சிறிலங்காவின் நிலைமாறு கால நீதிப் பொறிமுறைக்கான முயற்சிகள் பின்னடைவு

Sunday September 23, 2018

சிறிலங்கா அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபைக்கு உறுதியளித்த, நிலைமாறு கால நீதிப் பொறிமுறைக்கான முயற்சிகள் பின்னடைவைச் சந்தித்துள்ளது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றஞ்சாட்டியுள்ளது. 

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரை முன்னிட்டு 2015 ஆம் ஆண்டில் சிறிலங்கா தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் உள்ளவாறு நீதிப் பொறிமுறைகள் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்கள் தொடர்பாக சிறிலங்காவின் இராஜதந்திரிகள் பல்வேறு அறிவித்தல்களை விடுத்து வருகின்றனர்.

இதனையடுத்து நீதிப் பொறிமுறை, பாதுகாப்புத் துறை மறுசீரமைப்பு, காணி விடுவிப்பு மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் என நான்கு துறைகளில் தனியான பொறிமுறைகளை ஏற்படுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசு மனித உரிமைகள் பேரவைக்கு உறுதியளித்திருந்ததாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலைமையின் கீழ் சில பிரிவுகளில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. 

குறிப்பாக காணி விடுவிப்பு சிவில் சமூக சுதந்திரம் மற்றும் பொது மக்களுக்கான ஆலோசனைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், நிலைமாறு கால நீதிப் பொறிமுறை விடயத்தில் அரசின் செயற்பாடுகளில் குறைபாடு நிலவுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் மேலும் தெரிவித்துள்ளது.