சிரஞ்சீவி படத்தில் அமிதாப்பச்சனின் தோற்றம்!

புதன் மார்ச் 28, 2018

சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் அமிதாப்பச்சனின் தோற்றம் வெளியாகி இணைய தளத்தில் வைரலாகியுள்ளது.  இந்திய திரை உலகின் முன்னணி நடிகர் அமிதாப்பச்சன் முதல் முறையாக ‘சைரா’ தெலுங்கு படத்தில் நடிக்கிறார்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நாயகனாக நடிக்கும் இதில், அவருடைய ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். முக்கிய பாத்திரத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தியில் இந்த படம் வெளியாக இருக்கிறது.

சிறப்பு தோற்றத்தில் இந்த படத்தில் நடிப்பதற்காக அமிதாப்பச்சன் ஐதராபாத் வந்துள்ளார். இதில், அவருடைய தோற்றம் இப்படி இருக்கும் என்று ஒரு புகைப்படத்தை தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ரவீந்திரநாத் தாகூர் போன்ற வயதான தோற்றத்தில் தாடி மீசையுடன் காணப்படுகிறார். இதுபற்றி கூறியுள்ள அமிதாப் பச்சன்....

“அன்பு நண்பர் சிரஞ்சீவி, ஆந்திராவில் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார். அவருடைய பிரமாண்ட படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க என்னை அழைத்தார். மிகவும் வீரமான கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். இதில் நானும் நடிக்க சம்மதித்தேன். ஐதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது.

இது அதற்கான எனது வேடத்தின் மாதிரி தோற்றம் தான். இது இறுதியான தோற்றம் அல்ல. என்றாலும், ஏறக்குறைய இப்படித்தான் இந்த படத்தில் எனது வேடம் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.