சுங்கச் சாவடிகள் முற்றிலும் அகற்றப்பட வேண்டும் - தொல்.திருமாவளவன்

புதன் செப்டம்பர் 30, 2015

லாரி உரிமையாளர்களின் போராட்டத்திற்கு விசிக ஆதரவு சுங்கச் சாவடிகள் முற்றிலும் அகற்றப்பட வேண்டும்! இந்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்தல்
தொல்.திருமாவளவன் அறிக்கை


 சுங்கச்சாவடிகளில் வரி வசூலிப்பதைக் கண்டித்தும் அவ்வரிகளை முன்கூட்டியே பெற்றுக்கொள்ள உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென்று வலியுறுத்தியும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் நாடு தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அகில இந்திய மோட்டார் வாகன காங்கிரஸ் அறிவித்துள்ளது. 

 


குறைந்தபட்சம் 60கி.மீ. நீளமுள்ள சாலைகளுக்கு சுங்கம் வசூலிக்கப்படும் என்று வரையறுக்கப்பட்டாலும், நடைமுறையில் பெரும்பாலான சாலைகள் 60 கி.மீ நீளத்திற்கும் குறைவாகவே உள்ளது. சாலைகள் அமைப்பதற்கான தொகையினை ஈடு செய்தபின் சுங்கவரி வசூல் நிறுத்தப்பட வேண்டும் என்ற விதிமுறைகளைக் கடைபிடிக்கப்படாமல் இருப்பதை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் வலைத்தளம் உறுதி செய்கிறது. ஏறத்தாழ 60 சுங்கச்சாவடிகளில் சாலைகளின் கட்டமைப்பின் தொகையான ரூ.13,476.72 கோடி வசூலிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன பின்னரும் ஆண்டுக்கு ரூ.21,897.36 கோடி சுங்கவரி தொடர்ந்து வசூலிக்கப்பட்டு வருகிறது.

 


சுங்கவரி வசூல் கணக்குகள் வெளிப்படையாக இல்லை என்பதை மத்திய தணிக்கைக் குழு, உலக வங்கி ஒருங்கிணைப்புக் குழு, பலவேறு மக்கள் நல அமைப்புகள் மற்றும் பொதுமக்களும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். அத்துடன், நெடுஞ்சாலை ஆணையத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளால் ஊழல்கள் நடைபெற்றுள்ளது.  அது தொடர்பாக பல்வேறு வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது.

 


சுங்கச்சாவடிகளில் லாரிகளை நிறுத்தி சுங்கவரி வசூல் செய்வதால் பெரும் போக்குவரத்து பாதிப்பும், நெரிசலும் ஏற்படுகிறது. சரக்கு வாகன பயண நேரம் அதிகமாகிறது. இதனால் ஏற்படும் கூடுதல் விலையேற்ற பணச்சுமை மக்கள் தலையில் விழுகிறது. ஆண்டொன்றுக்கு சுங்கவரி வசூல் ரூ.15,000 கோடியாகும். ஆனால், வாகனங்கள் சுங்கச் சாவடிகளில் நீண்டநேரம் நின்று செல்லுவதால் ஏற்படும் விலையேற்ற பணச்சுமை ஒரு இலட்சம் கோடியாகும் என்று கோல்கத்தா ஐஐஎம்மும் (மிமிவி) இந்திய போக்குவரத்துக் கழகமும் நடத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.   

 


லாரிகளின் வேலைநிறுத்தத்தால் உரிமையாளர்களின் நலன் பாதிக்கப்படுகிறது என்றாலும், முன்கூட்டியே சுங்கவரி வசூல் செய்வது என்னும் அவர்களது கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டால் பொதுமக்கள் மீது விழும் பணச்சுமையும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தால் ஏற்படும் 1,700 கோடி ரூபாய் வருவாய் இழப்பு தவிர்க்கப்படும். அத்துடன், அன்றாடம் சுங்கச் சாவடிகளில் நீண்ட நெடும் வரிசையில் வாகனங்கள் நிற்பதும் தவிர்க்கப்பட்டு மக்களின் பயண வசதி மேம்பாடு அடையும் என்று அகில இந்திய மோட்டார் வாகன காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

 


இந்தியா முழுவதுமுள்ள சுங்கச்சாவடிகளை முறைப்படுத்த வேண்டும், முன்கூட்டியே சுங்கவரிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் போன்ற கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெறும் அகில இந்திய மோட்டார் வாகன காங்கிரஸ் போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவிக்கிறது.

 


தமிழ்நாட்டில் சுமார் ஐந்தாயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கான சாலைகள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நெடுஞ்சாலைத் துறைகளால் பராமரிக்கப்படுகின்றன. அதில் சுங்கக் கட்டண வசூலுக்கென 41 மையங்கள் அமைக்கப்பட்டு தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவர்கள் தமது விருப்பம்போல அவ்வப்போது சுங்கக் கட்டணத்தை உயர்த்தி வருகிறார்கள். இந்தக் கொள்ளையின் காரணமாக பேருந்துக் கட்டணங்கள் உயர்வது மட்டுமின்றி சரக்குக் கட்டணம் உயர்ந்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்கிறது. 

 


அரசு தனியார் கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் போடப்படும் சாலைகளின் செலவுக்காகத்தான் கட்டணம் வசூலிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. அந்தச் செலவை ஈடுகட்ட எத்தனை ஆண்டுகளுக்குக் கட்டணம் வசூல் செய்வார்கள் என்பதை அரசாங்கம் சொல்வது இல்லை.  இது முழுக்க முழுக்க தனியாரின் கொள்ளைக்கு வழிவகுப்பதாகவே உள்ளது.
எந்தவொரு வாகனத்தைப் பதிவுசெய்வதென்றாலும் வாகனத்தின் விலையில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு சாலை வரியாக மொத்தமாக வசூலிக்கப்படுகிறது.

 

அதே வாகனத்துக்கு மீண்டும் சாலையில் கட்டணம் வசூலிப்பது சட்டவிரோதமானதாகும். தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் நடைபெறும் சுங்கக் கட்டணக் கொள்ளைக்கு உடனடியாக தமிழக அரசு முடிவுகட்டவேண்டுமென்றும், இந்தியா முழுவதுள்ள சுங்கச்சாவடிகளை மைய அரசு முற்றிலும் அகற்றிடவேண்டுமென்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.