சீனத் தூதரகத்துக்கு சென்ற டிரம்ப் மகள்

வெள்ளி பெப்ரவரி 03, 2017

சீனப்புத்தாண்டை முன்னிட்டு அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப், சீனத் தூதரகத்திற்கு சென்று விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் பொறுப்பேற்ற நாள் முதல் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு உலகத்தையே கலங்க விட்டு வருகிறார். 7 முஸ்லீம் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு 90 நாள் தடை உத்தரவு மூலம் அனைத்து தரப்பினரின் எதிர்ப்புகளை எதிர்கொண்ட டிரம்பின் மகள் சீனத் தூதரகம் சென்று சீனப் புத்தாண்டை கொண்டாடியுள்ளார்.

35 வயதான  இவாங்கா டிரம்ப், தனது ஐந்து வயது மகள் ஆரபெல்லாவுடன் வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகத்தில்அமெரிக்காவின் சீனத் தூதுவர் டியான்காய்யுடன் கலந்து கொண்டுள்ளார். டிரம்பின் பேத்தி அரபெல்லா சீன மொழியில் பாடும் பாடல் வீடியோவை இவான்கா டிரம்ப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

உலகமெங்கும் வசிக்கும் சீனர்களால், ஜனவரி மாத இறுதியில் சீனப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. சில நாட்களுக்கு முன்னர் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தனது மனைவியுடன் புத்தாண்டை கொண்டாடிய புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.