சமூக விரோதிகள் போராட்டத்தில் ஊடுருவினார்களாம்!

வியாழன் மே 24, 2018

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக முதல்வரை சந்திக்க முடியவில்லை என ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், பரபரப்புக்காக ஸ்டாலின் அப்படி கூறுகிறார் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

11 மணிக்கு அலுவல் ஆய்வு கூட்டம் நடப்பதாக சபாநாயகர் அறிவித்தார். அதன் பெயரில் நான் கலந்து கொண்டேன், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உறுப்பினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போதே திடீரென எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் திடீரென எழுந்து சென்றுவிட்டார். 

சிறிது நேரத்திற்கு, பின்னர் முதல்வரை சந்திக்க முடியவில்லை என ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். ஆனால், கூட்டத்தில் அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஸ்டாலின் பேசியுள்ளார். 2013-ம் ஆண்டில் ஸ்டெர்லைட் ஆலை மீது மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் மின் இணைப்பை துண்டித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்து. சில நிபந்தனைகளுடன் அந்நிறுவனத்திற்கு பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. இதன் மீதான மேல்முறையீட்டு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. ஆலையின் பணியை நிறுத்த தமிழக அரசு தொடர்ந்து முயற்சி நடந்து வருகிறது.

ஆனால், எதிர்க்கட்சிகள் அப்பாவி மக்களை தூண்டி விட்டு இத்தகைய போராட்டத்தை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடந்தது விரும்பத்தகாத சம்பவம்.

அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சில பேர் செயல்பட்டு கலவரத்தை ஏற்படுத்தி அப்பாவி மக்களை பலியாக்கிவிட்டனர். வன்முறை கட்டுக்கடங்காமல் போனதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.இவ்வாறு முதல்வர் கூறினார்.