விதிவிலக்கல்ல! நினைத்துக் கூட பார்க்க முடியாத வெற்றிகள், எதிர்பாராத பின்னடைவுகள் என்று, ஏற்ற இறக்கங்களுடன்தான் இருக்கிறதென்றாலும், கொள்கையில் சமரசம் செய்துகொள்ளாத உறுதியான போக்கால், அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
 
முதலாம் ஆனையிரவு போர்க்களத்தில் வீரச்சாவு அடைந்த  கவிக்குயில் வானதி, இறப்பதற்கு முன் ஓர் உருக்கமான வேண்டுகோளை விடுத்திருந்தார்.

"எழுதுங்களேன்....
நான் எழுதாது செல்லும்
என் கவிதையை
எழுதுங்களேன்.............

மீட்கப்பட்ட எம் மண்ணில்
எங்கள் கல்லறைகள் கட்டப்பட்டால்
அவை
உங்கள்
கண்ணீர் அஞ்சலிக்காகவோ
மலர்வளைய மரியாதைக்காகவோ அல்ல!
எம் மண்ணின் மறுவாழ்வுக்கு
உங்கள் மனவுறுதி
மகுடம் சூட்டவேண்டும்
என்பதற்காகவே!..........

எழுதுங்களேன்
எழுதாத என் கவிதையை
எழுதுங்களேன்......"
 
1991 ஆனையிரவு களத்தில் வானதி எழுதிய கவிதையின் ஒரு பகுதி இது. அந்தக் கவிக்குயிலின் வேண்டுகோளும், ஸ்பார்ட்டாவின் மாவீரன் லியோனிடாஸின் வேண்டுகோளும் வேறு வேறல்ல!
 
'எங்களை நினைவில் வைத்திருங்கள்....
நாங்கள் மரணத்தைத் தழுவுவது எதற்காக என்பதை
நினைவில் வைத்திருங்கள்,
நினைவுச் சின்னங்களை விட
இதுதான் முக்கியம்' என்கிற லியோனிடாஸின் வேண்டுகோளுக்கு இணையானதாக இருக்கிறது, வானதியின் - 'எழுதுங்களேன்.....' கவிதை.

இந்த இனத்தின் மாவீரர்களை நினைவில் வைத்திருப்பதைக் காட்டிலும், அவர்களுக்கு நினைவுச் சின்னம் எழுப்புவதைக் காட்டிலும், அவர்களது கல்லறையில் பூக்களைத் தூவுவதைக் காட்டிலும்  முக்கியமானது, அவர்கள் மரணத்தைத் தழுவியது  எதற்காக என்பதை நினைவில் வைத்திருப்பதுதான்!

வன்னி மண்ணைப் பொறுத்தவரை, விடுதலைப் புலிகள் என்கிற மாசற்ற மாவீரர்களின்   உண்மைத்தன்மையை முழுமையாக உள்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் எங்கள் தாயக உறவுகள். அதை உறுதி செய்வதாக இருக்கின்றன, அங்கிருந்து வருகிற செய்திகள்.

எமது தாயக மக்களின் தன்மானத்துக்கு, இரண்டு மாணவர்களின்    குடும்பத்தினர் கூடுதல் பெருமை சேர்த்திருப்பது தொடர்பாக அண்மையில் வெளியான செய்தி ஒன்றைப் படித்ததும் மெய் சிலிர்த்தது. அவர்கள், சிங்களப் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட கஜன் மற்றும் சுலக்சனின் குடும்பத்தினர்.

மாணவர்களான கஜன், சுலக்சன் படுகொலையை மூடிமறைக்கத் தலைகீழாக நின்றது இலங்கை. சாலைவிபத்தில்தான் அவர்கள் உயிரிழந்தனர் என்கிற பச்சைப் பொய்யைப் பரப்பியது. சம்பவம் நடந்த பகுதியைச் சேர்ந்த தமிழ் உறவுகளின் துணிவாலும், யாழ் பல்கலைக் கழக மாணவர்களின் நேரடி நடவடிக்கையாலும், மருத்துவர்களின் நேர்மையாலும்தான் - நடந்தது படுகொலை என்பது அம்பலமானது. கஜனையும் சுலக்சனையும் வெறித்தனமாகச் சுட்டுக்கொன்றது ஏன் - என்கிற மாணவர்களின்  கேள்விக்கு இன்றுவரை பதிலில்லை.

மாணவர்கள் கேட்கிற கேள்விக்குப் பதில்சொல்லத் திராணியற்ற இலங்கை அரசு, தனது எடுபிடிகளைக் களத்தில் இறக்கியிருக்கிறது. தங்கள் உடல் பொருள் ஆவி உள்ளிட்ட சகலத்தையும் இலங்கைக்காகவே அர்ப்பணித்திருக்கிற அந்த  எடுபிடிகள், - 'மோட்டார் சைக்கிள் நிற்காமல் போனதால்தான் போலீஸ் சுட்டிருக்கிறது' என்றெல்லாம் வெட்கமேயில்லாமல் வியாக்கியானம் கொடுத்தார்கள். கூலிக்குக் குரைப்பவர்களுக்கு, கூச்சநாச்சமெல்லாம் இருக்கிறதா  என்ன?

மாணவர்கள் படுகொலைக்கான உண்மையான காரணத்தை வெளியிட மறுக்கிற இலங்கை, அந்த மாணவர்களின் உயிருக்கு விலை பேச ஆரம்பித்திருக்கிறது இப்போது!

மைத்திரியின் அரசில் இருக்கிற அமைச்சர்களில், மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மாதிரி ஒரு பிரகஸ்பதியைப் பார்க்கவே முடியாது. சொந்தச் சமூகத்தை அடமானம் வைத்தாவது, அனைத்து சௌகரியங்களையும் அனுபவிக்கத் துடிக்கும் அயோக்கிய  அரசியல்வாதிகளில் ஒருவர், இந்த சுவாமிநாதன்.

கஜன் சுலக்சன் குடும்பங்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கப் போவதாக, சுவாமிநாதன் என்கிற இந்த நபர் அவர்களது குடும்பத்தாரிடம் தெரிவித்திருக்கிறார். வீடு கட்டிக் கொடுப்பது தொடர்பாக, ராணுவத்துடன் ஆலோசனையெல்லாம் கூட நடத்திவிட்டாராம்! 'மாணவர்கள் குடும்பங்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க ராணுவம் சம்மதித்து விட்டது' என்று நாக்கொழுப்புடன் அறிவித்திருப்பதன் மூலம், வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சியிருக்கிறார் சுவாமிநாதன்.

கல்லறை கட்டக்கூட அனுமதிக்காமல், முறைப்படி புதைக்கக் கூட இடம்தராமல், பல்லாயிரக்கணக்கான மக்களை முள்ளிவாய்க்கால் மண்ணில் உழுதே புதைத்தது சிங்கள  ராணுவம். அந்த இரக்கமற்ற அரக்கர்களின் அதிகாரபூர்வ ஏஜென்ட், இந்த சுவாமிநாதன். இப்படியொரு அற்பப் புழு தான், 'வீடுகட்டிக் கொடுப்பேன்' என்று அறிவிக்கிறது. இதைத் தட்டிக்கேட்க யாருமே இல்லையா - என்கிற தன்னிரக்கத்தில் துடித்தபோதுதான், மாவீரர்கள் பிறந்த மண்ணின் பெருமையை நிலைநிறுத்தியிருக்கிறார்கள், கஜன் சுலக்சன் குடும்பத்தினர்.

"நாங்கள் அமைச்சரைச் சந்தித்தது வீடு கேட்பதற்காக அல்ல.... படுகொலை செய்யப்பட்ட எமது பிள்ளைகளுக்கு நீதி கேட்கத் தான் அவரைச் சந்தித்தோம். சம்பந்தமேயில்லாமல்,  சிங்கள ராணுவம் வீடு கட்டிக்கொடுக்கும் என்றெல்லாம்  அறிவிக்கிறார்கள். ராணுவம் கட்டிக் கொடுக்கிற வீடெல்லாம்  எங்களுக்குத் தேவையேயில்லை. எங்களுக்குத் தேவை நீதி" என்று வெளிப்படையாகப் பிரகடனம் செய்திருக்கிறார்கள் அவர்கள்.

கஜன் சுலக்சன் குடும்பத்தினரின் இந்தப் பிரகடனம் தான், இந்த ஆண்டு மாவீரர் நாளில், மாவீரர்களுக்கு செலுத்தப்பட்டிருக்கிற உன்னதமான அஞ்சலி என்று நினைக்கிறேன் நான்.

கஜன் சுலக்சன் குடும்பத்தினர் ஆண்மையுடன் பேசுகிற இந்த நேரத்தில்கூட, இரட்டை நாக்கோடு தான் பேசுகிறது சிங்கள இலங்கை.

'விடுதலைப் புலிகள் இயக்கத்தை  நசுக்கிவிட்டோம்' - என்று பௌத்த சிங்கள மக்களிடம் போய் மார்தட்டுகிற இலங்கை,   'புலிகளின் செயல்பாடுகள் நீடிப்பதால்தான், வடகிழக்கில் ராணுவத்தை நிறுத்தியிருக்கிறோம்' என்று சர்வதேசத்தின் காதில் பூ சுற்றுகிறது. இலங்கை சொல்வதில் எது உண்மை என்கிற குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறது ஒட்டுமொத்த உலகும்!

புலிகள் இருக்கிறார்களா இல்லையா, இருந்தால் எங்கே இருக்கிறார்கள் - என்கிற கேள்வியெல்லாம் பில்லியன் டாலர் கேள்விகள். வாலி மாதிரி கவிஞர்களால் மட்டும் தான் இதற்கெல்லாம் பதிலளிக்க முடியும்.

"இருக்கிறானா இல்லையா.....
கண்டு பிடிக்கவே முடியாதவர்கள்
இரண்டுபேர்...
ஒருவன் கடவுள்...
இன்னொருவன் பிரபாகரன்"
என்று எழுதியவர் - வாலி.

ஈழம் என்பது பிரபாகரனின் கனவு மட்டுமல்ல, கோடானுகோடி தமிழரின் கனவு. பௌத்த சிங்களப் பேரினவாதப் பூதங்களால் களவாடப்பட்ட அந்தத் தமிழரின் தாய்மண்ணை மீட்டெடுக்கும் வேள்வியில் தங்களைத் தாங்களே ஆகுதி ஆக்கிக்கொண்ட ஆயிரமாயிரம் மாவீரர்களின் கனவு. அவர்களது மூச்சுக்காற்று, வன்னி நிலமெங்கிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. காற்றுவெளியிலும் கடலலையிலும் கலந்திருக்கிறது.

உண்மையில், கைக்கெட்டும் தூரத்தில்தான் இருக்கிறது ஈழம். அதைப் பெறுவதற்கான நியாயங்கள் அப்படியே இருக்கின்றன. அதை வலுப்படுத்தியிருக்கிறது, 2009 இனப்படுகொலை. இந்த நேரத்தில், மக்களைத் திரட்டி உலகின் மனசாட்சியைத் தட்டியெழுப்புகிற கடமையை நம்மில் எவரும் தட்டிக் கழிக்கக் கூடாது. அதுதான் மாவீரர்களுக்குச் செலுத்துகிற உண்மையான அஞ்சலி!