சிறிலங்காவின் 8 மாவட்டங்களில் அனர்த்தம், 8 பேர் பலி, 68,343 பேர் பாதிப்பு

செவ்வாய் மே 22, 2018

சிறிலங்காவின் 18 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் இதுவரை 68 ஆயிரத்து 343 இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த அனர்த்தங்களால் 8 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் மேற்படி நிலையம் தெரிவித்துள்ளது. 

கேகாலை, பொலன்னறுவை, காலி, புத்தளம் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலேயே இவ்வாறு உயிரிழப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

மின்னல் தாக்கத்தின் காரணமாக நால்வரும், கடுங் காற்றினால் மூவரும், மண்மேடு சரிவினால் ஒருவரும், நீரில் அடித்துச் செல்லப்பட்டு ஒருவரும் உயிரிழந்துள்ளதாக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அனர்த்தங்களால் 18 மாவட்டங்களைச் சேர்ந்த 18,079 குடும்பங்களைச் சேர்ந்த 68,343 பேர் பாதிப்புகளை எதிர்ககொண்டுள்ளதாக மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த சீரற்ற காலநிலையால், 25 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 1464 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

அதற்கமைய, தற்சமயம் 168 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், இவற்றில் 6710 குடும்பங்களைச் சேர்ந்த 24,187 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது. 

இதேவேளை, இன்றும் நாளையும் தொடர்ந்து கடும் மழை பெய்யும் எனவும் இது தொடர்பாக மக்கள் அவதானமாக இருக்கவேண்டும் எனவும் வழிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.