சிறிலங்காவில் சமூக வலைத்தளங்களை தடை செய்தமைக்கு அதிக ஆதரவு

Tuesday March 13, 2018

சிறிலங்காவில் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டமை தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வொன்றின்போது 71.4 வீதமானோர் இந்த முடிவு சரியானது எனக் கருத்து தெரிவித்துள்ளனர். 

கண்டியில் இடம்பெற்ற சிங்கள – முஸ்லிம் இன வன்முறைகளை அடுத்து சிறிலங்கா அரசாங்கம் பேஸ்புக், வைபர் மற்றும் வட்சப் ஆகிய சமூக ஊடகங்களை தற்காலிகமாக தடை செய்திருக்கின்றது. 

இந்நிலையில்இ கடந்த வெள்ளிக்கிழமை அன்று கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஆங்கிலப் பத்திரிகையொன்றினால் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் அரசாங்கம் மேற்கொண்ட முடிவு சரியானதென பெரும்பாலானோர் வாக்களித்துள்ளனர்.

இதேவேளை இந்த வாக்கெடுப்பில் கலந்துகொண்டிருந்த 28.6 வீதமானோர் அரசின் முடிவு தவறானதென்று கூறியிருந்த அதேநேரம் வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு 49 வீதமானோர் 'ஆம்' என்றும்  38.8 வீதமானோர் இல்லையென்றும் 12.2 வீதமானோர் தீர்மானிக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

வர்த்தக நிபுணர்கள், புலமையாளர்கள், மாணவர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளடங்கிய 200 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருந்தது. அத்துடன், இந்த ஆய்வில் கலந்துகொண்டிருந்த இளைஞர்களும் அரசின் முடிவு சரியானதென்று தெரிவித்துள்ளனர்.

ஆனால் சிரேஷ்ட அல்லது அதிக வயதுடைய அதிகாரிகள் அரசின் முடிவை தவறானதென குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்திருந்த சிலர் சமூக ஊடகங்களை தடை செய்வதைக் காட்டிலும் அவற்றில் வெறுப்பூட்டும் கருத்துக்களை பகிர்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை அரசாங்கம் எடுக்கவேண்டுமென்று கூறியுள்ளனர்.

'இது சரியானது. ஆனால் அந்த கட்டுப்பாட்டுகள் இருக்கும் வரையில் அமுலில் இருக்கும். இருந்தபோதிலும் தவறான நோக்கங்களுடன் கருத்துக்களை பகிர்வு செய்வோர் தொடர்பில் அது தொடர்ந்து பயன்படுத்தப்படும்'  எனவும் ஒருவர் கருத்துரைத்துள்ளார். 

வெறுப்பூட்டும் பேச்சுக்கள் சகிக்க முடியாதவை அதேநேரம் சமூக ஊடகங்கள் மக்களை தவறாக வழிநடத்தக் கூடாதென்பதனையும் உறுதிப்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகள் முன்வைக்கப்படவேண்டும். 

அத்துடன் மற்றவர்களின் உரிமைகள் பாதிக்கப்படாத வகையில் அவை பயன்படுத்தப்பட வேண்டுமென்றும் ஒருவர் கூறியுள்ளார்.