சிறிலங்காவில் சிறுவர் உரிமை மீறல்களை ஆராய ஐ.நாவில் கூட்டம்

Friday January 12, 2018

சிறிலங்காவில் சிறுவர் உரிமைகள் தொடர்ச்சியாக மீறப்பட்டு வரும் நிலையில், எதிர்வரும் 15 ஆம் திகதி ஐ.நா சபையில் நடைபெறவுள்ள கூட்டத்திற்கு சிறிலங்காவின் பிரதிநிதிகள் குழுவொன்று செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இக்குழு அங்கு சென்று சிறுவர் உரிமை மீறல்களில் இருந்து சிறிலங்காவைப் பாதுகாக்கும் வகையில் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 

சிறிலங்காவில் சிறுவர் உரிமைகளின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்வதற்காக ஐக்கிய நாடுகள் சிறுவர் உரிமைகளுக்கான அமைப்பு எதிர்வரும் திங்கட்கிழமை (15) ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கூடவுள்ளது. 

ஐ.நா. மனித உரிமைகளுக்கான ஆணையாளர் காரியாலயம் இந்தத் தகவலை வெளியிட்டிருக்கின்றது. 

இரு தினங்கள் நடைபெறும் இக்கூட்டத் தொடரில் சிறிலங்காவில் கடந்த வருடம் முழுவதும் சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு முன்னெடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. 

சிறிலங்காவில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் இன்றும் போதிய ஆதரவு அற்ற நிலையில் வளர்ந்து வருகின்றனர். இவர்கள் விடயத்தில் சிறிலங்கா அரசு இதுவரை உரிய நடவடிக்கை எதையும் எடுத்திருக்கவில்லை. 

வடக்கு – கிழக்கில் நிலைகொண்டுள்ள படையினராலும் அவ்வப்போது சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்கத்கது.