சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத வகையில் புத்தாண்டை கொண்டாடிய சீனா!

Monday January 01, 2018

புத்தாண்டு கொண்டாட்டம் என்றாலே வாணவேடிக்கையும், வெடிச் சத்தமும்தான் என்ற பாரம்பரியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சீனா உள்ளிட்ட சில நாடுகள் சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத வகையில் புத்தாண்டை வரவேற்றன.

பூமிப் பந்தின் கிழக்கு திசையின் கடைக்கோடியில் ஆஸ்திரேலியா, ஓசியானியா கண்டத்தில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து நாடு உலகில் முதன்முதலாக சூரியன் உதிக்கும் முதல் நாடாக உள்ளது. இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையில் உள்ள நேர வித்தியாசம் நம்மைவிட ஏழரை மணிநேரம் கூடுதலாகும்.

இந்நிலையில், (இந்திய நேரப்படி நேற்று மாலை 4.30 மணியளவில்) நியூசிலாந்தில் நள்ளிரவு 12 மணி ஆனவுடன் அந்நாட்டு மக்கள் ஆட்டம், பாட்டம், வானவேடிக்கை என கோலாகலமாக புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர். கண்ணை கவரும் வகையில் நடைபெற்ற வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது.

இதேபோல், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், ஹாங்காங் போன்ற பல நாடுகளின் அரசுகள் அதிகாரபூர்வமாக நடத்திய புத்தாண்டு கொண்டாட்ட விழாக்களில் வண்ணமயமான வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் களைகட்டின.

இதற்கு மாறாக,  புத்தாண்டு கொண்டாட்டம் என்றாலே வாணவேடிக்கையும், வெடிச் சத்தமும்தான் என்ற பாரம்பரியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சுற்றுச்சூழலுக்கு மாசில்லா வகையில் மெய்சிலிர்க்கும் லேசர் காட்சிகள் மூலம் சீன மக்கள் புத்தாண்டை வரவேற்றனர். துபாய் நகரில் புர்ஜ் கலிபா பல்லடுக்கு வளாகமும் புத்தாண்டையொட்டி லேசர் ஒளி வெள்ளத்தில் பல வண்ணங்களில் மிளிர்ந்தது.