சர்வதேச விசாரணை யை இந்திய அரசு பின்வாங்கக் கூடாது - கருணாநிதி

ஞாயிறு செப்டம்பர் 27, 2015

குற்றம் சாட்டப்பட்டவரே குற்ற விசாரணையை நடத்துவது இயற்கை நீதியையே கேலிப் பொருளாக ஆக்கி விடும் என்பதால் தான், உலகத் தமிழ் அமைப்புகள் அனைத்தும் சர்வதேச விசாரணை வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றன, எனவே இந்தக் கருத்திலிருந்து இந்திய அரசு பின்வாங்கக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். 

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: 

 

மனித உரிமை மீறல்கள் பற்றி, ஐ.நா. மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி, அங்கே மனித உரிமை மீறல்களும், போர்க் குற்றங்களும் நடந்தது உண்மை தான் என்று உறுதி செய்ததை அடுத்து, ஜெனீவாவில் நடந்து வரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 30வது கூட்டத்தில், அதன் மனித உரிமை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்தார். 

 

அந்த அறிக்கையில் இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து, சர்வதேச நாடுகளின் நீதிபதிகளைக் கொண்ட சர்வதேச கலப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடைபெற வேண்டுமென்று தெரிவித்திருந்தார். 

 

ஆனால் இலங்கை அரசு உள்நாட்டு விசாரணை மட்டும் தான் நடத்துவோம், இதிலே சர்வதேச நீதிபதிகள் மற்றும் சட்ட வல்லுனர்களின் யோசனைகளை வேண்டுமானால் ஏற்றுக் கொள்வோம் என்றும் தெரிவித்து வருகிறது. வரும் 2016, ஜனவரி மாதத்தில் இந்த உள் நாட்டு விசாரணையைத் தொடங்கப் போவதாகவும் இலங்கை அரசு கூறியுள்ளது. 

 

உள்நாட்டு விசாரணை நடத்தினால், அது பாரபட்சமற்ற, நடுநிலையான, விருப்பு வெறுப்பற்ற விசாரணையாக இருக்காது என்பதாலும்; குற்றம் சாட்டப்பட்டவரே குற்ற விசாரணையை நடத்துவது இயற்கை நீதியையே கேலிப் பொருளாக ஆக்கி விடும் என்பதாலும் தான், உலகத் தமிழ் அமைப்புகள் அனைத்தும் சர்வதேச விசாரணை வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றன. இந்திய அரசும் பெரும் பாதிப்புக்காளான தமிழர்களுக்கு நீதி கிடைத்திட வேண்டுமென்ற உள்ளார்ந்த எண்ணத்தோடு, சுதந்திரமான, நம்பகத் தன்மையுள்ள சர்வதேச விசாரணை வேண்டும் என்பதற்கு ஆதரவாகக் குரல் கொடுக்க வேண்டுமென்றும், இந்தியாவே அதற்கானதொரு தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் முன் மொழிய வேண்டுமென்றும் தொடர்ந்து தெரிவித்து வருகிறோம். 

 

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா முதலாவது வரைவுத் தீர்மானத்தைத் தாக்கல் செய்த போது, இலங்கை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தது. அதற்கு இலங்கை அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அமெரிக்க அதிகாரிகள் கொண்ட குழுவுடன் இலங்கைக் குழுவினர் பேச்சுவார்த்தையும் நடத்தினர். இதனைத் தொடர்ந்து தற்போது, இறுதியாகத் திருத்தப்பட்ட வரைவுத் தீர்மானம் ஒன்றினை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா தாக்கல் செய்துள்ளது. 

 

அதில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் பரிந்துரைத்த சர்வதேச நீதிமன்றம் பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை என்பதால், அமெரிக்கா ஏற்கனவே மேற்கொண்டிருந்த நிலைப்பாட்டினைத் தலைகீழாக மாற்றிக் கொள்ள வேண்டிய நெருக்கடி ஏன் ஏற்பட்டிருக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. 

 

போர்க் குற்றப் புகார்களை இலங்கையின் நீதித் துறை அமைப்பே விசாரிக்கலாம் என்றும், காமன்வெல்த் நாடுகள் மற்றும் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் இந்த விசாரணை அமைப்பிலே இடம் பெறலாம் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

 

இந்தப் புதிய வரைவுத் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டு, மேலும் திருத்தங்கள் செய்ய வாய்ப்புள்ளது. இறுதித் தீர்மானத்தின் மீது வருகிற 30ஆம் திகதியன்று ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. 

 

அமெரிக்காவின் நீர்த்துப் போன இந்த வரைவுத் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவித்திருக்கிறது. இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் சுவரூப் கூறும்போது, "இந்தியாவைப் பொறுத்தவரை நாம் எப்போதுமே இயற்கையாகவே நீதிக்கான விசாரணையை ஆதரிக்கிறோம். அந்த வகையில் இலங்கையின் இறையாண்மைக்கு மதிப்பளிக்கிறோம். இறுதி வரைவுத் தீர்மானம் வரும் போது அது ஏகமனதாக இலங்கை அரசால் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்" என்று கூறியிருக்கிறார். இவ்வாறு இந்தியா கருத்துக் கூறுவது "பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்" என்பதைப் போல யாருக்கும் பயன்படாமல் போய் விடும். 

 

இலங்கை எங்கே சீனாவின் பக்கம் சாய்ந்து விடுமோ என்பதால், அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவான நிலை எடுத்திருக்கிறது என்றும், போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து நடுநிலையான நியாயமான விசாரணை நடைபெற்று, குற்றம் புரிந்தோர் தண்டிக்கப்பட வேண்டுமென்பதில், அமெரிக்காவுக்கு ஆர்வம் மிகக் குறைவு என்றும்; எழுந்துள்ள விமர்சனத்தை அப்படியே புறந்தள்ளி விடுவதற்கில்லை. 

 

இந்த நிலையில், இந்தியா, அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரித்திட முயற்சிப்பது, இலங்கையில் நடந்த இனப் படுகொலை, போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றுக்கு உரிய நீதி வழங்க மறுப்பதாக அமைந்து விடுவதோடு, உலகத் தமிழர்களின் உள்ளத்தில் ஆறாத வடுவாகவும் ஆகி விடும் என்பதை உணர்ந்து, இதில் எச்சரிக்கையாக அடியெடுத்து வைத்திட வேண்டும் என்றே தமிழின ஆர்வலர்கள் அனைவரும் விரும்புகிறார்கள். 

 

எனவே இந்திய அரசு இலங்கைத் தமிழர் பிரச்சினையில் சர்வதேச விசாரணை வேண்டும் என்பதிலிருந்து சிறிதும் பின்வாங்கக் கூடாது என்பதை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மீண்டும் ஒரு முறை அழுத்தந்திருத்தமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.