சீன அதிபரின் பதவி காலத்துக்கு இனி வரம்புகள் கிடையாது!

ஞாயிறு மார்ச் 11, 2018

சீனாவின் அதிபர் இரு முறைக்கு மேல் பதவியில் நீடிக்கக் கூடாது என்னும் வரம்பை தளர்த்தும் சட்டதிருத்தை ஆதரித்து 22,958 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று வாக்களித்தனர்.

கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெறும் சீனாவில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிக்கான தேர்தல்கள் நடைபெறுகின்றன. ஒருமுறை இந்த பதவியை வகித்தவர்கள் தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்தலில் போட்டியிடலாம்.

ஆனால், பத்தாண்டுகள் வரை ஆட்சி செய்து இரண்டாவது பதவிக் காலத்தை நிறைவு செய்தவர்கள் அடுத்து மூன்றாவது முறையாக தேர்தல்களில் போட்டியிட கூடாது என அந்நாட்டின் அரசியலமைப்பு சட்டம் தெளிவுப்படுத்துகிறது.

சீனாவின் அதிபராக தற்போது பதவி வகித்துவரும் ஜி ஜின்பிங் கடந்த 2013-ம் ஆண்டு சீனாவின் ஆளும்கட்சி தலைவராகவும், அந்நாட்டின் அதிபராகவும், முப்படைகளின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

சீனாவின் மிகவும் சக்தியும் செல்வாக்கும் நிறைந்த தலைவராக அந்நாட்டின் ஆளுங்கட்சி ஜி ஜின்பிங்-கின் பெயரை கடந்த 2016-ம் ஆண்டில் அறிவித்தது. தனது பதவிக்காலத்தில் முதல் ஐந்தாண்டுகளை விரைவில் நிறைவு செய்யும் ஜி ஜின்பிங் விரைவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார்.

இதற்கிடையில், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய தலைமை குழு மாநாடு கடந்த வாரம் நடைபெற்றது. இந்த மாநாட்டில், அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள ‘பத்தாண்டுகள் வரை ஆட்சி செய்து இரண்டாவது பதவிக் காலத்தை நிறைவு செய்தவர்கள் அடுத்து மூன்றாவது முறையாக அதிபர் மற்றும் துணை அதிபர் தேர்தல்களில் போட்டியிட கூடாது’ என்னும் நிபந்தனையை நீக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில், சீனாவின் அதிபர் இரு முறைக்கு மேல் பதவியில் நீடிக்கக் கூடாது என்னும் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யவுள்ள நிலையில் அந்நாட்டின் பாராளுமன்ற கூட்டம் கடந்த மூன்றாம் தேதி தொடங்கியது.

கட்சி மேலிடம் எடுத்த முடிவு தொடர்பாக சிலநாட்களாக பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று வந்தது. இதையடுத்து, அதிபர் மற்றும் துணை அதிபரின் பதவிக்காலத்து வரம்பு விதிக்கும் சட்டதிருத்தத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது.

இந்த வாக்கெடுப்பில், ஆளும்கட்சியின் முடிவுக்கு ஆதரவாக 22,958 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். இருவர் மட்டும் எதிர்த்து வாக்களித்தனர். மூன்று பேர் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவின் முதல் அரசியலமைப்பு சட்டம் கடந்த 1954-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தற்போதைய அரசியலமைப்பு சட்டம் கடந்த 1982-ம் ஆண்டில் இருந்து நடைமுறையில் இருந்து வருகிறது. 

கடந்த 1988, 1993, 1999 மற்றும் 2004-ம் ஆண்டுகளில் நான்கு முறை அந்நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், சீன அதிபர் மற்றும் துணை அதிபரின் பதவிக்காலத்துக்கு வரம்புகள் ஏதுமில்லை என்று இன்று செய்யப்பட்ட சட்டதிருத்தம் ஐந்தாவது திருத்தமாகும். 

இந்த புதிய முறையின் மூலம் வரும் 2022-ம் ஆண்டையும் கடந்து ‘அசைக்க முடியாத சக்தியாக’ தனது வாழ்நாள் முழுவதும் சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் தொடர்ந்து பதவியில் நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.