கொழும்பை உலுக்குமா ராஜபக்ஷாக்களின் “ஜனபலய” ?

Tuesday September 04, 2018

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியும் அவர்களின் ஆதரவுடனான புதிய கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து நாளை புதன்கிழமை நடத்தவிருக்கின்ற " கொழும்புக்கு மக்கள் சக்தி" என்ற பேரணி பற்றியே தலைநகரில் எங்கும் பேச்சு. நாளைக்கு அலுவலகங்களுக்கு ஊழியர்கள் வரமுடியுமா? பாடசாலைகளுக்கு பிள்ளைகள் போகமுடியுமா? அலுவல்களைச் செய்துகொள்ள தலைநகருக்கு நாளையதினம் வரமுடியுமா? என்று எங்கும் கேள்வி.

கூட்டு எதிரணியினரும் பொதுஜன பெரமுனவும் இந்தப் பேரணிக்கான ஏற்பாடுகளை ஒரு மாதத்துக்கும் கூடுதலான காலமாக செய்துவந்திருக்கிறார்கள். நாட்டின் சகல பகுதிகளிலும் இருந்து மக்களை அணிதிரட்டி அழைத்துவந்து அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் சக்தியை வெளிக்காட்டுவதே தங்களது இந்தப் போராட்டத்தின் நோக்கம் என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள். வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, அரசாங்கத்தில் ஊழல் மோசடிகள், தேசிய சொத்துக்களை வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு விற்பனை செய்தல்  மற்றும் பொருளாதார நெருக்கடி உட்பட நாடும் மக்களும் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாவிட்டால் ஆட்சியதிகாரத்தில் இருந்து இறங்கவேண்டுமென்று கோருவதற்காக மக்கள் சக்தியை அணிதிரட்டுவதாகக் கூறியிருக்கும் கூட்டு எதிரணித் தலைவர்கள் அரசாங்கத்தை வீழ்த்தும்வரை தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தப்போவதாகவும் சூளுரைத்திருக்கிறார்கள்.

தலைநகர் நோக்கி  வருகின்ற மக்கள் கூடுவதற்காக ஹைட் பார்க், கெம்பல் பார்க் மற்றும் சாலிகா மைதானம் உட்பட ஐந்து இடங்களை தெரிவுசெய்திருப்பதாகக் கூறியிருக்கும் அவர்கள் வெளிமாவட்டங்களில் இருந்து படையெடுக்கும் மக்கள் எந்த மைதானத்தில் கூடுவார்கள் என்பதைத் திட்டவட்டமாக வெளிப்படுத்தவில்லை.பேரணி வெற்றிகரமானதாக அமைவதைத் தடுப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகளைக் கருத்திற்கொண்டே அதை அவர்கள் வெளிப்படுத்தாமல் இருக்கிறார்கள்.

பாராளுமன்றத்தில் கூட்டு எதிரணியின் தலைவராக செயற்படுகின்ற மக்கள்  ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன ' ஜனபலய கொழும்பட்ட ' என்று சிங்களத்தில் அழைக்கப்படுகின்ற நாளைய பேரணியில் 2 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாகக் கூறியிருக்கிறார்.பேரணியைச் சீர்குலைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கின்ற போதிலும் தங்களது ஏற்பாடுகள் முன்னேற்றகரமான முறையில் சென்றுகொண்டிருக்கின்றன என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

கூட்டு எதிரணியைச் சேர்ந்த இளம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சுமார் பத்து இலட்சம் மக்கள் நாளை கொழும்பில் திரளுவார்கள் என்று கூறியிருப்பதையும் செய்திகளில் படிக்க முடிந்தது. பாதுகாப்பு படையினரையும் பொலிசாரையும் பெருமளவில் குவித்து அசம்பாவிதம் எதுவும் நடவாதிருப்பதை உறுதிசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த மூன்று வருடங்களுக்கும் கூடுதலான காலகட்டத்தில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசியல் சக்திகள் அரசாங்கத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டி பெரும் ஆர்ப்பாட்டப் பேரணிகளை ஏற்கெனவே தலைநகரில் நடத்திக்காட்டியிருக்கின்றன. நாளைய பேரணியுடன் அரசாங்கம் வீட்டுக்குச் செல்லும் என்று கூட்டு எதிரணியின் பல தலைவர்கள் வீராப்பாகப் பேசிக்கொண்டிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது.

இரு வருடங்களுக்கு முன்னர் அதாவது 2015 ஜனவரி ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு முழுமையாக ஒரு வருடம் கூட கடந்துசென்றிராத நிலையில் கூட்டு எதிரணியினர் மாபெரும் பேரணியொன்றை தலைநகரில் நடத்தியிருந்தனர். முன்னைய ஆட்சியில் ராஜபக்சாக்களும் அவர்களின் பரிவாரங்களும் முறைகேடாகச் சேர்த்த நிதிவளங்களைப் பயன்படுத்தியே மக்களை ஆயிரக்கணக்கில் அணிதிரட்டி பேரணிகளை அவர்களால் ஏற்பாடு செய்யக்கூடியதாக இருக்கிறது என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.

முன்னைய பேரணிகளின்போதும் காலிமுகத்திடலில் நடத்திய மேதினப் பேரணியின்போதும் கூட்டு எதிரணியின் தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையிலான தேசிய ஐக்கிய அரசாங்கம் சில வாரங்களில், சில மாதங்களில் வீழ்ச்சிகண்டுவிடுமென்று பேசினார்கள்.ஆனால், அரசாங்கம் வீழ்ச்சியடையவில்லை. அதன் பிரதான  பங்காளிகளான ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர  கட்சிக்கும் இடையில் முரண்பாடுகள் தீவிரமடைந்து வந்த போதிலும் அரசாங்கம் ஏதோ தொடர்ந்து பதவியில் இருந்துவருகிறது.

 

நாளைய பேரணியுடன் அரசாங்கத்தின் வீழ்ச்சி தொடங்கிவிடுமென்று இப்போது கூட்டு எதிரணியினதும் பொதுஜன பெரமுனவினதும் அரசியல்வாதிகள் உரக்கப்பேசுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

அரசாங்கம் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துகொண்டே வருகிறது என்பது உண்மையே.அரசாங்கத் தலைவர்கள் 2015 தேசியத் தேர்தல்களின்போது நாட்டு மக்களுக்கு அளித்த முக்கியமான வாக்குறுதிகளில் பலவற்றை இன்னமும் நிறைவேற்றவில்லை. மறுபுறத்தில் , பொருளாதார நெருக்கடியினால் சனத்தொகையில் அதிகப் பெரும்பான்மையானவர்கள் திணறிக்கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கைச் செலவு அன்றாடம் உயர்ந்துகொண்டேபோகிறது. தங்களது நல்லாட்சியின் கீழ் ஜனநாயக சுதந்திரங்களை மக்கள் பெருமளவுக்கு அனுபவிக்கக்கூடியதாக இருக்கின்றது என்று அரசாங்கத் தலைவர்கள் பெருமைப்பட்டுக் கூறுகின்றபோதிலும் , பெருவாரியான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதில் அரசாங்கம் கண்டுவருகின்ற தோல்விகள் காரணமாக மக்களின் வெறுப்பு அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது.தலைவர்கள் கூறுகின்ற ஜனநாயக சுதந்திரங்களை மக்கள் பெரிதாக நோக்கமுடியாத அளவுக்கு ஏனைய பிரச்சினைகள் பூதாகாரமானவையாக இருக்கின்றன.

தலைநகரில் அன்றாடம் வீதி ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன.அடிக்கடி வேலைநிறுத்தங்கள் இடம்பெறுவதால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கவேண்டியிருக்கிறது. அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளிடையே ஒருமித்த அணுகுமுறைகள் இல்லையென்பதால் இந்த நெருக்கடிகள் தோற்றுவிக்கின்ற சவால்களைச் சமாளிக்க இயலாமல் இருக்கிறது.

ஆனால், அரசாங்கத்தைக் குறைகூறிக்கொண்டு அடிக்கடி ஒவ்வொரு போராட்டத்தை அறிவிக்கின்ற கூட்டு எதிரணியினர் நாடும் மக்களும் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு உரிய மாற்றுத் தீர்வுயோசனைகளை முன்வைப்பதில்லை. மேலும் அவர்கள் இனவாத உணர்வுகளைக் கிளறுகின்ற அணுகுமுறைகளையும் கடைப்பிடிக்கிறார்கள்.வெறுமனே ஆட்சிமாற்றம் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைத் தரப்போவதில்லை.தலையணையை மாற்றுவதன் மூலம் தலைவலியை மாற்றிவிட முடியுமா?

 

மாகாணசபைத் தேர்தல்களை அரசாங்கம் திட்டமிட்டே தாமதப்படுத்துகிறது என்று குற்றஞ்சாட்டுகின்ற எதிரணிக் கட்சிகள் அண்மையில் புதிய தேர்தல் முறைக்கான தொகுதிகளின் எல்லை நிர்ணயக்குழுவின் அறிக்கைக்கு எதிராகவே பாராளுமனறத்தில் வாக்களித்து அதை நிராகரித்தன.ஒரு புறத்தில் அரசாங்கம் தேர்தல்களை நடத்துவதற்கு அஞ்சுகிறது என்று குற்றஞ்சாட்டுகின்ற இந்தக் கட்சிகள் கடைப்பிடிக்கவேண்டிய தேர்தல் முறை குறித்த சர்ச்சையை முடிவுக்குக் கொண்டுவர ஒத்துழைக்கவும் மறுக்கின்றன.

 கடந்த மூன்று வருட காலத்திலும் கூட்டு எதிரணியினரால் முனனெடுக்கப்பட்ட மக்கள் அணிதிரட்டல் போராட்டங்களும் பேரணிகளும் நாட்டு மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண்பதற்கு அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுக்கும் நோக்கத்தைப் பிரதானமாகக் கொண்டிராமல் ஆட்சி மாற்றமொன்றை -- அதாவது ராஜபக்சாக்களை மீண்டும் ஆட்சியதிகாரத்துக்கு கொண்டுவருவதை இலக்காகக் கொண்டவையாகவே இருந்துவருகின்றன.சுமார் பத்து வருடங்களாக ஆட்சியதிகாரத்தில் இருந்த ராஜபக்சாக்கள் மீண்டும் வந்து என்ன அதிசயத்தை நிகழ்த்திவிடப் போகிறார்கள் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழாமல் இல்லை.ஆனால், அரசாங்கத் தலைவர்களின்  தடுமாற்றமான அணுகுமுறைகள் காரணமாக உறுதியான தலைமைத்துவம் பற்றிய  மாயை ஒன்றை ராஜபக்சாக்களைச் சுற்றி அவர்களின் விசுவாசிகளினால் கட்டியெழுப்பக்கூடியதாக இருக்கிறது என்பதை அவதானிக்கத் தவறக்கூடாது.

இவ்வருட ஆரம்பத்தில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கண்ட எவரும் எதிர்பார்த்திராத பெருவெற்றி காரணமாக ராஜபக்சாக்கள் அடுத்துவரக்கூடிய எந்தவொரு தேர்தலிலும் தங்களால் சுலபமாக வெற்றிபெற்றுவிட முடியும் என்று  உறுதியாக நம்புகிறார்கள். நாளைய தினம் நடைபெறவிருக்கும் "கொழும்புக்கான மக்கள் சக்தி " பேரணி அடுத்த வருட இறுதிக்கு முன்னதாக நடத்தப்படவேண்டியதாக இருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக தங்களுக்கு இருக்கக்கூடிய செல்வாக்கை வெளிக்காட்டுவதற்கு ராஜபக்சாக்கள் முன்னெடுக்கும் ஒரு நடவடிக்கையே தவிர மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவேண்டுமென்ற பொது அக்கறையின்விளைவானதல்ல.

வீ. தனபாலசிங்கம்