சவுதி அரேபியாவில் அரச குடும்பத்தைச் சேர்ந்த 11 இளவரசர்கள் கைது

நவம்பர் 05, 2017

உலகப் பணக்காரர்களில் ஒருவரான அல்வாலித் பின் தலால் உட்பட அரச குடும்பத்தைச் சேர்ந்த 11 இளவரசர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். மன்னராட்சி நடைபெற்று வரும் சவுதி அரேபியாவில் மந்திரிகள் உட்பட பல முக்கிய பொறுப்புகளை அரச குடும்பத்தினரே வகித்து வந்தனர்.

மன்னர் சல்மானின் மகனான முகம்மது பின் சல்மான் பட்டத்து இளவரசராகப் பொறுப்பேற்றதும் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். உலக அரங்கில் சவுதி அரேபியாவின் மீது உள்ள பழமைவாதக் கருத்துக்களை மாற்றும் வகையில் சில முக்கிய நடவடிக்கைகளை பட்டத்து இளவரசர் எடுத்தார்.

அரச குடும்பத்தினரே ஊழலில் ஈடுபட்டாலும் கடும் தண்டனை இருக்கிறது என்றும் அவர் அறிவித்தார். இந்நிலையில், பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் அறிவித்தார். இதை அடுத்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான அல்வாலித் பின் தலால் உள்ளிட்ட 11 இளவரசர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சவுதி அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கோடீஸ்வரரான அல்வாலித் கைது செய்யப்பட்டது அரசியல் அரங்கில் மட்டுமல்லாமல் பொருளாதார உலகிலும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட மற்ற இளவரசர்களில் பலர் முக்கிய துறைகளை வகிக்கும் மந்திரிகளாக இருக்கின்றனர் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகள்