சிறப்புற நடைபெற்ற ஓவியர் புகழேந்தியின் 'சே குவேரா' ஓவியக் காட்சி!

திங்கள் செப்டம்பர் 14, 2015

சென்னையில், ஓவியர் புகழேந்தியின் புரட்சியாளர் சே குவேராவின் ஓவியங்களைக் கொண்ட “புரட்சியின் நிறம்” தலைப்பிலான ஓவியக்காட்சி, செப்டம்பர் 8 – 2015 அன்று தொடங்கி, நேற்று (செப்டம்பர் 13) வரையில் சிறப்புற நடைபெற்றது. 

 

ஓவியக்காட்சியை, பல்வேறு அமைப்புத் தலைவர்கள், திரைக் கலைஞர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் என பலதரப்பினரும் நேரில் பார்வையிட்டு, ஓவியருக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தனர். 

 

சென்னை தியாகராயர் நகர் செ.தெ. நாயகம் மேனிலைப்பள்ளியில், நடைபெற்ற இவ் ஓவியக்காட்சியின் தொடக்க நிகழ்வில், இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி மூத்தத் தலைவர் தோழர் தா. பாண்டியன் ஓவியக்காட்சியைத் தொடங்கி வைத்தார். தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தன், தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு. களஞ்சியம், நடிகர் திரு. சத்தியராஜ், ஊடகவியலாளர் திரு. ஞாநி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அதன்பின், திரளான பொது மக்களும் ஓவியக் காட்சியைப் பார்வையிட்டனர். 

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல். திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் திரு. கி. வீரமணி, மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் அய்யா வே. ஆனைமுத்து, நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் திரு. சாகுல் அமீது, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, நடிகர் நாசர், எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணன், கவிஞர் ஈரோடு தமிழன்பன், தஞ்சை மூத்த வழக்கறிஞர் திரு. இராமமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும், திரைத்துறைக் கலைஞர்களும் ஓவியக்காட்சியைப் பார்வையிட்டு, பார்வையாளர் ஏட்டில் தங்கள் கருத்துகளை எழுதினர். பார்வையாளர்கள் பலரும் ஓவியங்களைப் பின்னணியாக வைத்து, படங்கள் எடுத்துச் சென்றனர்.