கைதானவர்கள் இராணுவத்திடம் இரகசியமாக சம்பளம் பெற்றவர்கள்!

ஞாயிறு ஜூன் 24, 2018

முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் கிளைமோர் குண்டுகள், புலிக்கொடி மற்றும் சில இராணுவ சாதனங்களை கொண்டு சென்றவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில்  காவல் துறையால்  கைது செய்யப்பட்டவர்களிற்கும் இராணுவ புலனாய்வுத்துறைக்குமிடையில் மிகமிக நெருக்கமான தொடர்பிருக்கும் விடயம் காவல் துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அது பற்றிய முழுமைான அறிக்கை பாதுகாப்பு அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த காவல் துறை நேற்று முன்தினம் ஒருவர், நேற்று இரவு ஒருவர் என மொத்தம் ஐந்து பேரை இதுவரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையின் போதே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஒட்டுசுட்டான்- புதுக்குடியிருப்பு வீதியில் காட்டுப்பகுதியை அண்மித்த பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு பொலிசார் திடீரென முச்சக்கரவண்டியொன்றை வழிமறித்து சோதனையிட்டனர். அதிலிருந்தே கிளைமோர் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அந்த இடத்திலேயே முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட, அதிலிருந்த மற்றையவர்கள் தப்பியோடி விட்டனர். இவர்களே பின்னர் கைது செய்யப்பட்டவர்கள்.

கைதானவர்களில் சிலர் முன்னர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்திருந்தவர்கள். அவர்களில் பிரதான சந்தேகநபர் யுத்தமுனையில் கையொன்றை இழந்தவர். கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் இராணுவ புலனாய்வுத்துறையிடம் இணைந்து- நெருக்கமாக- பணியாற்றியவர்கள் என்ற விடயம் அம்பலமாகியுள்ளது. கைதான ஒருவருக்கு மாதாந்தம் இராணுவம் பணம் வழங்கும் விடயமும் அம்பலமாகியுள்ளது.

கைதானவர்களில் ஒருவர் புதுக்குடியிருப்பில் வாகன திருத்தகம் நடத்துபவர். மற்றொருவர் போலயான அடையாள அட்டையே பாவிக்கிறார். கைதான இன்னொரு சந்தேகநபரான- 55 வயதுடையவர்- இந்த போலி அடையாள அட்டையை செய்து வழங்கியுள்ளார். அதில் பெயர் உள்ளிட்ட தரவுகள் மாற்றப்பட்டுள்ளன. இந்த போலியான தரவுகளின் மூலம் வங்கிக்கணக்கு ஒன்று ஆரம்பிக்கப்பட்டு, அதில் வெளிநாடு ஒன்றில் இருந்து பணம் அனுப்பப்பட்டு வருகிறது.

போலி அடையாள அட்டையில் உலாவியர், காணாமல் போனவர் என அவரது சகோதரியால் சில வருடங்களின் முன்னர் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டிருந்தது.

வெளிநாட்டில் உள்ளவர்களில் விடுதலைப் புலிகளின் முக்கிய சில நபர்கள் மீது குற்றம்சாட்டி அவர்களே இங்குள்ளவர்களிற்கு தகவல் வழங்கி ஆயுதங்கள் எடுத்திருக்கலாம் என்பது உள்ளிட்ட பல விடயங்கள் புலன் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கைதானவர்களிற்கும் இராணுவ புலனாய்வுத்துறைக்குமிடையில் நெருங்கிய தொடர்புள்ளது விசாரணையில் அம்பலமானதையடுத்து, இந்த விடயத்தை பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்க காவல் துறையினர்டி தீர்மானித்தனர். இதன்படி அறிக்கை நேற்று பாதுகாப்பு அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.