சனல் 4 - திரையிட்டால் தமிழர்கள் அந்நியப்படலாம்!

வெள்ளி சனவரி 13, 2017

சிறீலங்காவின் இறுதியுத்தத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை சர்வதேச மட்டத்தில் அம்பலப்படுத்துவதற்கும், ஐ.நா விசாரணை ஒன்று ஏற்படுத்துவதற்கும் முக்கிய காரணிகளின் ஒன்றாக அமைந்ததாகக் கருதப்படும் சனல் 4 வின் ஆவணப்படத்தினைத் தற்போது சிறிலங்காவில் திரையிட்டால் தமிழர்கள் அந்நியப்படுத்தப்படலாம் என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

பிரிட்டனிற்கு உத்தியோகபூர்வபயணமொன்றினை மேற்கொண்டுள்ள சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, லண்டன் சத்தம் ஹவுசில் நேற்று முன்தினம் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல் ஒன்றிலேயே இதனைத் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் சர்வதேச இராஜதந்திரிகள் ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போன்றோர் மத்தியில் உரையாற்றிய அவர் ஆட்சிமாற்றத்தின் பின்னர் நிலைமைகள் எதிர்பார்க்கப்படுவது போல், நூற்றுக்கு நூறுவீதம் இல்லாவிட்டாலும், அரசாங்கம் மனித உரிமை நிலைமைகள், பொருளாதார அபிவிருத்து மற்றும் நல்லாட்சி போன்ற விடயங்களில் கணிசமான முன்னேற்றங்களைக் கொண்டுவந்திருப்பதாகத் தெரிவித்தார்.

இங்கு கலந்துகொண்டிருந்த சனல் 4 தொலைக்காட்சியின் நோ பயர் ஸோன் ஆவணப்படத்தின் இயக்குனர் கலம் மக்ரே சிறீலங்காவில் உண்மையான நல்லிணக்கம் ஏற்படவேண்டுமாயின் தமிழ் மக்கள் மீது அரச படையினரால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் உள்ளிட்ட ஏனைய குற்றங்களை சிங்கள மக்கள் பார்வையிடவேண்டும் என்றும், தனது ஆவணப்படத்தினை சிறிலங்காவில் திரையிடுவதற்கு ஏன் சிறீலங்கா அரசு தயங்குகிறது என்று அமைச்சர் மங்கள சமரவீரவிடம் கேட்டார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் சமரவீர இந்த ஒளிநாடாவை சர்ச்சைக்குள்ளான காலப்பகுதியிலேயே தான் சிறீலங்காவில் பார்த்ததாகவும், தற்போது இனங்களுக்கிடையிலான நல்லிணக்க முயற்சிகளில் அரசு தீவிரமாக இறங்கியிருக்கும் வேளையில், இந்த ஒளிநாடா திரையிடப்பட்டால் அது தமிழர் அரசாங்கத்திடமிருந்து அந்நியப்பட அல்லது விலகிச் செல்ல வழிவகுக்கும் என்று அஞ்சுவதாகவும் தெரிவித்தார்.

ஆனாலும், இந்த ஆவணப்படத்தினை சிறீலங்காவில் திரையிடுவதற்கான ஒரு காலம் விரைவில் வரும் என்று தான் நம்புவதாகவும் அமைச்சர் சமரவீர தெரிவித்தார்.

சிறீலங்காவிற்கு மீளவும் பயணம் செய்வதற்குக் கலம் மக்ரேக்கு அழைப்பு விடுத்த அவர் கடந்த 18 மாதங்கள் என்ற இந்தக் குறுகியகாலப்பகுதிக்குள், நாம் கணிசமானளவு  மாற்றத்தினை வடக்கில் மேற்கொண்டிருக்கிறோம்.

அங்கே நிலைமைகள் 100 க்கு 100 வீதம் சரியாக இருக்காவிட்டாலும் கூட இராணுவம் அங்கு நிலைகொண்டிருக்கின்ற போதிலும் அவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.