சீன ராணுவ உயர் அதிகாரி தற்கொலை!

Wednesday November 29, 2017

சீன ராணுவ உயர் அதிகாரி தற்கொலை செய்து கொண்டிருப்பது சீன ராணுவ வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீன ராணுவத்தின் மிக உயர்ந்த அதிகாரம் மிகுந்த அமைப்பு, மத்திய ராணுவ கமிஷன் ஆகும். இதன் தலைவர், சீன அதிபர் ஜின்பிங்.

இந்த அமைப்பின் உறுப்பினர் என்ற உயர்ந்த அந்தஸ்தை வகித்து வந்தவர், ஜாங் யாங் (வயது 66). இவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு விட்டதாக மத்திய ராணுவ கமிஷன் தகவலை மேற்கோள் காட்டி, அரசின் ஸின்குவா செய்தி நிறுவனம் கூறுகிறது.

இவர் மத்திய ராணுவ கமிஷனில் துணைத்தலைவர்களாக பணியாற்றி, ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக ஆளும் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து கடந்த ஆண்டு வெளியேற்றப்பட்ட குவா பாக்ஸியோங், ஸு சாய்ஹவ் ஆகியோருடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இவர்களில் குவாவுக்கு கடந்த ஆண்டு ஊழல் வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் ஸு சாய்ஹவ் புற்றுநோயால் மரணம் அடைந்து விட்டார் என தகவல்கள் கூறுகின்றன.

அவர்கள் இருவருடனும் ஜாங் யாங் தொடர்புகள் வைத்திருந்தார் என்பதற்காக அவர் மீது விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இப்போது திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது சீன ராணுவ வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.