சட்டவிரோத குடியேறிகளுடன் ஆட்கடத்தல்காரர் கைது!

ஞாயிறு சனவரி 06, 2019

தாய்லாந்திலிருந்து மலேசியாவுக்குள் 14 சட்டவிரோத குடியேறிகளுடன் நுழைய முயன்ற ஆட்கடத்தல்காரர் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய காவல்துறை தெரிவித்துள்ளது. 

இந்த 14 குடியேறிகளும் மியான்மரைச் சேர்ந்தவர்கள் என்றும் அதில் 9 ஆண்களும் 3 பெண்களும் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இப்போது கைது செய்யப்பட்டுள்ள நபர், மலேசிய எல்லையில் உள்ள வேலியை அடைவதற்கு முன்  இருக்கும் காட்டுவழியை நன்கு அறிந்தவர் என காவல்துறை தெரிவிக்கின்றது. மலேசியாவுக்குள் ஒரு சட்டவிரோத குடியேறியை கொண்டு வர சுமார் 7 ஆயிரம் ரூபாயை (400 மலேசிய ரிங்கிட்) அந்நபர் பெற்றுள்ளார். 

ஆட்கடத்தலில் ஈடுபட்ட அந்நபர் தாய்லாந்தைச் சேர்ந்தவர் என உறுதிச் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், குடியேறிகள் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அந்நபர் விசாரிக்கப்பட்டு வருகிறார். 

அதுமட்டுமின்றி, கஞ்சாவை மருத்துவப் பயன்பாட்டிற்கு உபயோகிப்பது குற்றமல்ல என போதைப் பொருட்கள் சட்டத்தில் தாய்லாந்து அரசு திருத்தம் கொண்டு வந்துள்ள நிலையில், கஞ்சா மற்றும் போதைப் பொருள் கடத்தலை தடுக்கும் விதமாக மலேசியா- தாய்லாந்து எல்லையில் மலேசிய காவல்துறை கண்காணிப்பு நடவடிக்கையினை  தீவிரப்படுத்தியுள்ளது.