சிறிலங்காவிற்கு புதிய அரசியலமைப்பு தேவையில்லை

ஞாயிறு சனவரி 13, 2019

சிறிலங்காவில் இப்போதுள்ள தேவை மாகாண சபைகளைக் கலைத்து தேர்தல் நடத்துவதே தவிர புதிய அரசியலமைப்பு உருவாக்கம் அல்ல என, அஸ்கிரிய பீட அநுநாயக்க தேரர் தெரிவித்துள்ளார். 

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அஸ்கிரிய பீட அநுநாயக்க தேரரை நேற்று மாலை (12) சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது தேரர் மேற்படி கருத்துத் தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அஸ்கிரிய பீடம் என்ற வகையில் நாங்கள் ஆரம்பத்திலிருந்து புதிய அரசியலமைப்பு அத்தியாவசியமற்றது என கூறினோம். மகாநாயக்க தேரர்களும் அதனை வலியுறுத்தினர். சமகால அரசாங்கம் மகாநாயக்க தேரர்களைக் கண்டுகொள்வதில்லை. இது யாருடைய தேவைக்கேற்ப வந்தது என்பது பிரச்சினைக்குரியது. 

பாராளுமன்றத்தில் பொது நிலைப்பாடு ஒன்றை பெற முடியாது. அரசியலமைப்பு ஒருபோதும் தேவையற்றது. மாகாண சபைகளை கலைப்பதை தவிர தேர்தல் நடத்துவதற்கு எதுவித தேவையும் இல்லை. பொது மக்களுக்கு தீர்மானமெடுக்கும் சந்தர்ப்பத்தை தேர்தல் ஊடாக வழங்க வேண்டும்.

இதேவேளை, அரசியலமைப்பில் எத்தகைய பிளவுகள் இருந்தாலும் குறைந்தபட்சம் மாகாண சபைத் தேர்தலையேனும் நடத்தி மக்கள் விருப்பத்தை பரிசீலிக்க முடியுமாயின் அதுவே சிறந்தது. – என்றார்  அஸ்கிரிய பீட அநுநாயக்க தேரர்.