சிங்கள தலைமைகள் சர்வதேசத்திடம் இருந்து தப்பிப்பதற்காக பலிக்கடா ஆக்கப்பட்ட தமிழர்கள் - ஒ.த.அமைப்பு

திங்கள் ஓகஸ்ட் 03, 2015

அனைத்துத்துலகம் சிறிலங்கா மீது கொண்டிருந்த அழுத்தத்தினை குறைப்பதற்காக குறிப்பாக அமெரிக்கா சிறிலங்கா மீது கொண்டிருந்த அழுத்த்தினை தணித்து கொள்வதற்கு அல்லது அதனை திசைமாற்றி கொள்வதற்காக சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு தமிழ் தலைமைகள் மூலம் தமிழர்களை பலிக்கடா ஆக்கி அதில் வெற்றியும் பெற்றன.


 
நடந்து முடிந்த ஆட்சி மாற்றங்களும் அதன் தொடரான அரசாங்கத்தின் தொடர் நடவடிக்கைகளும் இதனை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. குறிப்பாக புதிதாக ஆட்சிமாற்றம் ஏற்பட்டுவிட்டன எனவே புதிய அரசுக்கு ஒரு அவகாசம் கொடுக்கவேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கம் கேட்டுக்கொண்டது அதற்கு ஒத்தூதியது தமிழ் தலைமை. ஏதோ ராஜபக்சாவினால் தான் எமக்கான உரிமை கிடைக்கவில்லை புதிய அரசு அப்படிப்பட்டதல்ல என்றும், 100 வேலைத்திட்டத்தினால் எல்லாப்பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு விடும் என்றும் கூறியதோடு மடடுமன்றி இதயங்களாக ஒன்றிணைந்துள்ளோம் என்று கூறி தமிழ் மக்களையும் சர்வதேசத்தின் பார்வையையும் மாற்றினார்கள்.


 
சிறிலங்கா மீது சர்வதேச அழுத்தம் வருவதற்கு காரணமாக இருந்த அமைப்புக்களில் ஒன்றான புலம் பெயர்ந்த அமைப்புகளை தமது கைக்குள் போட்டுவிட்டால் அனைத்தையும்  முடித்து விடலாம் என்று எண்ணிய அரசாங்கம். அதற்கு இந்த தமிழ் தலைமைகளை வைத்து தூண்டில் போட்டது. அதன் மூலம் புலம் பெயர்ந்த தமிழ் அமைப்புகளில் ஒன்றை தமது வலைக்குள் விழுத்தியது. அந்த புலம் பெயர்ந்த அமைப்பின் வாயாலேயே நடந்த அனைத்து குற்றங்களையும் மறந்து அனைவரும் ஒன்றாக ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழுவோம், மறப்போம், மன்னிப்போம் என்று கூறவைத்தது இந்த சிறிலங்கா அரசாங்கம்.


 
மேலும் இத் தமிழ் தலைமைகள் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தினை அதன் நோக்கத்தினை சிறுமைப்படுத்தி ஒன்று பட்ட இலங்கைக்குள் தீர்வென்றும் தமிழ் மக்கள் அதற்காகவே தம்மை தேர்தலில் போட்டியிட்டு தெரிவு செய்தார்கள் என்றும் கூறியதோடு நின்றுவிடாமல் சர்வதேசத்திற்கும் பொய்யான விடையங்களை திணித்தார்கள். இதுவே உண்மையில் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கை விடையத்தில் அண்மையில் மென் போக்கினை கடைப்பிடித்தமையும், ஐ.நா மனித உரிமைச் சபையின் போர்க்குற்றம் பற்றிய அறிக்கை தாமதமாக சர்வதேச விசாரணை என்றும் நிலையில் இருந்து உள்ளக விசாரணை என்னும் நிலைப்பாட்டுக்கு சர்வதேசத்தை கொண்டு சென்றது.


 
உண்மையில் தமிழ் மக்கள் இத் தமிழ்த் தலைமைகளை தேர்தல் மூலம் தெரிவு செய்ததன் நோக்கம் விடுதலைப்புலிகள் இல்லாமல் போனபின் தமக்கான ஒரு தலைமை இவர்கள் மட்டுமே இருந்ததுவும், விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்ககும் அமைப்பாக தான் இருக்கும் என்று நம்பிதுமாகும்.


 
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மைத்திரிபாலவை தமிழ் மக்கள் ஆதரித்தன் நோக்கம் அவர் நல்லவர் என்றோ தமி;ழ் மக்களுக்கு தீர்வினை பெற்றுத் தந்து விடுவார் என்றோ அல்ல. அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிபாலவை ஆதரவழிக்குமாறு கேட்டமையாலோ அல்ல. தமிழர்களாகிய நாம் ஒட்டு மொத்தமாக் ராஜபக்சாவை எதிர்த்து நிற்கின்றோம் என்பதை வெளியுலகத்திற்கு காண்பித்தார்கள். இதனால்  அவரது ஆட்சியை தூக்கி எறிந்தார்கள் என்பதே உண்மையானதாகும். 


 
எனவே இம்முறை தமிழ் மக்கள் தமது தமிழ்த் தலைமையை சரியாக தெரிவு செய்ய வேண்டும். எமது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பழிக்காத, எமது மக்களின் அர்ப்பணிப்பு தியாகங்களை மதிக்காத, எமது மக்களின் உரிமைக்குரலை நசுக்குகின்ற, அரசாங்கதின் ஏவல் நாய்களாக எலும்புத்துண்டுக்காக வாலாட்டுகின்ற தமிழத் தலைமைகளை மக்கள் நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பவேண்டும். எமது மக்களுக்காக உண்மையாக உழைக்காவிடில் இது தான் அனைவருக்கும் நிலை என்பதனை காட்டவேண்டும்.