சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர் கைது

Tuesday July 17, 2018

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்னமுகத்துவாரம் கடலை அண்டிய பிரதேசத்தில் அரச திணைக்களங்களின் முன் அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் தாவரங்களை அழித்ததுடன் மண்மேடுகளை சமப்படுத்தி சிறிய கொட்டிலையும் அமைத்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் மண்மேட்டினை சமப்படுத்த பயன்படுத்தப்பட்ட டோசர் வாகனமும் அக்கரைப்பற்று பொலிஸாரால் நேற்று காலை கைப்பற்றப்பட்டது.

குறித்த பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மண்மேடுகள் சமப்படுத்தப்படுவதாக பொதுமக்கள் வழங்கிய தகவலை அடுத்து அவ்விடத்திற்கு விரைந்த ஆலையடிவேம்பு பிரதேச செயலக கரையோர பாதுகாப்பு உத்தியோகத்தர் கே.எஸ். பாபுஜி மற்றும் காணி உத்தியோகத்தர்களும் மண்மேடு சமப்படுத்தும் பணியை இடைநிறுத்தியதுடன் குறித்த பணியை மேற்கொள்தற்கான கரையோரப்பாதுகாப்பு திணைக்களத்தின் அனுமதிக் கடிதத்தினை சம்பந்தப்பட்டவரிடம் கோரினர்.

ஆனாலும் குறித்த நபரிடம் எவ்வித அனுமதியும் இல்லாத நிலையில் மண்மேடு சமப்படுத்தப்பட்ட பகுதிக்குரிய உறுதி தன்னிடம் இருப்பதாக கூறி ஆவணத்தையும் காட்டினார். ஆனாலும் குறித்த ஆவணம் தொடர்பில் ஆராயப்பட வேண்டும் எனவும் எவ்வாறாயினும் கடற்கரையை அண்டிய பகுதியில் எக்காரியம் செய்வதாயினும் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் முன் அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் உத்தியோகத்தர்களால் தெரிவிக்கப்பட்டது.

 இதேவேளை அவ்விடத்திற்கு வருகை தந்த அக்கரைப்பற்று இராணுவ உயரதிகாரிகளிடமும்  நிலைமை தொடர்பில் விளக்கப்பட்டது. விடயத்தை  அறிந்து கொண்ட இராணுவ உயரதிகாரிகள் அக்கரைப்பற்று பொலிஸாருக்கும் தகவலை வழங்கினர்.  

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அக்கரைப்பற்று பொலிஸார் மண்மேட்டினை சமப்படுத்த பயன்படுத் தப்பட்ட வாகனத்தை கைப்பற்றியதுடன் சாரதியையும் கைது செய்தனர்.

மேலும் அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த சிறிய கொட்டிலையும் உடனடியாக அகற்றினர்.