சிந்து சமவெளி மக்கள் தென்னிந்தியாவுக்கு இடம்பெயர்ந்தது ஏன்?

Tuesday April 17, 2018

எல் நினோ’ விளைவு காரணமாக சிந்து சமவெளியில் 900 ஆண்டுகளாக வறட்சி நீடித்ததால் சிந்து சமவெளி மக்கள் தென்னிந்தியாவுக்கு இடம்பெயர்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சுமார் 4 ஆயிரத்து 350 ஆண்டுகளுக்கு முன்பு, சிந்து நதியை ஒட்டி வாழ்ந்தவர்கள், சிந்து சமவெளி மக்கள். இது, தற்போதைய இந்தியா, பாகிஸ்தான், பலுசிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பிராந்தியம் ஆகும். சுமார் 15 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவுக்கு அவர்களது வாழ்விடம் பரவி இருந்தது. அவர்கள் பின்பற்றிய நாகரிகம், சிந்து சமவெளி நாகரிகம் என்று அழைக்கப்படுகிறது. ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், அவர்களைப் பற்றிய தகவல்களை தெரிவிக்கின்றன.

ஒரு காலகட்டத்தில், சிந்து சமவெளி மக்கள் தென்னிந்தியாவுக்கு இடம்பெயர்ந்தனர். இதுபற்றி காரக்பூரில் உள்ள ஐ.ஐ.டி. பேராசிரியர் அனில் கே.குப்தா தலைமையில் பல்வேறு கல்வி நிறுவனங்களை சேர்ந்த ஆய்வாளர்கள் அடங்கிய குழு ஆய்வு செய்தது. அவர்களின் கண்டுபிடிப்புகளை, ‘எல்செவியர்’ என்ற சர்வதேச விஞ்ஞான பத்திரிகை ஏற்றுக் கொண்டுள்ளது.

அந்த ஆய்வுக்கட்டுரையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சிந்து சமவெளி பகுதி, நன்கு மேம்பாடு அடைந்த கட்டமைப்பு வசதிகளையும், கட்டுமான கலையையும் கொண்டது. அம்மக்கள், உலகின் பல்வேறு நாகரிக மக்களுடன் வர்த்தக, கலாசார உறவு கொண்டிருந்தனர்.

‘எல் நினோ’ விளைவு காரணமாக, சிந்து சமவெளியில் 900 ஆண்டுகளாக வறட்சி நீடித்தது. அதற்காக, மழை பெய்யவில்லை என்று அர்த்தம் அல்ல. நீரோட்டம் குறைந்துவிட்டது. அதனால், அப்பகுதி வறண்ட பிரதேசம் ஆனது.

விவசாயத்துக்கும், கால்நடைகளுக்கும் போதிய தண்ணீர் இல்லை. இவைதான் அம்மக்களின் முக்கியமான தொழில்கள் என்பதால், அவர்கள் பருவமழை அதிகமாக பெய்யும் இந்தியாவின் தென்பகுதிக்கும், கிழக்கு பகுதிக்கும் இடம்பெயர்ந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.