சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களுடன் தகவல் பகிர்ந்து கொண்ட முகநூல்!

Wednesday June 06, 2018

கேம்ப்ர்டிஜ் அனாலிடிகாவை தொடர்ந்து சீன நிறுவனங்களுடன் தகவல்களை பகிர்ந்து கொண்ட விவகாரத்தில் ஃபேஸ்புக் புதிய பதில் அளித்துள்ளது.தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என அமெரிக்க புலனாய்வு நிறுவனங்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட சீன நிறுவனங்களுடன் வாடிக்கையாளர்கள் தகவல்களை பகிர்ந்து கொள்ள ஃபேஸ்புக் நிறுவனம் ஒப்பந்தம் போட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

"அமெரிக்காவில் இயங்கி வரும் மற்ற தொழில்நுட்ப நிறுவனங்களை போன்றே ஃபேஸ்புக் நிறுவனமும் சீன நிறுவனங்களுடன் இணைந்து தங்களது சேவைகளை சீன நிறுவன சாதனங்களில் இயங்க வைக்க ஒன்றிணைந்து பணியாற்றியது," என ஃபேஸ்புக் நிறுவனத்தின் மொபைல் ஒப்பந்தங்கள் பிரிவு தலைவர் ஃபிரான்சிஸ்கோ வரெலா வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஹூவாய் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தங்களின் படி வாடிக்கைாயளர்களின் தகவல்கள் ஹூவாய் சர்வர்களில் சேமிக்கப்படாமல், வாடிக்கையாளர் சாதனத்தில் தான் சேமிக்கப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். ஃபேஸ்புக் சார்பில் ஹூவாய் மட்டுமின்றி லெனோவோ, ஒப்போ மற்றும் டிசிஎல் போன்ற நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

பிளாக்பெரி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதை போன்ற உரிமையை மட்டுமே சீன நிறுவனங்களுக்கும் வழங்கியதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிளாக்பெரி மற்றும் ஃபேஸ்புக் இடையேயான ஒப்பந்தத்தில் ஃபேஸ்புக் பயனர்கள் மற்றும் அவர்களது நண்பர்களின் மதம், அரசியல் விருப்பம், பணி, கல்வி மற்றும் இதர விவரங்களை அறிந்து கொள்ள வழி செய்கிறது. 

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களது நண்பர்களின் தகவல்களை செல்போன் நிறுவனங்கள் முறைகேடாக பயன்படுத்தி வந்தது எங்களுக்கு தெரியாது என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் ஆப் சேவைகளின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், செல்போன் நிறுவனங்களுடனான இன்டர்ஃபேஸ் ஏற்பாடுகளை ஃபேஸ்புக் நிறுவனம் முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.
 
ஹூவாய் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்களிடையே வாடிக்கையாளர்களின் தகவல்களை பகிர்ந்து கொள்வது குறித்து 2010-ம் ஆண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின, இவற்றின் காலக்கெடு இந்த வார இறுதியில் நிறைவுறுகிறது. என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. மேலும் மற்ற சீன நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களும் நிறைவுற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹூவாய், லெனோவோ, ஒப்போ மற்றும் டிசிஎல் போன்ற சீன நிறுவனங்களுடன் ஃபேஸ்புக் டேட்டா பகிர்ந்து கொள்வது குறித்த ஒப்பந்தங்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்த வழி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வகை ஒப்பந்தங்களின் மூலம் 2007-ம் ஆண்டு முதல் ஃபேஸ்புக் தளத்தை மொபைலில் பயன்படுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் போடப்பட்டிருக்கின்றன.

சீன நிறுவனங்களுடன் ஃபேஸ்புக் சார்பில் போடப்பட்ட ஒப்பந்தங்களுக்கு அமெரிக்க சட்ட வல்லுநர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

"ஹூவாய் மற்றும் டிசிஎல் போன்ற நிறுவனங்களுடன் ஃபேஸ்புக் ஏபிஐ - அப்ளிகேஷன் ப்ரோகிராமிங் இன்டர்ஃபேஸ் தகவல்களை பகிர்ந்து கொண்ட விவகாரம் சட்ட ரீதியாக அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஃபேஸ்புக் தனது வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை சீன சர்வர்களுக்கு வழங்கவில்லை என்பதை எவ்வாறு விளக்கும் என அறிந்து கொள்ள விரும்புகிறேன்," என புலனாய்வு பிரிவு துணை தலைவர் மார்க் வார்னர் தெரிவித்துள்ளார்.

ஏபிஐ அல்லது அப்ளிகேஷன் ப்ரோகிராம் இன்டர்ஃபேஸ் என்பது மென்பொருள்களின் பாகங்கள் எவ்வாறு இயங்கும் என்பதை குறிக்கும். சீன நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் மிக கவனமாக கையாளப்பட்டதாக ஃபேஸ்புக் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சீன அரசுடனான தொடர்பு குறித்து ஹூவாய் பலமுறை மறுத்திருக்கிறது. மேலும், ஹூவாய் உள்கட்டமைப்புகள் மற்றும் கம்ப்யூட்டிங் சாதனங்கள் உலகம் முழுக்க 170 நாடுகளில் பயன்படுத்தப்படுவதாக ஹூவாய் நீண்ட காலமாக அறிவிக்கத்து வருகிறது.