சம்பந்தன் துரோகத்தனத்தை மறைக்க முள்ளிவாய்க்கால் நிகழ்வில் கலந்துகொண்டார்!

சனி மே 20, 2017

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தனது துரோகத் தனங்களை மறைப்பதற்காகவே முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வில் கலந்துகொண்டார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் அரசியலை மாகாணசபைக்குள் முடக்கும் செயற்பாடுகளையே சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் மேற்கொண்டுவந்ததாகவும், அதற்கு விடுதலைப் புலிகள் ஒருபோதும் இணங்கவில்லையெனவும், இதன் காரணமாகவே விடுதலைப் புலிகளை அழிப்பதாகக் கூறிக்கொண்டு ஒரு இனத்தையே சிறிலங்கா அரசாங்கம் அழித்ததாகவும் தெரிவித்த அவர், அதன் காரணமாகவே வடக்கு மாகாண சபையினால் ஒழுங்குபடுத்தப்பட்ட நிகழ்வில் தமது கட்சி கலந்துகொள்ளவில்லையெனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வை தமிழ் மக்கள் பேரவை நிகழ்த்தியிருந்தால் தாம் இதில் கலந்துகொண்டிருப்போம் எனவும் தெரிவித்ததுடன், தமிழ் மக்களின் அரசியலை மாகாணசபைக்குள் முடக்குவதற்கு துணைபோன இரா.சம்பந்தன் தனது துரோகத்தனத்தை மறைப்பதற்காகவே இந்நிகழ்வில் கலந்துகொண்டார் எனவும் குற்றம் சுமத்தினார்.

அத்துடன், இறுதி யுத்தத்தின்போது மக்களைக் காப்பாற்றுவதற்காக தான் பல தடவைகள் சம்பந்தன் அவர்களுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியபோது அவர் அதனை நிறுத்திவைத்துவிட்டு இந்தியாவில் மறைந்திருந்ததாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.