சட்டக்கல்வி - வழக்கறிஞர் பதிவு உயர்நீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது - தொல்.திருமாவளவன்

வெள்ளி அக்டோபர் 09, 2015

சட்டக்கல்வி பயின்று, வழக்கறிஞராகப் பதிவு செய்வது தொடர்பாக தொடுக்கப்பட்ட பொதுநல வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் அளித்துள்ள தீர்ப்பு பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

 

குற்றப் பின்னணியில் உள்ளவர்கள் சட்டம் பயின்று வழக்கறிஞர்களாகப் பதிவு செய்துகொள்வதாகவும், அதனால், நீதித்துறையே குற்றமயமாகிவிட்டதாகவும், கடந்த 30 ஆண்டுகளில் நீதித்துறையின்  நன்மதிப்புக்குப் பெரும் பாதிப்பு நேர்ந்துவிட்டதாகவும் அத்தீர்ப்பு கூறுகிறது. அத்துடன், அடிப்படைக் கல்வித் தகுதியும் இல்லாமல் சட்டக் கல்விக்கான பட்டங்களை விலைகொடுத்து வாங்கி வழக்கறிஞர்களாக நீதித்துறைக்குள் நுழைவதால் நீதிமன்றத்தின் இயல்புநிலையைச் சீர்குலைக்கும் வகையில் நீதிமன்றப் புறக்கணிப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் நீதிமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுவதாகவும் இதனை மாநில வழக்கறிஞர்கள் பேரவையின் தலைவர்கள் கண்டுகொள்வதில்லை எனவும் சுட்டிக்காட்டியிருப்பதோடு, மத்திய அரசு இதில் தலையிட வேண்டுமெனவும், கடந்த சில பத்தாண்டுகளில் வழக்கறிஞர்களாகப் பதிவுசெய்து கொண்டவர்களின் அங்கீகாரத்தை ரத்துசெய்யவேண்டுமெனவும் அத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.  

 


மூன்றாண்டுகால சட்டக் கல்விமுறையை ரத்துசெய்ய வேண்டுமெனவும், ஐந்தாண்டுக்கால சட்டக்கல்வி முறையை தொடங்கவேண்டுமெனவும், அதுவும் 21 வயதிற்குள்ளாக படிக்கவேண்டுமெனவும், சட்ட வரையறைகளைக் கொண்டுவரவேண்டுமெனவும் அத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. குற்றப்பின்னணிக்கு என்ன வரையறை என்பதை உயர்நீதிமன்றத் தீர்ப்பு தெளிவுபடுத்தவில்லை. நீதிமன்றத்தால் ஒருவர் தண்டிக்கப்பட்டிருந்தால் அவரை குற்றப் பின்னணி உடையவர் என்று கூறலாம். ஆனால், ஒருவர் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தாலேயே அவரை குற்றப் பின்னணி உள்ளவர் என்று கருதுவதும் அதன்படி அவர் சட்டக்கல்வியை பெறமுடியாது என்று தடுப்பதும் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக ஏராளமான பொய் வழக்குகள் புனையப்படுகின்றன. அவ்வாறு, ஒருவர் மீது முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்வதை மட்டுமே வைத்துக்கொண்டு அவர் குற்றப்பின்னணி உள்ளவர் என்று அவர் விரும்பும் சட்டக் கல்வியைப் படிக்கவிடாமல் தடுப்பது ஒருவரின் கல்வி உரிமைக்கு எதிரானதாகும். 

 


அத்துடன், தரமில்லாத கல்வி நிறுவனங்களின் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று வழிகாட்டாமல் கல்வி பயில விரும்புவோருக்கு எதிராகத் தீர்ப்பு என்னும் பெயரால் நெருக்கடிகளை ஏற்படுத்துவது எவ்வகையிலும் ஏற்புடையதாக இல்லை.  தனக்கு வேண்டாத ஒருவரைப் பழிவாங்கவேண்டுமெனில் அவர் மீது பொய் வழக்குகளைப் புனைந்து கைது செய்யமுடியும். அதனைக்கொண்டு அவரை வழக்கறிஞராகப் பதிவுசெய்ய முடியாமல் தடுத்துவிடமுடியும். இதற்கு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏதுவாக அமைந்துள்ளது.  இதனால், ஏழை - எளிய ஒடுக்கப்பட்ட மக்களும் சிறுபான்மையினரும் சட்டக்கல்வியைப் பெறவும் வழக்கறிஞராகப் பதிவுசெய்ய இயலாத நிலை ஏற்படும்.

 

எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை அடிப்படையாகக்கொண்டு சட்டக் கல்வியை தடுக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபடவேண்டாமென வேண்டுகோள் விடுக்கிறோம். நீதித்துறை மட்டுமின்றி அரசின் எந்தத் துறையானாலும் குற்றப் பின்னணி உள்ளவர்களைப் புறந்தள்ள வேண்டுமென்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. சட்டத்தின்படி தண்டிக்கப்படாதவர்களை குற்றப் பின்னணி உள்ளவர்கள் எனப் பொய் வழக்குகளின் அடிப்படையில்  ஒருவர்மீது முத்திரைக்குத்த இத்தீர்ப்பு வாய்ப்பளித்துவிடக்கூடாது என்றும் விடுதலைச் சிறுத்தைகள் சுட்டிக்காட்டுகிறது.