சிறையில் இருந்தபடி 6 டிப்ளமோ, ஒரு டிகிரி வாங்கிய ஆயுள் தண்டனை கைதி!

வியாழன் ஜூன் 07, 2018

கொலை வழக்கில் கைதாகி இரட்டை ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த கைதி ஒருவர், தொண்டையில் ஏற்பட்ட கேன்சரையும் குணப்படுத்தி, 6 டிப்ளமோ மற்றும் 1 டிகிரி படித்து முடித்தது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி, 10 வருடங்களுக்கு மேலாக தண்டனை பெற்று வரும் ஆயுள் தண்டனை கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் உத்தரவிட்டார்.

இதையடுத்து, முதற்கட்டமாக சுமார் 67 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட கைதிகளில் ஒருவரின் தன்னம்பிகை ஊட்டும் சுவாரஸ்யமான தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

1989-ம் ஆண்டு கொலை வழக்கில் கைதாகி இரட்டை ஆயுள் தண்டனை அளிக்கப்பட்ட கைதி சந்திரசேகரன். இவருக்கு சில ஆண்டுகள் முன்பு தொண்டையில் புற்று நோய் ஏற்பட்டது. இந்த புற்றுநோயை எதிர்த்து மன உறுதியுடன் போராடியுள்ளார் சந்திரசேகரன். 

சிறைத்துறை அதிகாரிகளின் உதவியுடனும் மருத்துவர்களின் உதவியுடனும், மன உறுதியுடனும் தனக்கு வந்த உயிர்க்கொல்லி நோயை கடந்து புதுவாழ்வு பெற்றார். அதன்பின்னர் சிறையில் இருந்தபடியே, கல்வியின் மீது தனது கவனத்தை செலுத்தினார்.

சிறையில் காலத்தை வீணாக்காமல், 50 வயதை கடந்த சந்திரசேகரன், 6 டிப்ளமோ படிப்புகளையும், ஒரு டிகிரியையும் படித்து முடித்து பட்டதாரியாக சுதந்திரம் பெற்றுள்ளார். இதுகுறித்து சந்திரசேகர் கூறும்போது, ‘சிறையில் எனது காலத்தை இனிமையானதாகவும், என்னை சுற்றி இருந்த பகுதிகளை சுவர்க்கம் போலவும் மாற்றிக்கொண்டேன்’ என கூறியுள்ளார்.

தற்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பை அடுத்து, சிறைத்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியருக்கு சந்திரசேகரனை பரிந்துரை செய்துள்ளனர். அவரது நன்னடத்தை மற்றும் உடல்நிலையை கருத்தில் கொள்ளுமாறு அளிக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்பட்டு, அவர் விடுதலை செய்யப்பட்டதாக சிறைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சந்திரசேகரன் மட்டுமன்றி, சிறையில் இருந்த பலரும் பட்டதாரிகளாக வெளிவந்துள்ளதாக கைதி ஒருவர் தெரிவித்துள்ளார். ஒரு நொடியில் உணர்ச்சிவசப்பட்டு செய்த தவறுக்கு பல வருடங்களாக சிறை தண்டனை பெற்ற கைதிகள் தற்போது மனம் திருந்தி, குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.

சிறையிலும் கல்வி கற்கும் இவர்கள், உலகின் பலதரப்பினருக்கும் உதாரணமாக திகழ்வர் என்பதில் ஐயமில்லை. அதேசமயம் சிறைவாசிகள் என்பதனால் மட்டுமே இவர்களுக்கு பணி வழங்க மறுக்கும் சில நிறுவனங்களும் தங்களின் கொள்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.