சர்வதேச நிதியத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக இந்திய பெண்!

புதன் சனவரி 09, 2019

சர்வதேச நிதியத்தின் 11-வது தலைமை பொருளாதார ஆலோசகராக அமெரிக்காவில் வசிக்கும் இந்திய பெண் கீதா கோபிநாத்(48 வயது) நியமிக்கப்பட்டார். 

189 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட சர்வதேச நிதியம்(ஐ.எம்.எப்.) அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. உலகளாவிய நிதி ஒத்துழைப்பு, நிதி ஸ்திரத்தன்மை, சர்வதேச வர்த்தக வசதிகளை ஏற்படுத்தி தருதல் போன்றவை இதன் முக்கிய பணிகளாகும்.

இந்த அமைப்பின் 11-வது தலைமை பொருளாதார ஆலோசகராக அமெரிக்காவில் வசிக்கும் இந்திய பெண் கீதா கோபிநாத்(48 வயது) நியமிக்கப்பட்டார். சர்வதேச நிதியத்தில் தலைமை பொருளாதார ஆலோசகர் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவி ஆகும்.

கடந்த 1-ந்திகதி சர்வதேச நிதியத்தில் பதவி ஏற்றுக்கொண்ட கீதா கோபிநாத், இந்த அமைப்பில் தலைமை பொருளாதார ஆலோசகர் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார். இதற்கு முன்பு தலைமை பொருளாதார ஆலோசகராக பதவி வகித்து வந்த மவுரிஸ் ஓப்ட்ஸ்பெல்ட் கடந்த 31-ந்திகதி ஓய்வு பெற்றதை தொடர்ந்து அவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

தற்போது அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள கேம்பிரிட்ஜ் நகரில் வசிக்கும் கீதா கோபிநாத் கர்நாடக மாநிலம் மைசூருவில் பிறந்தவர். இவருடைய பெற்றோர் டி.வி.கோபிநாத்-விஜயலட்சுமி. இவர்கள் இருவரும் கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர்கள். கீதா கோபிநாத் தற்போது கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் பொருளாதார ஆலோசகராகவும் உள்ளார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியையாக பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.