சர்வதேச அரங்கில் சிறிலங்கா அரசிற்கு தலைகுனிவு!

Thursday October 04, 2018

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் சபையின் ஒரு அங்கமான Social Forum இன் பத்தாவது அமர்வு கடந்த 01.10.2018 தொடக்கம் 03.10.2018 இடம்பெற்றது. இவ் Social Forum இல் சமூக உரிமைகள் சார்ந்தும் விவாதிக்கப்படும். அத்தோடு இப் பேரவையின் தலைமைப் பொறுப்பு ஒவ்வொரு வருடமும் ஐக்கிய நாடுகள் அவையில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளிற்கு வழங்கப்படும். 

அவ்வகையில் இந்த வருடத்திற்கான தலைமைப் பொறுப்பிற்கு இவ் நூற்றாண்டின் மிகப்பெரிய மனித பேரவலமான முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பை மேற்கொண்ட சிறிலங்கா இனவாத அரசின் யெனீவாவிற்கான தூதுவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இப்பேரவையின் மாநாடு ஒவ்வொரு  வருடமும் வெவ்வேறு தொனிப்பொருளில் நடைபெறும். இவ்வருடம் விளையாட்டும் ஒலிம்பிக் வாரியமும் என்ற தலைப்பில் நடைபெற்றது. அந்த வகையில் ஆரம்ப நாளான கடந்த திங்கட்கிழமை(1.10.2018)அன்று தமிழர் இயக்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு ஈழத்தமிழர்கள் ஒலிம்பிக் வாரியத்தில் பிரதி நிதித்துவம் வகிப்பது பற்றிய வேண்டுகோளை முன்வைத்தபோது, சிறிலங்கா இனப்படுகொலை அரசின் தூதுவர் இவ் மாநாட்டை தலைமை தாங்கி நடாத்துவதால் எமது பிரதிநிதியின் உரையை இடைமறித்து நிறுத்திவிட்டார்.

தமிழினவழிப்பின் சாட்சியங்களாக வாழும் பல மில்லியன் தமிழர்களின் சார்பாக சர்வதேச ஒலிம்பிக் வாரியத்தின் ஆணையாளர்களில் ஒருவரான Ms Nawal El Moutawakel அவர்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதே இச் சம்பவம் இடம்பெற்றது.

இவ்வாறான அமர்வுகளை தலைமை தாங்குபவர்களால் ஏனையவர்களின் கருத்துகளிற்கு இடமளிப்பதே இவ் அவையின் வழமையாகும். ஆனால் சிறிலங்கா அரசின் ஜெனீவாவிற்கான உயர்ஸ்தானிகர் தன்னிலை மறந்து சபை நடைமுறையை மீறிச் செயற்பட்டார்.

ஆனபொழுதும் எமது அறிக்கை குறித்த ஒலிம்பிக் வாரிய அதிகாரியிடமும், இவ் அமர்வில் பங்குபற்றிய ஏனைய உறுப்பினர்களிடமும் கையளிக்கப்பட்டது. குறிப்பாக இம் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் இச் செயலிற்கு வருத்தம் தெரிவித்ததுடன், இச் சம்பவம் தொடர்பாக மனித உரிமைகள் சபையின் தலைமைத்துவத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதாக உறுதியளித்தார்.

உயர்ஸ்தானிகரின்இச் செயலானது சிறிலங்கா அரசிற்கு சர்வதேச அரங்கில் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

நாடுகள் கடந்தும் எமது உரிமைக்கான குரலை தடுப்பதில் சிறிலங்கா இனப்படுகொலை அரசு முனைப்புடன் செயற்படுவதையே இச் சம்பவம் உணர்த்தி நிற்கின்றது.