சவுதிக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்தியது ஸ்பெயின் அரசு!

Thursday September 06, 2018

 ஏமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது தமது ஆயுதங்கள் பயன்படுத்தப்படலாம் என்று சவுதிக்கு அனுப்பவிருந்த 400 குண்டுகளை ஸ்பெயின் ரத்து செய்துள்ளது. இதுகுறித்து ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், 'சவுதி - ஸ்பெயின் இடையே ராணுவ ஒப்பந்தம் 2015-ம் ஆண்டு அப்போதிருந்த ஸ்பெயின் அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் தற்போது பிரதமராக உள்ள பெட்ரோ சான்செஸ் இந்த ஒப்பந்தத்தை திரும்ப பெற்றிருக்கிறார்" என்று கூறியுள்ளது. இதனை ஸ்பெயின் பாதுகாப்புத் துறை அமைச்சரும் உறுதி செய்துள்ளார்.ஸ்பெயின் இந்த முடிவு குறித்து விளக்கம் அளிக்க சவுதி மறுத்துவிட்டது.தென் மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.

 இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது.

 ஈரானோ கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது.ஏமன் அரசுடன் இணைந்து சவுதி நடத்தும் மனிதாபிமானமற்ற தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை முன்னரே கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.