சவூதி அரேபியாவில் முதன் முறையாக பெண்கள் தினம்

புதன் பெப்ரவரி 08, 2017

பழமைவாத நம்பிக்கைகளை கடைப்பிடிக்கும் நாடான சவூதி அரேபியாவில் முதன் முறையாக பெண்கள் தினம் கொண்டாடப்பட்டுள்ளது. இதில் மன்னர் குடும்பத்தினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பழமைவாத நாடான சவூதி அரேபியாவில் பெண்களுக்கு வாகனம் ஓட்ட தடை, ஓட்டுனர் உரிமம் பெற அனுமதி மறுப்பு, ஆண்கள் துணையின்றி வெளியே செல்ல தடை போன்ற கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. சவூதி அரேபியாவின் இந்த நடவடிக்கைக்கு பெண் உரிமை ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும், சவூதி அரசு அதை கண்டுகொள்ளவில்லை. மேலும், சர்வதேச அளவில் பாலின சமத்துவம் அடிப்படையிலான தரவரிசையில் 145 நாடுகளில் சவூதி 134வது இடத்தில் உள்ளது. 

இந்நிலையில், சவுதி தலைநகரான ரியாத்தில் முதல் முறையாக பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ரியாத்தில் உள்ள  கிங் பஹத் கல்சுரல் சென்டரில் நேற்று முதல் 3 நாட்கள் பெண்கள் தினம் கொண்டாட்டம் நடைபெறுகிறது. சவூதி அரேபியாவின் இளவரசி அல் ஜாஹரா பின்ட் அல் சவுத் உள்ளிட்ட அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும் இதில் கலந்துகொண்டனர்.

இதில் கலந்து கொண்ட பல பெண்கள், வாகனம் ஓட்டுவதற்கு உரிமை, பெண்களுக்கு கல்வி உரிமை அளித்தல் மற்றும் குடும்பத்தில் நிலவும் ஆணதிக்க சூழ்நிலை ஆகியவை குறித்து தீவிரமாக விவாதித்துவருகின்றனர்.

பெண்களின் உரிமைகளை இதுவரை மறுத்து வந்தாலும், தற்போது சவூதி அரேபிய அரசின் நடவடிக்கை புதிய மாற்றத்திற்கு அடித்தளமாக இருக்கும் என பெண் உரிமை ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.