சட்டவிரோதமாக இடம்பெறும் மணல் அகழ்வை தடுக்க முடியவில்லை – பிரதேச செயலாளர்

Wednesday July 11, 2018

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வடமேற்காக 34 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப் பிரிவில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க முடியவில்லை என பிரதேச செயலாளர் ராஜ்பாபு தெரிவித்தார்.

பூலாக்காடு, வாகனேரி ஆகிய கிராம சேவகர் பிரிவிலுள்ள குளத்துமடு, சந்தியாத்துப்பாலம், பெட்டைக்குளம் ஆகிய இடங்களில் இருந்து மணல் அகழ்வு இடம்பெறுகிறது. புணானை கிழக்கு கிராம சேவகர் பிரிவில் மணல் அகழ்வுக்கான அனுமதி வழங்கப்பட்ட போதிலும், வழங்கப்பட்ட அனுமதியை விட கூடுதலான அளவு ஒரு நாளைக்கு அகழ்வு செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இப்பகுதி மக்கள் பொருளாதார ரீதியாக மிகவும் மோசமாக பின்னடைவிலுள்ள உள்ள இங்குள்ள மணல் சட்டவிரோதமாக அகழ்வு செய்யப்படு வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு மணல் அகழ்வு செய்யப்படுவதனால் மழைக் காலங்களில் இப்பகுதி அதிகளவான நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக பலதடவைகள் அரச அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் இதுவரையில் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக பிரதேச செயலாளிடம் வினவிய போது, தாம் இப்பகுதியில் மணல் அகழ்வு செய்வதற்கு எவ்விதமான அனுமதியும் வழங்கவில்லை. சட்டத்திற்கு முரணாக இடம்பெறும் மணல் அகழ்வை நிறுத்தக் கோரி பொலிஸாருக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்தியும் இதுவரையில் எவ்விதமான நடவடிக்கையும் இடம்பெறவில்லை.

கிராம மக்களின் கோரிக்கைக்கு அமைவாக இப்பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வை தடுப்பதற்கு மாவட்டச் செயலகம் ஊடாக விசேட அதிரடிப்படையினரின் உதவியைக் கோரவுள்ளதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.