சர்ச்சையை ஏற்படுத்தும் "சூரியப்புதல்வர்கள்"

புதன் மே 11, 2016

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களை உள்ளடக்கிய சூரியப் புதல்வர்கள் என்ற நூல் ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது. கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்களால் வெளியிடப்பட்ட இந்த நூல் பல்வேறு கேள்விகளையும், பலத்த அதிர்ச்சியையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளதாக அறியமுடிகின்றது.

மாவீரர்களின் விபரங்களை உள்ளடக்கிய இந்த நூலுக்கு முதலில் கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்கள் எவ்வாறு காப்புரிமை பெற்றார் என்ற கேள்வி அனைவர் முன்னும் எழுந்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளோ அல்லது அவர்கள் சார்ந்த கட்டமைப்புக்களோ மட்டுமே இவ்வாறான ஒரு நூலை வெளியிடுவதற்கு தகுதி பெற்றவர்கள். அவர்களுக்கே அதற்கான உரிமையும் இருக்கின்றது.

1990 ஆண்டுகளில் விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்ட இவ்வாறான ஒரு மாவீரர் தொகுப்பைப் பார்த்த தமிழீழத் தேசியத் தலைவர், போராளிகளின் படங்கள் இல்லாமலும், தகவல்களில் உள்ள தவறுகளையும் சுட்டிக்காட்டி அந்த நூலை வெளியிடவேண்டாம் என்றும் உடனடியாக அழிக்குமாறு மாவீரர் பணிமனைக்கு உத்தரவிட்டு, அந்த நூல் மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் பொன்.தியாகம் அவர்கள் முன்னிலையில் முற்றாக எரித்தழிக்கப்பட்டது வரலாறு. இவ்வாறான தவறுகள் நேரக்கூடாது என்பதற்காகவே தலைவர் மாவீரர் பணிமனையை உருவாக்கி, அவர்களிடம் முழுமையான பொறுப்பை ஒப்படைத்திருந்தார்.

விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்ட ஒரு மாவீரர் தொகுப்பிலேயே தவறு ஏற்படக்கூடிய நிலையில், விடுதலைப் புலிகள் சாராத ஒருவர் இவ்வாறான ஒரு முழுமையான மாவீரர் தொகுப்பு நூலை வெளிக்கொணர்வதென்பது சாத்தியமானதொன்றல்ல. அதனை நிரூபிப்பதுபோலவே அதன் பக்கங்கள் அமைந்துள்ளன. 764 பக்கங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மாவீரர் தொகுப்பில் பெரும்பாலான நிழற்படங்கள் இருக்கவில்லை என்பது மட்டுமல்ல, அந்தப் படங்களுக்கு பிரதியீடாக பயன்படுத்தப்பட்டுள்ள ‘குருதியின் சுவடு’ என்ற படம் விடுதலைப் புலிகளால் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து நிறுத்தப்பட்ட படம். அதனை எவ்வாறு மாவீரர்களின் படங்களுக்கு பதிலாக பிரதியிட்டார் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

போராட்ட வரலாறுகளை யார் வேண்டுமானாலும் எழுதிவிட்டப் போகலாம். ஆனால் மாவீரர் தொகுப்பென்பது ஆங்காங்கே வெளிவந்த ஆவணங்களைக் கொண்டு தயாரிப்பதல்ல. மாவீரர் பணிமனையால் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களைக் கொண்டு உருவாக்குவதே மாவீரர் தொகுப்பாக இருக்கமுடியும். அவ்வாறான ஒரு நூலைத் தயாரிப்பதென்பது சாதாரண ஒரு நூலைத் தயாரிப்பதுபோன்று இருக்கமுடியாது. ஏனெனில் அது மிகவும் கனதிவாய்ந்த நூல். ஆனால் கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்களால் வெளியிடப்பட்ட நூல், அதன் வடிவமைப்பில், அதன் தொகுப்பில், அதன் ஒழுங்கமைப்பில் இருந்து அனைத்துமே சிறுபிள்ளைத் தனமான ஒரு செயற்பாடாகவே பார்க்கமுடிகின்றது.

இந்நிலையில் சமூக வலைத் தளங்களில் இந்நூல் தொடர்பாக தனது முரண்படான கருத்துக்களைப் பதிவு செய்திருந்த மனித நேயச் செயற்பாட்டாளர் கஜன் அவர்களைத் தொடர்புகொண்டு கேட்டோம். அப்போது இந்த நூலில் ஏராளமான தகவல் பிழைகள் இருப்பதாக ஆதரங்களுடன் சுட்டிக்காட்டிய அவர், மாவீரர்கள் பலரது விபரங்களும் விடுபட்டுப்போயுள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன், தவறான பதிவுகளுடன், விடுதலைப் புலிகளால் தடைசெய்யப்பட்ட குருதியின் சுவடு படத்துடன் வெளிவரும் இந்நூல் திரும்பப்பெறப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

(அவரது கருத்தை கீழுள்ள காணொளியில் கேளுங்கள்)