கைதிகளின் விடயம்: யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையிடம் முறைப்பாடு

நவம்பர் 14, 2017

சிறிலங்காவின் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உதவவேண்டும் என யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

அரசியல் கைதிகளின் விடுதலைக்கு சிறிலங்கா அரசாங்கமும் தமிழர் பிரதிநிதிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள மாணவர்கள், இந்த விடயத்தில் சர்வதேச சமூகத்திற்கு உரிய பொறுப்பைச் சுட்டிக்காட்டியுள்ளனர். 

மேற்படி விடயம் தொடர்பாக, ஐ.நா மனித உரிமை உயர் ஸ்தானிகரான இளவரசர் செயித் ஹசைன், அவர்களுக்கும், மனித உரிமைப் பேரவையின் 11 ஆம் சுற்றுக்கான அதிபரான ஜோக்குயின் அலெக்சாண்டர், ஜெனீவாவில் இயங்கும் அமெரிக்க அரசின் ஐ.நா. மனித உரிமைப் பொறிமுறைக்கான நிரந்தரப் பிரதிநிதியான தியோடோர் அலெக்ரா, ஆகியோருக்கு பல்கலைக்கழக மாணவர்கள் விரிவான மகஜர்களை அனுப்பிவைத்துள்ளனர். 

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (14) மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் இந்த மகஜர்களை அந்தந்தப் பிரதிநிதிகளின் யாழ்ப்பாண இணைப்பாளர்கள் ஊடாக அனுப்பிவைத்தனர். 

அந்த மகஜரில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விரிவான பல விடயங்களைத் தெரிவித்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு, 

ஜனீவாவைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைப் பேரவைக்கும், சிறிலங்கா அரசோடு 2015 இல் ஒத்திசைவுத் தீர்மானத்தைக் கொண்டுவந்து பின்னர் இந்த வருடம் மேலும் இரண்டு வருட நீடிப்பைக் கொண்டுவந்த அமெரிக்காவின் ஐ.நா.வுக்கான ஜெனீவாத் தூதுவருக்கும் தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலை தொடர்பான விடயத்தில் சர்வதேச பொறுப்பு உள்ளது. 

இந்தப் பொறுப்பு சர்வதேசச் சட்டவிதிகளில் தமிழர்களுக்கு உள்ள உரிமையின் பாற்பட்டது. 

தவிரவும், அமெரிக்க அரசு தனது மனித உரிமைப் பொறிமுறை ஊடான நேரடித் தலையீடு மூலமாக மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசோடு ஒத்திசைவு நிகழ்ச்சிநிரல் ஒன்றின் மூலம் உள்நாட்டுப் பொறிமுறையிடமே நீதிவழங்கலை ஏறத்தாழ முழுமையாகக் கையளித்துவிட்டுள்ள ஒரு நிலை தோன்றியுள்ளது. 

இதற்கு மேலதிகமாக இரண்டு வருட கால நீடிப்பை வழங்கும் கைங்கரியத்தையும் அமெரிக்க அரசின் மனித உரிமைப் பொறிமுறையே செய்திருக்கிறது. 

எனவே, ஜெனீவாவைத் தளமாகக் கொண்டியங்கும் இந்த இரண்டு தரப்பினருக்கும் அவரவருக்குரிய பொறுப்பை நினைவுபடுத்தி, சர்வதேசச் சட்ட நியமங்களின் அடிப்படையில் தமிழ் அரசியற் கைதிகளுக்குரிய உரிமைகளையும் நினைவுபடுத்தவேண்டிய தேவை எழுந்துள்ளது. 

குறிப்பாக, இலங்கை அரசு தமிழ் அரசியற் கைதிகளின் வேண்டுகோள்களைத் தனது சட்டத்தையும் சட்டப்பொறிமுறைகளையும் கோடிட்டுகாட்டிப் புறக்கணிக்கும் நிலையில் தமிழர்களின் தரப்பு சர்வதேசச் சட்டப் பொறிமுறைகளுக்குள் தமிழ் அரசியற் கைதிகளுக்கு உள்ள உரிமையைத் தட்டிக்கேட்காத நிலை மிகவும் பரிதாபகரமானது. 

எனவே, தமிழ் அரசியற் கைதிகளுக்குள்ள சர்வதேசச் சட்ட நியமங்களின் அடிப்படையிலான உச்சபட்ச உரிமைகள் எவை என்பதைக் குறித்த சர்வதேசத் தரப்பினருக்கு நினைவுபடுத்த வேண்டிய சூழல் எழுந்துள்ளது. 

இதன் மூலம் சிறிலங்கா அரசின் மீது உடனடியாக அழுத்தத்தைப் பிரயோகிக்கவேண்டும். தவறும் பட்சத்தில் சர்வதேச தரப்பினருக்கும் தமிழ் அரசியற்கைதிகள் மீது இழைக்கப்படும் துன்பியலுக்கு மனிதாபிமானப் பொறுப்பு இருக்கிறது. 

இலங்கை அரசின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு உட்படுத்தப்பட்டுச் சிறையில் வாடும் தமிழ்க் கைதிகள் அனைவரும் சர்வதேச சட்ட நியமங்களின் பிரகாரம் விடுவிக்கப்படவேண்டியவர்கள். அவர்கள் அனைவரும் குறைந்தபட்சம் அரசியற்கைதிகளாக இலங்கை அரசால் அங்கீகிரிக்கப்பட்டு அரசியல் முடிவொன்றின் மூலம் விடுதலை செய்யப்பட வேண்டியவர்கள். 

சர்வதேச மட்டத்தில் தமிழர் தரப்பாக பேச்சுவார்த்தைகளிலும் போர்நிறுத்த உடன்படிக்கையிலும் அங்கீகரிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் போரில் முழுமையாக அழிக்கப்பட்டிருப்பதால், தமிழ் அரசியற் கைதிகளின் உறவுகளும் தமிழ்ச் சமூகமும் மாத்திரமே கைதிகளின் நலன் குறித்துப் பேசவேண்டிய சூழல் நிலவுகிறது. 

குறிப்பாக சர்வதேச சட்டத்தில் தமிழர் தரப்புக் கைதிகளுக்கு இருக்கவேண்டிய உரிமைகள் என்ன என்பதை முதலாவதாகவும், ஐ.நா. இலங்கையில் இழைத்தாகத் தானே ஒத்துக்கொண்ட தவறுகள் மூலம் ஐ.நாவுக்கு இருக்கும் பொறுப்பை இரண்டாவதாகவும், 

பேச்சுவார்த்தைக் காலத்தில் இணைத்தலைமை நாடுகளில் ஒன்றாகவும், போரின் பின்னர் ஜெனீவாவில் தொடர் தீர்மானங்களைக் கொண்டுவந்ததன் மூலமும் அமெரிக்காவின் மனித உரிமைத் தரப்புக்கு தமிழ்க் கைதிகள் விவகாரத்தில் முக்கிய பொறுப்பு இருக்கிறது என்பதை மூன்றாவதாகவும்,

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குள்ளாக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு மறுக்கப்பட்டிருக்கின்ற உரிமைகளை மாத்திரம் வைத்து அணுகினாற் கூட அவர்கள் அரசியற் கைதிகள் என்ற தீர்ப்புக்கு வரமுடியும் என்பதை நான்காவது காரணியாகவும் பல்கலைக்கழக மாணவர்களின் மகஜர் எடுத்துக்காட்டியுள்ளது. 

குறிப்பாக, ஜெனீவாக் கோட்பாடுகளின் மேலதிக நெறிமுறை ஒன்றின் பிரகாரம், இலங்கையில் நடைபெற்றது ஒரு சர்வதேசத்தன்மையுடைய, சுயநிர்ணய உரிமையின் பாற்பட்ட, வேற்று இன ஆக்கிரமிப்பு என்று கருதப்படக்கூடிய சூழலில் இடம்பெற்ற போர் என்பதை மாணவ சமூகத்தின் மகஜர் சர்வதேசச் சட்ட நியமங்களின் பிரகாரம் சுட்டிக்காட்டியிருக்கிறது. 

ஆக, சர்வதேசத் தன்மையுடனான போர் ஒன்று முடிவுக்கு வரும்போது போர்க்கைதிகள் மீளத் தத்தம் குடும்பங்களோடு ஒன்றிணைய வேண்டும் என்பதும் அவர்கள் குற்றவியற் சட்டங்களுக்கு ஆட்படுத்தப்படலாகாது என்பதும் சர்வதேச சட்டம் வழங்கும் உரிமை. 

ஆனால், இலங்கை அரசோ தமிழ் அரசியற் கைதிகளின் தண்டனை வழங்கப்பட்டவர்களைப் போர்க்கைதிகளாகப் பார்க்கத் தயாராக இல்லை. எனவே, அவர்கள் தமது தண்டனைக்காலத்தை சிறைகளில் கழித்தேயாகவேண்டிய நிலை. இது அநீதியான செயல் என்பதைச் சர்வதேச சட்டங்களில் தமிழர் தரப்புக்கு இருக்கும் பிடிமானத்தை எடுத்துக்காட்டுவதன் மூலம் மாணவர் சமூகம் சுட்டிக்காட்டியுள்ளது. 

அதேவேளை, விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு தொடர்பு பட்டவர்களாகச் சித்தரித்து போலியான குற்றப்பத்திரிகைகள் மூலம் தடுப்பில் வைக்கப்பட்டிருப்பவர்கள் அனைவரும் அரசியற் கைதிகள் என்ற அந்தஸ்துக்கு உரித்தானவர்கள் என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கும் மாணவர்களின் மகஜர் ஐ.நாவும் அமெரிக்காவும் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு உள்ளாக்கப்பட்ட கைதிகளாக உள்ள அனைவரையும் அரசியற்கைதிகளாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. 

அவ்வாறு ஐ.நாவும் அமெரிக்காவும் பொறுப்போடு அங்கீகரித்தாலே இலங்கை அரசுக்கும் முறையாக விண்ணப்பத்தை அவர்களால் மேற்கொள்ளமுடியும் என்பதையும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தமது மகஜரில் சுட்டிக்காட்டியுள்ளனர். 

குறிப்பாக, சுனாமி அனர்த்தத்தின் பின்னர் தமிழர் தரப்புக்கும் இலங்கை அரசுக்கும் பொதுக்கட்டமைப்பு தொடர்பான சர்வதேச பேச்சுக்கள் மூலம் உடன்பாடு ஒன்று காணப்பட்டது. இந்த உடன்பாட்டை வரவேற்ற அமெரிக்க அரசு, எதிர்பாராத விதமாக இந்தக் கட்டமைப்புக்குத் தான் பங்களிக்க முடியாதென்பதையும் அதற்குச் சட்டரீதியான சிக்கல்கள் இருப்பதாகவும் ஒரு நிலைப்பாட்டை அறிவித்தது. 

இந்த நிலைப்பாடு வெளியாகிய ஒரு சில நாட்களிலே தீவிரவாதத் தரப்புகள் இலங்கையின் உச்ச நீதிமன்றில் வழக்கொன்றைத் தாக்கல் செய்து குறித்த சுனாமி உடன்படிக்கையைச் சட்டரீதியாக இரத்துச் செய்தார்கள். 

இது மிகவும் கவலைக்குரிய ஒரு முன்நிகழ்வு என்றும், இதைப்போன்ற நிலையைத் தமிழர்களுக்கு மீண்டும் ஏற்படுத்த வேண்டாம் என்றும் அமெரிக்க மனித உரிமைப் பொறிமுறையினரிடம் யாழ் பல்கலைக்கழக மாணவர் சமூகம் சுட்டிக்காட்டியுள்ளது. 

தமிழ் அரசியற் கைதிகள், அரசியற் கைதிகளாகச் சர்வதேச தரப்புகளால் அங்கீகரிக்கப்படுவது அவசியம் என்பதையும், சர்வதேசப் பொறிமுறைகளுக்கும் தலையீடு செய்துள்ள சக்திகளுக்கும் இது விடயத்தில் பொறுப்பு இருக்கிறதென்பதையும் குறித்த மகஜர் சுட்டிக்காட்டியிருக்கிறது. 

குறித்த மகஜரின் பிரதிகள் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரம்சிங்காவுக்கும், நல்லிணக்கப் பொறிமுறையின் தலைவி சந்திரிக்கா அம்மையாருக்கும், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் வடமாகாண முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் அவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

செய்திகள்
ஞாயிறு நவம்பர் 19, 2017

சட்ட விரோதமாக எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட எட்டு இந்திய மீனவர்கள் சிறிலங்கா  

ஞாயிறு நவம்பர் 19, 2017

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கில் தனித்துப் போட்டியிட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.  இந்த விடயத்தை கட்சியின் செயலாளர் நிஷாம் காரியப்பர் தெரிவித்துள்

ஞாயிறு நவம்பர் 19, 2017

மாவீரர் தினத்தன்று வணக்க நிகழ்வுக்கு ஏற்பாடு, மாவீரர்களின் பெற்றோர், உரித்துடையோர் துயிலும் இல்லத்தில்...