சங்கதி-24 களம் அமைக்க மக்கள் கொந்தளிப்பு - கூரேயின் இலண்டன் கூட்டம் இரத்து!

சனி அக்டோபர் 06, 2018

இலண்டன் லூசியம் சிவன் கோவில் மண்டபத்தில் வடதமிழீழத்திற்கான சிங்கள ஆக்கிரமிப்பு ஆளுநர் ரெஜினோல்ட் கூரே அவர்களால் நடாத்தப்பட இருந்த கூட்டம் சங்கதி-24 களம் அமைத்துக் கொடுக்கப் பிரித்தானியாவாழ் ஈழத்தமிழ் சைவப் பெருமக்கள் கொந்தளித்ததன் விளைவாக இரத்தாகியுள்ளது.

வடதமிழீழத்தில் சிங்களக் குடியேற்றங்களை நிறுவுதல், சைவ ஆலயங்களை ஆக்கிரமித்து அங்கு பௌத்த விகாரைகளை நிறுவுதல் என முழு மூச்சுடன் சிங்கள-பௌத்த மயப்படுத்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் சிங்கள ஆக்கிரமிப்பு ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தலைமையில் வரும் 07.10.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இலண்டன் லூசியம் சிவன் கோவில் மண்டபத்தில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்தது.

எனினும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களும், சைவத் தொண்டர்களும் இது பற்றி சங்கதி-24 இணையத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து இதுவிடயத்தில் தமது உணர்வுகளை சைவப் பெருமக்கள் வெளிப்படுத்துவதற்கு சங்கதி-24 இணையம் களம் அமைத்துக் கொடுத்திருந்தது.

இதனையடுத்து கொந்தளித்த இலண்டன்வாழ் ஈழத்தமிழ் சைவப் பெருமக்கள், ரெஜினோல்ட் கூரேயின் சந்திப்பை லூசியம் சிவன் கோவில் நிர்வாகம் உடனடியாக இரத்துச் செய்யத் தவறினால் கோவிலை ஒட்டுமொத்தமாக சைவப் பெருமக்கள் புறக்கணிக்கும் நிலை தோன்றும் என எச்சரிக்கை செய்தனர்.

தொடர்ச்சியாக பிரித்தானியாவாழ் ஈழத்தமிழ் சைவப் பெருமக்கள் பிரயோகித்த அழுத்தத்தின் விளைவாக, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் ரெஜினோல்ட் கூரேயின் கூட்டத்தை இரத்துச் செய்வதாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஊடாக சங்கதி-24 இணையத்தின் பிரித்தானிய செய்தியாளருக்கு லூசியம் சிவன் கோவில் நிர்வாகம் அறியத் தந்துள்ளது.

இதேபோன்று சுவிற்சர்லாந்திலும், பிரான்சிலும் ரெஜினோல்ட் கூரே மேற்கொள்ள இருக்கும் கூட்டங்களை அந்தந்த நாடுகளில் உள்ள புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்கள் புறக்கணித்து அவரது முகத்தில் கரிபூசுவார்கள் என்ற எதிர்பார்ப்பு உலகத் தமிழர்களிடையே மேலோங்கியுள்ளது.

அதிலும் பிரான்சு நாட்டில் ரெஜினோல்ட் கூரேயின் கூட்டத்திற்கு தமிழ் வணிகர்களை அழைப்பதற்கான ஏற்பாடுகளில் ஈடுபடும் தமிழரான வட மாகாண பிரதம செயலாளர் இலட்சுமணன் இளங்கோ அவர்களுக்கும், அவரைப் போன்று சிங்கள அரசுக்கு பரிவட்டம் கட்ட முற்படுவோருக்கும் தகுந்த பதிலை பிரான்சுவாழ் ஈழத்தமிழர்கள் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை வலுவடைந்துள்ளது.