சுயநல கோரிக்கைகளுக்கு அரசாங்கம் வளைந்து கொடுக்காதாம்!

வெள்ளி ஓகஸ்ட் 10, 2018

புகையிரத தொழிற்சங்கங்கள் போராட்டங்களை முன்னெடுக்கின்றார்கள் என்பதனால் அவர்களது சுயநல கோரிக்கைகளுக்கு அரசாங்கம் வளைந்து கொடுக்காது என தெரிவித்த போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபேசிங்க, தீர்வு காணும் வரை பொது மக்கள் மாற்று வழிமுறைகளை பயன்படுத்துமாறும் கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

புகையிரத தொழிற்சங்கத்தினரது கோரிக்கைகள் உள்ளடங்கிய அமைச்சரவைப் பத்திரம் தற்காலிகமாகவே  நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று  நாட்டில்   மக்கள் பாரிய  பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.  பலர் தொழில்வாய்ப்புக்கள் இல்லாமல் காணப்படும் பட்சத்தில்  புகையிரத தொழிற்சங்கத்தினர் மனிதாபிமானமற்ற முறையில் சம்பள அதிகரிப்பு தொடர்பில் போராட்டங்களை முன்னெடுத்து பொதுமக்களை  அசெளகரியப்படுத்துவது  அரசாங்கம் வழங்கியுள்ள பேச்சு சுதந்திரத்திற்கு முரணானதாகும்.

நிதியமைச்சு போராட்டங்களை கைவிட்டு விட்டு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள குறித்த தொழிற்சங்கங்களுக்கு  அழைப்பு விடுத்தது. ஆனால் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் அழைப்பினை நிராகரித்து பேச்சுவாரத்தைகள் இல்லாத தீர்வையே  கோருகின்றனர். 

அரசாங்கம் போராட்டங்களை விரைவில் முடிவிற்க கொண்டு வரவில்லை என்று பொதுமக்கள் கருதி அரசாங்கத்திற்கு எதிராக  செயற்பட கூடாது. ஏனெனில் புகையிரத தொழிற்சங்கத்தினரது கோரிக்கை  நியாயமற்ற ஒரு விடயம். இவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டால் அது பொதுமக்களின் மீதே தாக்கம் செலுத்தும்.  எனவே வெகுவிரைவில் அனைத்து  அரச ஊழியர்களின் மாதந்த கொடுப்பனவுகளிலும் மாற்றம் கொண்டுவரப்படும் என்றார்.