சிரியாவில் நமது நோக்கம் நிறைவேறியது - டிரம்ப்

சனி ஏப்ரல் 14, 2018

சிரியாவில் திட்டமிட்டபடி துல்லியமாகவும் கச்சிதமாகவும் ஏவுகணை தாக்குதல் நடத்த துணைபுரிந்த பிரிட்டன், பிரான்ஸ் நாட்டு ராணுவத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.

சிரியா தலைநகர் டமாஸ்கஸ் அருகே உள்ள கிழக்கு கூட்டா பகுதியில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள டூமா நகரை கைப்பற்ற ரஷ்ய ஆதரவு பெற்ற சிரியா அரசு படைகள் முற்றுகையிட்டன. கிழக்கு கூட்டா பகுதியில் அரசுப் படைகள் நடத்திய சந்தேகத்திற்குரிய வகையிலான ரசாயன தாக்குதலில் சுமார் 70 பேர் பலியானதாக தகவல் வெளியானது.

சிரியாவில் அதிபர் ஆசாத்தின் ரசாயன தாக்குதலை தடுக்க ரஷியா தோல்வி அடைந்து விட்டது என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார். சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு பாடம் கற்பிக்கும் விதமாக அந்நாட்டின் மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் விமனப்படைகள் இன்று காலை அடுத்தடுத்து ஏவுகணைகள வீசி தாக்குல் நடத்தின.

தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் ஹோம்ஸ் மாகாணத்தில் ரசாயன ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் இடங்கள், சிரியாவின் ஆயுத கிடங்குகள் மற்றும் ராணுவ முகாம்களை துல்லியமாக குறிவைத்து இன்றைய தாக்குதல் நடத்தப்பட்டதாக மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்நிலையில், சிரியாவில் திட்டமிட்டபடி துல்லியமாகவும் கச்சிதமாகவும் ஏவுகணை தாக்குதல் நடத்த துணைபுரிந்த பிரிட்டன், பிரான்ஸ் நாட்டு ராணுவத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், ‘சிரியாவில் நேற்றிரவு சரியான முறையில் கச்சிதமான தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்காக பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நாட்டின் புத்திசாலித்தனத்துக்கும், அவர்களது சிறந்த ராணுவத்துக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். அவர்கள் இல்லாமல் சிறந்த பலனுடன் இந்த திட்டம் முழுமையடைந்திருக்க முடியாது. 

பலநூறு கோடி டாலர்களால் அதிநவீனப்படுத்தவுள்ள அமெரிக்க நாட்டின் மிக உயர்ந்த ராணுவத்தை எண்ணி பெருமை கொள்கிறேன். (ராணுவ பலத்தில்) நமக்கு இணையாகவும், நெருக்கமாகவும் வேறு எதுவும், யாரும் இருக்கவே முடியாது’ என குறிப்பிட்டுள்ளார்.