சண்டை நிறுத்தத்தை பயங்கரவாதிகள் சீர்குலைக்கின்றனர்: மெகபூபா முப்தி

Wednesday June 06, 2018

ரம்ஜானை முன்னிட்டு பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை நிறுத்தி வைப்பதாக உள்துறை அமைச்சகம் அறிவித்தது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த அறிவிப்பை காஷ்மீரில் உள்ள அரசியல் தலைவர்கள் வரவேற்று இருந்தனர். 

இந்த நிலையில், சுமூக நடவடிக்கையையும் மீறி ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நேற்று இரவு கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் எந்த வித உயிர்சேதமும் ஏற்படவில்லை. 

இந்த நிலையில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை கண்டித்துள்ள ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி மெகபூபா முப்தி கூறியுள்ளதாவது:- “ சண்டை நிறுத்தம் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு மிகப்பெரும் நிவாரணத்தை அளிப்பதை நாங்கள் கூட கவனித்து வருகிறோம். 

ஆனால், பயங்கரவாதிகள் தொடர்ந்து தங்கள் வன்முறை செயல்களை தொடர்வதையும் தற்போதுள்ள சூழலை சீர்குலைக்க கடுமையாக முயற்சிப்பதையும் பார்க்க முடிகிறது. தங்களின் பயனற்ற செயலை விரைவில் உணர்வார்கள் என்று நான் நம்புகிறேன்” இவ்வாறு தெரிவித்து உள்ளார்.