சுதந்திரத்துக்கான தரப்படுத்தலில் இலங்கையின் இடம் என்ன?

வியாழன் ஏப்ரல் 21, 2016

உலக ஊடக சுதந்திர தரவரிசைப் பட்டியலில் ஸ்ரீலங்கா 141 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எப் எனப்படும் சுதந்திர ஊடகவியலாளர் அமைப்பினால் வெளியிடப்பட்ட 2016 ஆம் ஆண்டிற்கான உலக ஊடக சுதந்திர பட்டியலில் இந்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வருடத்திற்கான ஊடக சுதந்திர தரவரிசைப் பட்டியலில் 180 நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டன. இந்த தரவரிசையில் பின்லாந்து முதலாவது இடத்தில் உள்ளதுடன், நெதர்லாந்து, நோர்வே ஆகிய நாடுகளும் ஊடக சுதந்திர பட்டியலில் உள்ளடக்கப்பட்ட நாடுகளாக காணப்படுகின்றன.

இந்த வருடத்திற்கான ஆய்வின் படி ஸ்ரீலங்கா 141 ஆவது இடத்தில் உள்ளதுடன், கடந்த இரண்டு வருடங்களாக ஸ்ரீலங்கா 165 ஆவது இடத்தில் இருந்தது. எனினும், தெற்காசிய நாடுகளான இந்தியா 133 ஆவது இடத்தையும், ஆப்கானிஸ்தான் 120 ஆவது இடத்திலும் உள்ளதுடன், நேபாளம் 105 ஆவது இடத்தை வகிப்பதுடன், பூட்டான் 95 ஆவது இடத்தைப் பெற்று ஸ்ரீலங்காவை விட முன்னிலையில் உள்ளன.

இதேவேளை, அமெரிக்கா 44 ஆவது இடத்தையும், ரஸ்யா 148 ஆவது இடத்தையும், சீனா 176 ஆவது இடத்திலும் உள்ளது. எவ்வாறாயினும், துர்க்மெனிஸ்தான், வடகொரியா, எரித்ரியா ஆகிய நாடுகள் கடைசி மூன்று இடங்களை வகிக்கின்றமை ஆர்.எஸ்.எவ் எனப்படும் சுதந்திர ஊடகவியலாளர் அமைப்பினால் வெளியிடப்பட்ட 2016 ஆம் ஆண்டிற்கான உலக ஊடக சுதந்திர பட்டியல் மூலம் அறிய முடிகின்றது.