சிறீலங்காவில் மடிந்த தமிழ் மதப் புனிதர்களுக்கு பிரான்ஸ் சார்சல் பகுதியில் நினைவுத்தூபி?

நவம்பர் 26, 2017

தமிழீழ விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களுக்கான நினைவுத் தூபி என்ற  பெயரில் பிரான்ஸ் சார்சல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தூபி, வேண்டுமென்று தமிழீழ விடுதலைப் புலிகளையும் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தமிழின உணர்வாளர்களும் தமிழீழ தேசிய செயற்பாட்டாளர்களும் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர். 

மேற்படி நினைவுத் தூபியானது, தமிழீழ  விடுதலைப் போராட்ட வரலாற்றை வேண்டுமென்றே மாற்றியமைக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளது என மேற்படி செயற்பாட்டாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். 

இந்த விடயத்தை பிரான்சில் இருந்து வெளிவரும் ஈழமுரசு பத்திரிகை தோலுரித்துக் காட்டியுள்ளது. அது வருமாறு, 

பிரான்ஸ் பரிசின் புறநகரான சார்சல் பகுதியில் அம்மாநகர சபையின் அனுமதியுடன்  மாவீரர்களுக்கான நினைவுத்தூபி ஒன்று எழுப்பப்பட்டிருப்பதாகவும், இனிமேல் அங்குதான் மாவீரர் நாள் உட்பட மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வுகள் அனைத்தும் இடம்பெறும் என்றும் அண்மைக் காலங்களாக சில தரப்பினரால் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புலம்பெயர் தேசம் ஒன்றில் மாவீரர்களுக்கான நினைவுத்தூபி அமைக்கப்படுவது வரவேற்கத்தக்க ஒன்று. அதனை யார், எங்கு நிறுவினாலும் அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

ஆனால் சார்சல் பகுதியில் அமைந்துள்ளதாக பரப்புரை செய்யப்படும் நினைவுத்தூபிக்கு எமது ஆசிரியர் பீடத்தில் இருந்து சென்றவர்களுக்கு அங்கு மிகப் பெரும் அதிர்ச்சிதான் காத்திருந்தது.

மாவீரர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபி அங்கு இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் பொறிக்கப்பட்டிருந்த வாசகங்கள் உண்மையில் அது மாவீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டதா? அல்லது சிறீலங்காவில் மடிந்த தமிழ் மதப் புனிதர்களுக்காக எழுப்பப்பட்ட மதத் தூபியா? என்ற கேள்வியையே எழுப்பியிருந்தன.

அதனை விட மேலும் பல ‘வரலாற்று மற்றும் தத்துவார்த்த ரீதியிலான தவறுகளைக் கொண்ட வாசகங்களும்’ அத்தூபியில் காணப்படுகின்றன.

மாவீரர் நாள் என்பது மேற்குலக நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்ட தடைகளை அடுத்து, சட்டத் தேவை கருதி தற்காலிகமாகத் தமிழீழ தேசிய நினைவெழுச்சி நாள் என்ற பெயரில் சிறிது காலத்திற்கு நடாத்தப்பட்டு வந்தது.

எனினும்,  மாவீரர் நாள் என்ற பெயரில் நினைவுகூரல் நிகழ்வுகளை நடாத்துவதில் எந்தச் சட்டச் சிக்கல்களும் இல்லை என்பது 2011 ஆம் ஆண்டில் உறுதியாகியதைத் தொடர்ந்து, தமிழீழ தேசிய நினைவெழுச்சி நாள் என்ற பெயர் கைவிடப்பட்டு இப்பொழுது தமிழீழ தேசிய மாவீரர் நாள் என்ற பெயரே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

ஆனால் சார்சல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குறித்த நினைவுத்தூபியில் ‘கார்த்திகை 27 தமிழீழ தேசிய நினைவெழுச்சி நாள்’ என்ற வாசகமே பொறிக்கப்பட்டுள்ளது. அதில் கார்த்திகை 27 மாவீரர் நாள் என்ற வாசகம் இல்லை.

தவிர, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதன்முதலாக வீரச்சாவைத் தழுவிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க மாவீரர் லெப். சங்கர் அவர்கள். அதாவது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் மாவீரராக லெப். சங்கர் திகழ்கின்றாரே தவிர, அவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதலாவது மாவீரர் அல்ல.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் மாவீரரான தியாகி பொன்.சிவகுமாரனின் பெயர், தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்களின் பட்டியலிலும் உள்ளது.

ஆனால் சார்சல் பகுதியில் உள்ள நினைவுத்தூபியிலோ, ‘தமிழீழ விடுதலைப் போரில் 27.11.1982 அன்று முதலாவது மாவீரனாக வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்டினன்ட் சங்கர்’ என பொறிக்கப்பட்டுள்ளது. இது ஒரு மிகப்பெரும் வரலாற்றுத் தவறாகும்.

அது மட்டுமன்றி முதற்புலி மாவீரன் லெப்.சங்கரின் படம் தூபியில் பொறிக்கப்பட்டிருந்தாலும், அதில் காணப்படும் வாசகங்கள் அது உண்மையில் லெப்.சங்கர் அவர்களுக்கும், ஏனைய மாவீரர்களுக்குமா அமைக்கப்பட்டது? என்று கேள்வியயழுப்பும் வகையில் காணப்படுகின்றது.

அந்த வாசகங்கள் இவைதான்: ‘தமிழீழ விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களையும், இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட அனைத்து தமிழீழ மக்களையும், தமிழீழ விடுதலைப் போரின் போது மனிதநேயச் செயற்பாட்டில் இருந்த வேளை படுகொலை செய்யப்பட்ட அனைத்து மனிதநேயப் பணியாளர்களையும் நினைவுகொள்ளும் முகமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நினைவுத் தூபி.’ என்பதாகும். 

அதாவது மாவீரர் நாள் என்பதும், மாவீரர்களுக்கான நினைவாலயங்கள் என்பதும் அவர்களுக்கானவை மட்டுமே. இனவழிப்பிற்கு ஆளாகிய மக்களுக்கும், மனிதநேயப் பணியாளர்களுக்குமான நினைவுத் தூபிகளும், நினைவு நாட்களும் பிரத்தியேகமானவை.

அப்படியிருக்கும் பொழுது மாவீரர்களுக்கான நினைவுத்தூபி என்று பொய்யுரைத்தவாறு, இவ்வாறான பொதுத் தூபி ஒன்றை உருவாக்கும் அவசியம் ஏன் ஏற்பட்டது? இவைதான் போகட்டும். ‘தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றிய போதிய வரலாற்று அறிவின்றி’ இத் தூபியை சம்பந்தப்பட்டவர்கள் அமைத்தார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

ஆனால் தூபியில் பிரெஞ்சு மொழியில் காணப்படும் வாசகங்கள் தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றியும், மாவீரர்கள் பற்றிய தவறான வியாக்கியானங்களை பிரெஞ்சு மக்கள் மேற்கொள்ளும் வகையில் உள்ளன.

முதலாவதாக மாவீரர்கள் என்ற தமிழ்ச் சொற்பதத்திற்கு நிகராக மார்ற்ரேர்ஸ் (Martyr) என்ற பிரெஞ்சு - ஆங்கிலச் சொல் தூபியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மார்ற்ரேர்ஸ் என்பது கிறித்துவ மதத்திலும், இஸ்லாமிய மதத்திலும் தமது மத நம்பிக்கைக்காகப் போராடி மடிந்த வீரர்களையும், புனிதர்களையும் குறிக்கும் சொல்.

உலகளாவிய ரீதியில் கடந்த காலங்களில் போராடி மடிந்த கிறித்துவ மற்றும் இஸ்லாமிய சுதந்திரப் போராளிகளை மார்ற்ரேர்ஸ் என்றுதான் அழைப்பார்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் மாவீரர்கள் என்ற தமிழ்ச் சொற்பதத்திற்கான நிகர்ச் சொல்லாக மார்ற்ரேர்ஸ் என்ற சொற்பதமே பிரெஞ்சு-ஆங்கில மொழிகளில் தவறாகக் கையாளப்பட்டது.

எனினும் இச்சொற்பதம் தவறானது என்று 1997ஆம் ஆண்டு ஏற்றுக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை, அன்று முதல் மாவீரர்கள் என்ற தமிழ்ச் சொற்பதத்திற்கான மேலைத்தேய நிகர்ச்சொல்லாக ஹீரோஸ் (Heros) என்ற சொற்பதத்தையே கையாண்டு வந்தது.

அதாவது 1997ஆம் ஆண்டிலிருந்து மார்ற்ரேர்ஸ் என்ற சொற்பதத்தை மாவீரர்கள் என்ற தமிழ்ச் சொற்பதத்திற்கான மேலைத்தேய நிகர்ச்சொல்லாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் கையாள்வதில்லை.

யதார்த்தம் இவ்விதமிருக்க, சார்சல் பகுதியில் உள்ள நினைவுத்தூபியில் உள்ள பிரெஞ்சு வாசங்கள், ‘சிறீலங்காவில் 27.11.1982 மடிந்த தமிழ் மதப் புனிதர்’ என்று பொருள்படும் வகையில் லெப்.சங்கர் அவர்களை விழிக்கின்றன.

அது மட்டுமன்றி தமிழில் இனப்படுகொலை என்று எழுதப்பட்ட வாசகத்திற்கு நிகராக ஜெனொசைட் என்ற பிரெஞ்சு - ஆங்கிலச் சொல் குறித்த தூபியின் பிரெஞ்சு வாசகப் பகுதியில் இல்லை.

ஆக, புலி மறவர்களுக்காக, புலி மாவீரர்களுக்காக சார்சல் பகுதியில் அமைக்கப்பட்டதாக பரப்புரை செய்யப்படும் நினைவுத்தூபியானது உண்மையில் யாரை நினைவுகூர அமைக்கப்பட்டுள்ளது என்ற கேள்வியைத் தமிழ் மக்களிடையே எழுப்புவதோடு, இத்தூபியானது சிறீலங்காவில் மடிந்த தமிழ் மதப் புனிதர்களுக்கானதுதான் என்ற தோற்றப்பாட்டை பிரெஞ்சு மக்களிடையே ஏற்படுத்தும் வகையிலேயே அதிலுள்ள பிரெஞ்சு வாசகங்கள் காணப்படுகின்றன.

இது மிகவும் ஆபத்தானது.

நன்றி: ஈழமுரசு

செய்திகள்