சிரியா மீது அமெரிக்கக் கூட்டணிப் படைகள் ஏவுகணைத் தாக்குதல்

சனி ஏப்ரல் 14, 2018

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் படைகள் இணைந்து சிரியா மீது தாக்குதல் தொடுத்துள்ளன. 

சிரியாவின் இரசாயன ஆயுதங்கள் தயாரித்தல் மற்றும் சேமிக்கும் இடங்கள் என சந்தேகிக்கப்படும் நிலையங்கள் மீது சிரியாவின் உள்ளுர் நேரப்படி இன்று (14) அதிகாலை முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன.

சைப்ரஸில் உள்ள அக்ரோத்திரி விமானப் படைத் தளத்தில் இருந்து நான்கு பிரிட்டிஷ் டொர்னடோ போர் விமானங்கள் இன்று அதிகாலை சிரியா நோக்கிச் சென்றன. 

அந்த விமானங்கள் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளில் இருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள பகுதிகளிலேயே தாக்குதல் நடத்தி வருகின்றன என பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இது மோசமான மற்றும் காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் என்று சிரியா கூறியுள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து சிரியாவின் நெருங்கிய நட்பு நாடான ரஷ்யா எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. தாக்குதல் தொடர்ந்தால் அது மோசமான யுத்தம் மூள வழிவகுக்கும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. 

ஈரானும் இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளது.