சீமான்,சத்யராஜ் கவுரவ வேடத்தில் நடிக்கும் கடவுள் 2 !

செவ்வாய் சனவரி 01, 2019

கடவுள்’ படத்தை இயக்கிய வேலு பிரபாகரன் தற்போது ‘கடவுள்’ படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கிவரும் நிலையில், அதில் சீமான், சத்யராஜ் இருவரும் இணைந்து நடிக்கவிருக்கின்றனர்.

நாளைய மனிதன், அசுரன், ராஜாளி உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் வேலு பிரபாகரன். இவர் இயக்கி அருண்பாண்டியன், ரோஜா நடிப்பில் வெளியான கடவுள் படம் வெற்றி பெற்றதோடு தமிழ்நாடு அரசின் சிறந்த வசனகர்த்தா விருது வென்றது.

இந்த படத்தில் கடவுள் மனித அவதாரம் எடுப்பது போன்ற கதை இருந்தது. கடவுள் படத்தின் 2-ம் பாகத்தை வேலு பிரபாகரன், கடவுள் சினிமா டைரக்டர் அவதாரம் எடுத்து பூமிக்கு வருவது போன்ற கதை அமைத்து எடுத்து வருகிறார்.

அடிப்படையில் கடவுள் மறுப்பு கொள்கையுடைய வேலு பிரபாகரனிடம் கடவுள் பற்றிய படம் எடுப்பது பற்றி கேட்டபோது ‘கடவுள்களே மதங்களுக்கு எதிராக தோன்றியவர்கள் தான். அந்தந்த காலகட்டத்தில் இருந்த மதம் சார்ந்த மூட நம்பிக்கைகளுக்கு எதிராக தான் புத்தர், இயேசு, நபிகள் என கடவுள்கள் தோன்றினார்கள்.

இந்த படமும் அதுபோன்ற ஒரு அவதாரமாக தான் இருக்கும். என்னுடன் ஆர்.ஆர்.தமிழ்செல்வன், சுவாதி, இமான் அண்ணாச்சி, சீதா ஆகியோர் நடிக்கிறார்கள். சீமான், சத்யராஜ் இருவரும் கவுரவ வேடத்தில் நடிக்கிறார்கள். இளையராஜா இசையமைக்கிறார். ஜேகே.ஸ்டூடியோஸ் ஆர்.ஆர்.பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள்’ என்றார்.