கோத்தாவையும், மைத்திரியையும் கொலை செய்ய சதி!

Thursday September 13, 2018

முன்னாள் பாதுகாப்புச் செயளார் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும்  சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கிழக்கு மாகாணத்தில் வைத்து கொலை செய்வதற்கு சதி மேற்கொள்ளப்பட்டதாக ஊழல் மோசடி எதிர்ப்பு செயலணியின் வழிநடத்தல் பணிப்பாளர் நாமல் குமார தெரிவித்துள்ளாரென நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பொரளை என். எம். பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எனவே அது தொடர்பில் ஜனாதிபதி உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காவல் துறை  மா அதிபர் மற்றும் காவல் துறை  திணைக்களத்தின் மீது முழுமையாக நம்பிக்கையில்லாது போயுள்ளது. 

ஆகவே இதன் பின்னர் தாம்  காவல் துறை  நடவடிக்கைகளை பகிஷ்கரிக்கவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலைசெய்வதற்கான சூழ்ச்சி குறித்த செய்தி இன்றைய பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது. 

அந்த சதியை காவல் துறையினர் தீட்டியுள்ளனர். இதில் காவல் துறை  மா அதிபர் மற்றும் பிரதிப்  காவல் துறை  மா அதிபர் நாளக த சில்வா மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.  நாட்டின் ஜனாதிபதியை கொலை செய்வதற்கு  காவல் துறை  திணைக்களம் சூழ்ச்சி மேற்கொள்கிறதென்றால் மக்களின் பாதுகாப்பு குறித்து என்ன சொல்வது?

அத்துடன் ஊழல் மோசடி எதிர்ப்பு செயலணியின் வழிநடத்தல் பணிப்பாளர் நாமல் குமார கண்டியில் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார். 

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கிழக்கு மாகாணத்தில் வைத்து கொலை செய்யவதற்கு எடுக்கப்பட்ட சதி முயற்சி குறித்து அதன்போது தெளிவுபடுத்தியுள்ளார். 

அந்த சதி முயற்சிகையை முன்னெடுப்பதற்கு பாதாள உலகக்குழு உறுப்பினர் ஒருவரை உள்ளடக்கியதாகவும்  அவ்வூடகவியலாளர் சந்திப்பின்போது அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்ய வேண்டும். குறித்த விவகாரத்தில் நியாயம் கிடைக்கும் வரையில் நாம் காவல் துறை  நடவடிக்கைகளை பகிஷ்கரிப்போம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.