சீனாவின் ராணுவ பலம் அதிரடியாக குறைப்பு!

யூலை 12, 2017

சீனா தனது ராணுவத்தில் சுமார் 13 லட்சம் வீரர்களை விடுவிக்க உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பழைய போர் முறைக்கு பதிலாக நவீன உத்திகளை பயன்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை என ராணுவம் தெரிவித்துள்ளது.

உலகிலேயே மிகப் பெரிய எண்ணிக்கையில் வீரர்களை கொண்ட ராணுவமாக சீன ராணுவம் விளங்கி வருகிறது. சீனாவில், தற்போதைய நிலவரப்படி 2.3 மில்லியன் ராணுவ வீரர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 

இந்நிலையில், சீன அரசு தனது ராணுவ பலத்தை ஒரு மில்லியனாக குறைக்க முடிவு செய்துள்ளது. அதாவது, 1.3 மில்லியன் வீரர்கள் (13 லட்சம்) விடுவிக்கப்பப்பட உள்ளனர். ராணுவத்தின் கப்பற்படை மற்றும் ஏவுகணை படைப்பிரிவுகளில் அதிகம் கவனம் செலுத்த உள்ளதாக சீன ராணுவ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக சீன ராணுவ பத்திரிகையின் வலைத்தளத்தில் கூறியுள்ளதாவது:

 

சீன ராணுவத்தில் தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறைகள் மிக பழைமையானவை. எனவே அவற்றை இன்றைய காலத்துக்கு ஏற்ப மாற்றி நவீன உத்திகளை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சீன ராணுவம் புது பரிமாற்றம் செய்யப்பட உள்ளது. ராணுவத்தில் அதிக அளவிலான வீரர்களை குறைப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த நடவடிக்கையால் சீன ராணுவம், தான் நிர்ணயித்து செயல்பட்டு வரும் இலக்குகளை விரைவில் அடைந்துவிடும். பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.  

கப்பற்படை, ராக்கெட் ஏவுகணைகள் உள்ளிட்ட படைப்பிரிவுகளை வலுப்படுத்தும் வகையில், நவீன உத்திகள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆனால் விமானப் படைப்பிரிவில் எந்த மாற்றமும் செய்யப் போவதில்லை என்பதால், அது வழக்கம்போல் செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சீன ராணுவத்தில் 3 லட்சம் வீரர்கள் குறைக்கப்படுவார்கள் என சீன பிரதமர் ஜி ஜின்பிங் 2015-ம் ஆண்டு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்திகள்