சட்டமும் வாழ்க்கையும்!!

வெள்ளி சனவரி 11, 2019

உங்களிற்குச் சொந்தமல்லாத ஒரு பெயரையோ, அல்லது ஒரு புகைப்படத்தினையோ பயன்படுத்துவது, சிறைத்தண்டனை மற்றும் பாரிய குற்றப்பணம் விதிக்கக்கூடிய குற்றமாகும்.

இணையதளங்களில், அல்லது, Facebook, whatsapp, Viber போன்ற சமூகத் தொடர்பாடல் மென்பொருளிகளிலும், நீங்கள் உங்கள் பெயரிற்குப் பதிலாக வேறொருவர் பெயரையோ, அல்லது உங்களுடைய படத்திற்குப் பதிலாக வேறொருவர் படத்தினையோ, உபயோகித்திருக்கக் கூடும்.

அந்த நபர் உங்களிற்கு எதிராக வழக்குத் தொடுத்தாலோ, அல்லது வெறுமனே காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாலோ, நீங்கள் குற்றவியற் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் ஆபத்து உள்ளது.

இதனால் மற்றவர்களின் அடையாளங்களையோ, உங்களது Facebook கணக்கிற்கு வேறொருவர் படத்தினையோ பயன்படுத்தாதீர்கள்.

அது நடிகர்களின் படங்களாக இருந்தாலும், நடவடிக்கை எடுக்கப்பட்டால் தண்டனை அதிகமாக்கப்படும். இதற்கு ஊடகங்களும் விதி விலக்கல்ல.

குற்றம்-
உள்ளகப் பாதுகாப்புச் சட்டம் Loppsi 2  இரண்டின் அடிப்படையில், குற்றவியற்சட்டம் (Code pénal) 226-4-1 இன் கீழ், ஒருவருடைய அடையாளத்தைத் தவறாகப் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இந்தச் சட்டம், வேறொருவருடைய பெயரைப் பயன்படுத்தி, இணையத்தில், பொருட்களை வாங்குவது முதற்கொண்டு  வங்கிக்கணக்குக் கொள்ளை தொடர்பாகவே உருவாக்கப்பட்டது. பின்னர், இது வேறு பல பிரிவுகளிற்கு விரிவாக்கப்பட்டது.

* ஒருவருடைய அடையாளத்தினையோ, அவருடைய பெயர், படம், விலாசம், தொலைபேசி இலக்கம் போன்ற ஏதாவது ஒன்றைப் பயன்படுத்துதல்.

* ஒருவருடைய அடையாளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், அவருடைய நிம்மதியைக் கெடுத்தல், மன உளைச்சலிற்கு உள்ளாக்குதல்,

அவருடைய கெளரவத்திற்கு மாசு கற்பித்தல்.ஆகிய பிரிவுகளும் இணைக்கப்பட்டுள்ளது.

இன்று இது பயங்கரவாதத் தடைச்சட்டத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது.

தண்டனை-

இந்தக் குற்றங்களிற்கு, ஒரு வருடச் சிறைத்தண்டனையும், 15.000 முதல் 75.000 யூரோ வரையான குற்றப்பணமும் விதிக்கப்படும்.

இப்படி தண்டனை விதிக்கப்பட்டால், அது உங்களின் நற்சான்றுப் பத்திரத்தில்  (CASIER JUDICIAIRE NATIONAL) குற்றமாகப் பதிவு செய்யப்படும்.

இதனால் அரசாங்க வேலைகளில், உதாரணத்திற்கு விமானநிலையங்களிலோ அல்லது வேறு முக்கிய பணிகளிலோ, பணிபுரிவதற்குத் தடைவிதிக்கப்படும்.

முறைப்பாடு செய்யும் முறை-

குற்றம் செய்தால் என்ன தண்டனை என்பதைப் பார்த்தோம். இனி மேற்குறிப்பிட்ட வகையில், உங்கள் அடையாளம் திருடப்பட்டால், எவ்வாறு முறையிடுவது என்பதைப் பார்ப்போம்.

இணையத்திலோ, சமூகவலைத்தளத்திலோ, உங்களது பெயரோ, அல்லது படமோ, தவறாகப் பயன்படுத்தப்பட்டிருந்தாலோ, அதனை அப்படியே பதிவு செய்து (captures d'écran), அந்த இணையமுகவரியையும் பதிவு செய்து, காவல் துறையினரிடம் வழங்கி L'usurpation d'identité  எனும் அடிப்படையில் முறைப்பாடு செய்யமுடியும்.

தற்போது இத்தகைய முறைப்பாடுகளின் முதற்கட்டப் பதிவினை நீங்கள் இணையத்தளத்திலேயே செய்த கொள்ள முடியும்.

https://www.pre-plainte-en-ligne.gouv.fr/ எனும் தளத்தின் மூலம் உங்களின் முறைப்பாட்டைப் பதிவு செய்து, காவல்நிலையத்திற்குச் செல்லும் நேரத்தினையும் முற்கூட்டியே முற்பதிவு செய்து கொள்ள முடியும்.

இதனால் வீணான காத்திருப்பு நேரத்தினை மிச்சப்படுத்திக் கொள்ளலாம். இணையத்தில் முறைப்பாடு செய்யும் போது உங்களின் அடையாளத்தினையும் உறுதிப்படுத்தல் வேண்டும்.

அடையாள அட்டைப் பிரதி வழங்குதல் பொருத்தமானது.

காவற்துறையினரின் முறைப்பாட்டுடன், இணையசேவை வழங்குநர், குறிக்கப்பட்ட சமூகவலைத்தளங்கள், ஆகியவற்றிலும் மேலதிக முறைப்
பாடுகளைச் செய்ய முடியும்.

இந்தக் குற்றம்Facebook இல் செய்யப்பட்டிருந்தால்
https://www.facebook.com/help/contact/169486816475808  என்ற சுட்டியிலும்
Twitter இல் செய்யப்பட்டிருந்தால் https://help.twitter.com/fr/safety-and-security/report-twitter-impersonation என்ற சுட்டியிலும்மற்றும் வேறு மென்பொருளிகளில் அதற்குரிய இணையதளப்பிரிவிலும் முறைப்பாடுகளைச் செய்ய முடியும்.

சோழ.கரிகாலன்

நன்றி: ஈழமுரசு