கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் அடையாள உண்ணாவிரதம், த.தே.ம.முன்னணி ஏற்பாடு

வெள்ளி அக்டோபர் 16, 2015

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை காலை யாழ்ப்பாணம்  முனியப்பர் கோவில் முன்றலில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. 

 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்று வருகின்ற இந்தப் போராட்டத்திற்கு 40 இற்கு மேற்பட்ட அமைப்புக்கள் தமது ஆதரவை வெளியிட்டுள்ளன. இந்தப் போராட்டத்தில் கட்சி பேதமின்றி பல அரசியல் பிரதிநிதிகளும் பொது அமைப்புக்களும் பங்குபற்றியுள்ளன. 

 

சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் கடத்தப்பட்டு காணாமற்போனவர்களின் உறவினர்கள் நலன்விரும்பிகள் என நூற்றுக்கணக்கானவர்கள் இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். 

 

இந்தப் போராட்டம் தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்துள்ள ஊடக அறிக்கை வருமாறு, 

 

கடந்த மூன்று தசாப்பதங்களாக சிறீலங்கா அரசினால் அவசர காலச்சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பவற்றின் கீழ் பல நூற்றுக் கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

அவ்வாறு அடைத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த திங்கட்கிழமை (2015.10.12) தொடக்கம் சகல சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகள் சாகும்வரையான உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்கள்.

 

இவ்வாறு அரசியல் கைதிகளாக உள்ளவர்கள் எந்தவித விசாரணையுமின்றி 10 தொடக்கம் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பதாக முறையிட்டுள்ளார்கள். இவர்களது விடுதலையை வலியுறுத்தி அரசியல் கைதிகளின் பெற்றோர்கள், உறவினர்கள் ஒன்றிணைந்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தை நடாத்தவுள்ளார்கள்.

 

மேற்படி போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கின்றது. மேலும் மேற்படி ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் அனைத்து மக்களையும் பல்கலைக்கழக சமூகத்தினர் பாடசாலை சமூகத்தினர் பொது அமைப்புக்களை சார்ந்தவர்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் கலந்து கொண்டு சிறைகளில் வாடும் எமது உறவுகளின் விடுதலைக்கு வலுச் சேர்க்க அணிதிரளுமாறு அழைக்கின்றோம்.