சட்டப்புறம்பாக உருவாக்கப்படும் புதிய வகை அடக்குமுறைக் கட்டமைப்பின் வெளிப்பாடு!

Wednesday June 13, 2018

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் – எமது அருமைத் தோழர் பெ. மணியரசன் அவர்கள் மீது 10.06.2018 இரவு நடத்தப்பட்ட திட்டமிட்ட கொடும் தாக்குதல் பெரும் அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது.
 
தாக்குதலில் காயம்பட்டு தஞ்சை வினோதகன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தோழர் பெ.ம. அவர்களை நேரில் சந்தித்தும், தொலைப்பேசி வழித் தொடர்பு கொண்டும் நலம் பெற விழைவைத் தெரிவித்ததோடு, இத்தாக்குதலைக் கண்டித்து அறிக்கைகள் மற்றும் ஊடகச் செய்திகள் அளித்த தமிழர் தேசிய முன்னணித் தலைவர் திரு. பழ. நெடுமாறன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. வைகோ, மேனாள் நடுவண் அமைச்சர் திரு எஸ்.எஸ். பழனிமாணிக்கம், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் சீமான், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி. வேல்முருகன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச் செயலாளர் திரு. டி.டி.வி. தினகரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் தொல். திருமாவளவன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் திரு. ஒரத்தநாடு குணசேகரன், தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு. களஞ்சியம், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் திரு. குடந்தை அரசன், தமிழக மக்கள் புரட்சிக் கழகத் தலைவர் திரு. அரங்க குணசேகரன், தமிழ்நாடு உழவர் பேரியக்கம் (பா.ம.க.) தலைவர் திரு. ஆலைய மணி, மேனாள் சட்ட மன்ற உறுப்பினர் (பா.ம.க.) திரு. தருமபுரி வேலுச்சாமி, பச்சைத் தமிழகம் கட்சித் தலைவர் முனைவர் சுப. உதயக்குமார், திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், காங்கிரஸ் கட்சி தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. தி. கிருட்ணசாமி வாண்டையார், மூத்த வழக்கறிஞர் தஞ்சை ஆர். இராமமூர்த்தி, பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் கோ. சுந்தர்ராசன், தமிழ்த்தேச மக்கள் கட்சித் தலைவர் வழக்கறிஞர் பா. புகழேந்தி, மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் சி. ராஜூ, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன், மனித நேய சனநாயகக் கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, எஸ்.டி.பி.ஐ. தலைவர் திரு. தெகலான் பாகவி, தமிழர் கலை இலக்கியப் பேரவைத் தலைவர் இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர்கள் அமீர்,  கவுதமன், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் திரு. பி.ஆர். பாண்டியன், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. செயராமன், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம் தோழர் தியாகு, புரட்சிகர இளைஞர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் தோழர் சீராளன், மக்கள் பாதை அமைப்பாளர் திரு. வீர.மகா. இளங்கோவன், காவிரி உரிமை மீட்புக் குழு பொறுப்பாளர்கள் திரு. த. மணிமொழியன், ஐயனாபுரம் சி. முருகேசன், பொறியாளர் சு. பழனிராசன், மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், இந்திய சனநாயகக் கட்சித் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. சிமியோன் சேவியர்ராசு, தாளாண்மை உழவர் இயக்கம் பொறியாளர் க. திருநாவுக்கரசு, தமிழ்த்தேசியப் பாதுக்காப்புக் கழகத் தலைவர் வழக்குரைர் த. சு. கார்த்திகேயன், தஞ்சை பெறிய கோவில் உரிமை மீட்புக்குழு செயலாளர் திரு. வீரசிங்கம், வளமான தமிழகம் கட்சித் தலைவர் திரு. சரவணராசா, இளந்தமிழகம் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் இராசன் காந்தி, இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் கார்த்திக், தமிழர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ம. செயப்பிரகாச நாராயணன், மக்கள் தேசியக் கட்சித் தலைவர் திரு. சேம. நாராயணன், தமிழர் தாயகம் கட்சி திரு. செந்தில் மள்ளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்புத் தலைவர் திரு. கோ. சுகுமாரன், மனிதி ஒருங்கிணைப்பாளர் தோழர் செல்வி, தமிழ் சைவப் பேரவைத் தலைவர் திருவாட்டி. கலையரசி அம்மாள், “இளந்தமிழகம்” ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் மற்றும் இவ்வியக்கங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்கள், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் அனைவருக்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 

தோழர் பெ.ம. மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து, சட்டமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்த ஒரத்தநாடு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். என்று அன்போடு அழைக்கப்படும் திரு. ம. இராமச்சந்திரன் அவர்களுக்கும், பேரியக்கம் சார்பில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தெளிவாக உணர முடிந்த இந்தத் திட்டமிட்டத் தாக்குதலை வழிப்பறிக் கொள்ளைக்கானத் தாக்குதல் என்று திசைதிருப்புவதில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமியும், காவல்துறையும் முனைப்புக் காட்டுவது அதிர்ச்சி ஏற்படுத்துகிறது.

10.06.2018 இரவு ஒன்பது மணியளவில் தஞ்சை எப்.சி.ஐ. கிட்டங்கி அருகில், இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரில் பின்னால் அமர்ந்திருந்த ஒருவன் – தோழர் சீனிவாசனின்  இரு சக்கர ஊர்தியில் பின்னால் அமர்ந்து சென்ற தோழர் பெ.ம. அவர்களின் கையைப் பிடித்து வலுவந்தமாக இழுத்து கீழே தள்ளினான். அவரது கைப்பையை பிடித்து இழுக்கவோ பறிக்கவோ அவன் முயலவில்லை.

கீழே அவர் விழுவதை சற்று அருகில் சென்று பின்னால் பார்த்து உறுதி செய்து கொண்ட போதும், அவர் கைப்பையையோ பிற உடமைகளை கொள்ளையடித்துச் செல்ல அவன் வரவில்லை. காயம்பட்ட நிலையில், காவல்துறையில் புகார் தெரிவிப்பதிலும் சிகிச்சைப் பெறுவதிலும் கவனம் செலுத்தியதால் கைப்பையைத் தவறவிட்டதை கவனிக்கவில்லை.

மீண்டும் தோழர்கள் தாக்குதல் நடந்த இடத்திற்குச் சென்றபோது அந்தக் கைப்பை அங்கே இல்லை. பெ.ம. அவர்களின் அந்தக் கைப்பையை அந்தப் பாதையில் வந்த வேறு யாருமோ, அல்லது இதே நபர்களோ பிறகு எடுத்துச் சென்றிருக்கலாம். ஆனால், நடத்தப்பட்ட தாக்குதல் கைப்பையை கொள்ளையடிப்பதற்காக அல்ல என்பது தெளிவு!

தோழர் பெ.ம. அவர்கள் அடிக்கடி வெளியூர் பயணம் செல்பவர் என்பதால், அக்கம்பக்கத்தினருக்கோ பிறருக்கோ அது இயல்பான ஒன்று. அதை கவனித்துக் கொண்டிருப்பதற்கு வாய்ப்பில்லை. தாக்குதல் நடத்த வேண்டும் என்று திட்டமிடுபவர்கள் மட்டுமே அவரது நடமாட்டத்தை கவனிக்க வேண்டிய தேவை எழும். தோழர் பெ.ம. அவர்களின் பயணத் திட்டங்கள், ஊர்திப் பயணங்கள் ஆகியவற்றை உளவுத்துறை கவனித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று!

எனவே, பெ.ம. மீது நடத்தப்பட்ட இத்தாக்குதல் கவலையையும் சினத்தையும் ஏற்படுத்துகிறது. பல வினாக்களையும் ஏற்படுத்துகிறது. கைப்பையை பறிப்பதற்காக நடத்தப்பட்ட வழிப்பறித் தாக்குதல் என இவ்வழக்கை முடிப்பதற்குக் காவல்துறை காட்டும் முனைப்பு நமது ஐயத்தை அதிகப்படுத்துகிறது.

தூத்துக்குடிப் படுகொலை நிகழ்ந்த விதமும், அதுகுறித்து அரசும் காவல்துறையும் பா.ச.க.வினரும் அவர்களது ஊதுகுழல்களும் செய்துவரும் பொய்ப் பரப்புரையும், அதன்பிறகு நடைபெற்றுவரும் சனநாயக முறைமைக்கு எதிரான கெடுபிடிகளும் தமிழ்நாட்டில் புதிய வகை அடக்குமுறைக் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருவதை எடுத்துக் காட்டுகின்றன.

ஓ.என்.ஜி.சி. எதிர்ப்பு, நெடுவாசல் உள்ளிட்ட பல போராட்டங்களிலும் அரசும் காவல்துறையும் “வெளி ஆட்கள்” – “உள்ளக மக்கள்” என்ற செயற்கையான வகைப் பிரிவினையை திட்டமிட்டு ஏற்படுத்தி, போராட்டத்திற்கு வழிகாட்டுபவர்களையும் மக்களையும் துண்டாடும் செயல்பாட்டில் இறங்கியதைப் பார்த்தோம். இந்த “வெளி ஆட்கள்” என்பதை அடுத்தடுத்து “தேச விரோதிகள்”, “வளர்ச்சிக்கு எதிரானவர்கள்”, “வெளிநாட்டுக் கையாட்கள்”, “தீவிரவாதிகள்”, “சமூக விரோதிகள்” என்று தங்கள் வசதிக்கேற்ப பட்டியலிட்டு தனிமைப்படுத்தி அவர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டனர். அடுக்கடுக்கான வழக்குகளைப் புனைந்தனர்.

இந்த அடக்குமுறை தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் இன்னொரு கொடிய கட்டத்தை அடைந்தது. சுட்டுக்கொல்லப்பட்ட 13 பேரில் பெரும்பாலோர் இப்போராட்டத்தில் முனைப்பு காட்டிய முன்னணிச் செயல்பாட்டாளர்கள் ஆவர். அவர்கள் குறி வைத்து கொல்லப்பட்டுள்ளனர்.

கல்லெறியிலும் தடியடியிலும் துப்பாக்கிச் சூட்டிலும் சீருடை அணியாதவர்களும், அடியாட்களும் காவல்துறையால் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

இதிலும், “வெளி ஆட்கள்” என்ற வகையினத்தை காவல்துறை கட்டமைக்கிறது. “நெடுவாசலில் பார்த்த பல முகங்களை இந்த ஸ்டெர்லைட் போராட்டத்திலும் பார்த்தேன்” என்று டி.ஐ.ஜி. அறிக்கை கூறுவது, இத்தோடு இணைத்துப் பார்க்கத்தக்கது.

நெடுவாசல் போராட்டம் வன்முறையற்றப் போராட்டம் என்று காவல்துறையே ஒத்துக் கொள்கிறது. ஆனால், அந்தப் போராட்டத்தைத் தூண்டியவர்கள் “வெளி ஆட்கள்” என்று வரையறுக்கப்படுகிறது. அங்கும் அவர்கள் “தேச விரோதிகள்” – “நாட்டு வளர்ச்சிக்கு எதிரானவர்கள்” என்று குற்றக்கூண்டில் நிறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு “வெளி ஆட்கள்” என்று போராட்டத்தில் துணை நிற்பவர்களை வகைப்படுத்தும் அரசும், காவல்துறையும் யாருக்காகக் களமிறங்குகிறார்கள்? ஸ்டெர்லைட் முதலாளி அனில் அகர்வால் உள்ளூர்க்காரரா? ஓ.என்.ஜி.சி. உள்ளூர் நிறுவனமா? ஜெம் லேபரட்டரீஸ் உள்ளூர் முதலாளியா? தி கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் உள்ளூர்க்காரருக்கு சொந்தமானதா?

பேரழிவுக்கும் வாழ்வுரிமைப் பறிப்புக்கும் எதிராகப் போராடும் மக்களுக்கு துணை நிற்போர், வழிகாட்டுவோர் மட்டும் “வெளி ஆட்கள்” என்று தனிப்படுத்தப்படுகிறார்கள். நன்னிலத்தில் ஓ.என்.ஜி.சி. குழாய்ப் பதிப்புக்கு எதிராகப் போராடிய இளையோரில், பக்கத்து ஊராட்சியை சேர்ந்தவர் கூட “வெளியூர்க்காரர்” என்று, வெளி ஆளாகத் துண்டிக்கப்பட்டார்.

இப்போது, அதிலும் அடுத்த கட்டத்திற்கு தமிழ்நாடு அரசு சென்றுவிட்டது. சென்னை – சேலம் – பசுமை அழிப்புச் சாலைத் திட்டத்தால் பாதிக்கப்படும் கிராம மக்கள் சாலை மறியல் செய்தால், அவர்கள் மீது கொடும் பிரிவுகளில் வழக்குத் தொடுத்து கைது செய்கிறது காவல்துறை! இவர்கள் காவல்துறை வரையறுப்புப்படியே ‘உள்ளக மக்கள்’ தான்! செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளிப்பவர் கூட கைது செய்யப்பட்டிருக்கிறார். இதில், அடுத்த வடிகட்டலை காவல்துறை செய்யத் தொடங்கியிருக்கிறது.

“பாதிக்கப்பட்ட மக்கள்” என்றால், யார் என்ற புதிய வரையறுப்பையே கொண்டு வந்திருக்கிறது. போராட்டத்தில் பங்கேற்கக்கூடிய கிராம மக்களில் நிலம் உள்ளவர்கள், வீடு உள்ளவர்கள், மனை உள்ளவர்கள், அதுவும் அவர்களது நிலம் – மனை – வீடு – இச்சாலை விரிவாக்கத் திட்டம் செல்லும் நபர்கள் மட்டுமே “பாதிக்கப்படும் உள்ளக மக்கள்” என்று அடுத்த நிலை வகைப்பாட்டில் இறங்கியுள்ளது, காவல்துறை!

இவ்வாறு மேலும் மேலும் மக்களைத் தனிமைப்படுத்தி, அவர்களுக்கு அறிவார்ந்த துடிப்புள்ள தலைமையோ – பெருந்தொகையான மக்களின் ஆதரவோ இல்லாமல் செய்துவிட்டு, அவர்களை அடக்கும்போது மட்டும் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் காவல்துறையினரைக் களமிறக்குகிறது. அப்போது, வெளி மாவட்டங்களிலிருந்தோ வெளிப்பகுதி காவல் நிலைய எல்லைகளிலிருந்தோ வரவழைக்கப்படும் காவல்துறையினர் “வெளி ஆட்கள்” அல்லர் என்பது காவல்துறையின் வரையறுப்பு!

வெளியிலிருந்து இம்மக்களுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்துப் பரப்பினாலும், அதுவும் தண்டனைக்குரிய குற்றமாக்கப்படுகிறது. தூத்துக்குடி படுகொலைக்குப் பிறகு, தூத்துக்குடி – திருநெல்வேலி – கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இணையங்களே துண்டிக்கப்பட்டு தகவல் தொடர்பற்ற தனித் தீவாக அம்மக்கள் மாற்றப்பட்டபோது, காவல்துறையினர் மட்டும் அத்தனைத் தகவல் தொடர்புகளோடும் செயல்பட்டுக் கொண்டிருந்தனர். இது, தமிழ்நாடு இதுவரை கண்டிராத அடக்குமுறையாகும்!

மக்களை செயல்பாட்டாளர்களிடமிருந்து தனிமைப்படுத்துவது, செயல்பாட்டாளர்களை குறிவைத்துத் தாக்குவது, அடுக்கடுக்கான பொய் வழக்குகளில் கைது செய்வது, பிணை பெறாமல் இருப்பதற்காக குண்டர் சட்டம் – தேசியப் பாதுகாப்புச் சட்டம் போன்ற சட்டங்களில் கைது செய்வது, சீருடை அணியாதவர்கள் மற்றும் அடியாட்களை வைத்துத் தாக்குவது என்ற புதிய வடிவத்தை இந்த அடக்குமுறை எட்டியுள்ளது.

அதன் ஒரு பகுதிதான், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.ம. மீதான திட்டமிட்ட தாக்குதல்!

தூத்துக்குடியில் போராடும் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து, “புதிய தலைமுறை” தொலைக்காட்சி கோவையில் “வட்ட மேசை விவாதம்” நடத்தியபோது நிகழ்ந்ததும் இந்தப் போக்கின் ஒரு பகுதிதான்!

தூத்துக்குடியிலும் மக்கள் போராட்டத்தின்போது, சிலர் வன்முறையைத் தூண்டினார்கள் என்று பா.ச.க. தலைவர் தமிழிசை சௌந்திரராசன் பேசியதற்கு மறுமொழியாக, கோவையில் சசிக்குமார் என்ற பாரதிய சனதாக் கட்சி செயலாளர் கொலையையொட்டி நடைபெற்ற வன்முறையை இயக்குநர் அமீர் சுட்டிக்காட்டியபோது, மிகப்பெரும் கலவரத்தில் பார்வையாளர் அரங்கிலிருந்த பா.ச.க.வினர் ஈடுபட்டதை நாடறியும்!

காவல்துறையினர் இருக்கும்போதே அமீர் மீது பா.ச.க.வினர் கொலை வெறித் தாக்குதலில் இறங்கினர். அதை ஊகித்துக் கொண்ட கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் – சட்டமன்ற உறுப்பினர் திரு. தனியரசு, இயக்குநர் அமீரை தனது காரில் அழைத்துச் செல்லவில்லை என்றால், அமீருக்கு என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க முடியவில்லை! அமீர் வந்த மகிழுந்தை பா.ச.க.வினர் தாக்கியதிலிருந்து அவர்களது கொலைவெறி எண்ணம் தெரிகிறது.

காவல்துறை கண்ணெதிரே கொலை வெறியாட்டத்தில் ஈடுபட்ட பா.ச.க.வினரை கைது செய்வதற்கு மாறாக, இயக்குநர் அமீர் மீதும், தனியரசு மீதும் மட்டுமின்றி, அந்நிகழ்ச்சியை நடத்திய “புதிய தலைமுறை” தொலைக்காட்சியின் மீதும் வழக்குத் தொடுத்துள்ளது காவல்துறை!

இதுவெறும் கருத்துரிமைக்கு எதிரான நடவடிக்கை மட்டுமல்ல, தமிழ்நாட்டின் அடக்குமுறை கட்டமைப்பு வகையில் புதிய வடிவம் எடுத்துள்ளது என்பதையே மேற்சொன்ன நிகழ்வுகள் காட்டுகின்றன. சட்டத்திற்குப் புறம்பாக சீருடை அணியாதவர்களையும் அரம்பர்களையும் கொண்டு குறிவைத்துக் கொலை செய்வது, குறிவைத்துத் தாக்குவது, பாதிக்கப்பட்டவர் மீதே அடுக்கடுக்கான வழக்குகள் தொடுப்பது என்ற புதிய வகை மாபியா கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது என்பதன் அறிகுறி இது!

ஏற்கெனவே, சமூக வலைத்தளங்களில் அரசின் திட்டங்களுக்கு எதிராக கருத்துப் பரப்புவோர் தாக்கப்படுவதும் கைது செய்யப்படுவதும் நிகழ்ந்து வருகிறது.

இவற்றையெல்லாம் இணைத்துப் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் தமிழ் இனத்திற்கான சனநாயக வெளி மிகப்பெரும் அளவுக்கு சுருக்கப்படுகிறது என்பதும், அரசியல் கட்சிகளுக்கு வெளியே நடக்கும் மக்கள் போராட்டங்களை நசுக்குவதற்கு சட்டத்தின் கேள்விகளுக்கு அப்பாற்பட்ட புதிய வகைக் கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது என்பதும் தெளிவாகிறது.

எனவே, தோழர் பெ. மணியரசன் அவர்களை திட்டமிட்டுத் தாக்கிய உண்மைக் குற்றவாளிகளை கைது செய்யக் கோருவது இந்த புதிய அடக்குமுறைக் கட்டமைப்பின் கண்ணியை அடையாளம் காட்டும் முயற்சியாகும்!

இவ்வாறான இச்சிக்கலின் ஆழத்தை உணர்ந்து கொண்டு, தமிழ்நாட்டின் அனைத்து சனநாயக ஆற்றல்களும், மக்கள் இயக்கங்களும் இந்த அடக்குமுறைக் கட்டமைப்பை தொடக்கத்திலேயே உடைத்தெறிய ஒன்றுபட்டுக் களம் காண வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 
 
( கி.  வெங்கட்ராமன் )
பொதுச்செயலாளர், தமிழ்த்தேசியப்பேரியக்கம்.
இடம் : சென்னை-78.