சசிகலா அ.தி.மு.க.வின் புதிய பொதுச்செயலாளர் ஆவாரா?

புதன் டிசம்பர் 07, 2016

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வகித்து வந்த அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பதவியில் அவரது தோழி சசிகலா நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகத் தொடங்கி உள்ளது.

எம்.ஜி.ஆர். 1972-ம் ஆண்டு தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வை தொடங்கிய போது பொதுச்செயலாளர் பதவிக்கு முக்கியத்துவம் கொடுத்து விதிகள் உருவாக்கப்பட்டன.

எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாக 1981-ம் ஆண்டு அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்ட ஜெயலலிதாவுக்கு மேல்-சபை எம்.பி., கொள்கை பரப்புச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை எம்.ஜி.ஆர். வழங்கினார்.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு 1989-ம் ஆண்டு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பொறுப்பை ஜெயலலிதா ஏற்றார். அ.தி.மு.க.வில் இணைந்த 8 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுச்செயலாளர் பொறுப்பை அவர் ஏற்றார்.

அதன் பிறகு ஜெயலலிதா அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவியை வேறு யாருக்கும் விட்டுத் தரவில்லை. தன் கடைசி மூச்சு வரை அவர் சுமார் 27 ஆண்டுகள் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளர் என்றே அவரை அ.தி.மு.க. தலைவர்கள், நிர்வாகிகள் அழைத்து வந்தனர். இதனால் வேறு யாரும் அந்த பதவிக்கு நினைத்துக் கூட பார்த்தது கிடையாது.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் திடீர் மரணம் காரணமாக அ.தி.மு.க.வின் புதிய பொதுச்செயலாளராக யார் பொறுப்பு ஏற்பார் என்ற மிகப்பெரிய கேள்விக்குறி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியானது, ஆட்சியையும், கட்சியையும் நிர்வகித்து நடத்தும் அதிகாரம் மிக்க பதவி என்பதால் “புதிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர்” யார் என்ற எதிர்பார்ப்பு கட்சிக்குள்ளும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

ஜெயலலிதா உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகத் தொடங்கிய போதே அடுத்த பொதுச்செயலாளர் யார் என்ற பேச்சுக்களும், யூகங்களும், அதிகாரப்பூர்வ மற்ற தகவல்களும் வெளியாகத் தொடங்கின. நேற்று முன்தினம் இரவு இது தொடர்பான வதந்திகள் றெக்கைக் கட்டிப் பறந்தன.

அ.தி.மு.க.வில் பன்னீர் செல்வம் தலைமையிலான அணியினருக்கும், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் புதிய முதல்வர், பொதுச்செயலாளர் பதவிகளை பகிர்ந்து கொள்வதில் கடும் போட்டி நிலவுவதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா முன் வந்து இரு தரப்பினரிடையே சமரசம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.

தம்பித்துரைக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஒருமித்த கருத்து உருவானதாகவும் அதன்படி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியை தம்பித்துரை நிர்வகிக்கவும், முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் நிர்வகிக்கவும் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாகத் தான் திங்கட்கிழமை இரவு முதல்-அமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் எந்தவித சலசலப்பும் இல்லாமல் ஏற்றுக் கொண்டதாக ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

ஆனால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பொறுப்பை சசிகலா ஏற்பாரா? என்ற எதிர்பார்ப்பு அனைத்து மட்டத்திலும் தற்போது நிலவுகிறது. இது தொடர்பான அதிகாரப் பூர்வ அறிவிப்பு எப்போது வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சசிகலா, அ.தி.மு.க.வின் அடுத்த பொதுச்செயலாளர் ஆவார் என்பதற்கான அறிகுறிகள் நேற்றே உருவாகி விட்டதாக கூறப்படுகிறது. ராஜாஜி அரங்கில் ஜெயலலிதா உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த போது சோகம் ததும்ப சசிகலா நின்று கொண்டே இருந்தார்.

ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த வந்த ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, பிரதமர் மோடி, கவர்னர் வித்யாசாகர் ராவ் மற்றும் மாநில முதல்-மந்திரிகள் அனைவரும் சசிகலாவிடம் சென்று ஆறுதல் கூறினார்கள். பிரதமர் மோடி ஒருபடி மேலே சென்று சசிகலா தலையில் வைத்து தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறினார்.

இவையெல்லாம் அ.தி. மு.க.வை வழிநடத்தும் அடுத்தத் தலைவராக சசிகலாவை அடையாளம் காட்டுவது போன்ற இயல்பான தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தோற்றம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பதற்கு விடை எப்போது வரும் என்று தெரியவில்லை.

உண்மையில் இந்த வி‌ஷயத்தில் அதாவது பொதுச் செயலாளர் பதவியை ஏற்றுக் கொள்வதில் சசிகலா அவசரம் காட்ட மாட்டார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. ஆட்சியையும், கட்சியையும் எந்தவித குழப்பமும் இல்லாமல் அமைதியாக, சுமூகமாக கொண்டு செல்வதற்கான செயல்பாடுகளுக்கே சசிகலா முக்கியத்துவமும் முன்னுரிமையும் கொடுப்பார் என்று கூறப்படுகிறது.

அ.தி.மு.க.வில் பதவிக்காக குழப்பம் வந்து விடக்கூடாது என்பதில் சசிகலா மிகவும் தெளிவாக இருப்பதாகவும் எனவே அவர் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள் உள்பட அனைத்து தரப்பை சேர்ந்தவர்களையும் அணுசரித்து ஒருங்கிணைத்து செல்வார் என்று பெயர் தெரிவிக்க விரும்பாத மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இதற்காக சசிகலா ஒரு புதிய திட்டத்தை வைத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அ.தி.மு.க.வின் பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள் இந்த மாதம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் புதிய பொதுச்செயலாளர் தேர்ந்து எடுக்கப்படுவார். அப்போது பொதுச் செயலாளர் பதவியை தம்பித்துரைக்கு வழங்க சசிகலா முன்வரக் கூடும் என்று சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான தம்பித்துரை தற்போது பாராளுமன்ற எம்.பி. ஆகவும், துணை சபாநாயகராகவும் உள்ளார். கொங்கு மண்டலத்தின் பிரதிநிதிகளில் அவர்தான் பிரதானமானவராகவும் உள்ளார். எனவே கட்சிக்குள் சலசலப்பு ஏற்படுவதை தவிர்க்க இப்போதைக்கு பொதுச்செயலாளர் பொறுப்பை தம்பித்துரைக்கு வழங்குவார்கள் என்று கூறப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் பதவியையும், தம்பித்துரைக்கு பொதுச்செயலாளர் பதவியையும் பிரித்து கொடுத்து விட்டு அவர்கள் இருவரையும் சசிகலா பின்னணியில் இருந்து இயக்குவார் என்றும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் ஆட்சியையும், கட்சியையும் ஆலோசகர் என்ற நிலையில் இருந்து வழி நடத்த முடியும் என்று சசிகலா கருதுவதாக கூறப்படுகிறது.

இதில் ஏதேனும் சர்ச்சைகள் எழும்பட்சத்தில் சசிகலா பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்க முன் வருவார் என்று அ.தி.மு.க.வினர் சொல்கிறார்கள். எனவே பொதுச்செயலாளர் பதவியை ஏற்க சசிகலா அவசரம் காட்ட மாட்டார் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இதற்கிடையே ஆட்சியிலும், கட்சியிலும் எடுக்கப்படும் அனைத்து முக்கிய முடிவுகளும் சசிகலாவை சுற்றியே இருக்கும். ஆகையால் சசிகலா முடிவுகள் எடுக்கும் வி‌ஷயத்தில் எப்படி நடந்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அ.தி.மு.க. மூத்த அமைச்சர் ஒருவர் கூறிய வி‌ஷயத்தில் எப்படி நடந்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அ.தி.மு.க. மூத்த அமைச்சர் ஒருவர் கூறியதாவது:-

“சசிகலா இனி எந்த முடிவு எடுத்தாலும் தனது கணவர் நடராஜன் மற்றும் சகோதரர் வி.கே.திவாகரன் ஆகிய இருவரிடமும் ஆலோசனை பெற்றே முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது. அ.தி.மு.க. கட்சி விவகாரங்கள் திவாகரனுக்கு நன்கு தெரியும். எனவே கட்சி நிர்வாக முடிவுகளை எடுக்கும் போது திவாகரனை துணைக்கு அழைத்துக் கொள்வார்.

அதுபோல ஆட்சி வி‌ஷயத்தில் நடராஜனிடம் யோசனை கேட்டு சசிகலா செயல்பட வாய்ப்பு உள்ளது. ஏனெனில் மத்திய அரசில் உள்ள மூத்த அதிகாரிகள், அரசியல்வாதிகள் அனைவருடனும் நடராஜனுக்கு நல்ல தொடர்பு இருக்கிறது. அந்த நெட்வொர்க் தொடர்பை பயன்படுத்தி நடராஜன் உதவி பெற்று ஆட்சி தொடர்பான நிர்வாக முடிவுகளை சசிகலா எடுக்கக்கூடும்”.

இவ்வாறு அந்த மூத்த அமைச்சர் கூறினார். தற்போதைய சூழ்நிலையில் அ.தி.மு.க.வில் ஜெயலலிதா விட்டுச்சென்றுள்ள இடத்துக்கு சசிகலா வரும் வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளது. ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை ஆட்சியிலும், கட்சியிலும் சசிகலாவுக்கு எந்த பொறுப்பும், பணியும் கொடுக்கவில்லை.

“தோழி” என்ற அந்தஸ்தில் மட்டுமே சசிகலாவை ஜெயலலிதா வைத்திருந்தார். ஆனால் கால சுழற்சி காரணமாக அ.தி.மு.க. ஆட்சியையும், கட்சியையும் சுமூகமாக கொண்டு செல்ல வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு சசிகலா மீது தாமாகவே விழுந்துள்ளது.

இந்த நிலையில் அவர் பொதுச்செயலாளர் பதவியை ஏற்று நிர்வாகம் செய்வாரா? அல்லது பின்னணியில் இருந்து இயக்குவாரா என்பதுதான் அனைவரது மனதிலும் மிகப்பெரிய கேள்விக்குறியாக எதிரொலித்தப் படி உள்ளது. இந்த கேள்விக்கு மிக விரைவில் விடை தெரிய வாய்ப்புள்ளது.